Last Updated : 20 Oct, 2014 03:51 PM

 

Published : 20 Oct 2014 03:51 PM
Last Updated : 20 Oct 2014 03:51 PM

இணையத்தில் குவியும் சினிமா விமர்சனங்கள்: என்ன நினைக்கிறார் கமல்?

இணையதளத்தில் வரும் விமர்சனங்களுக்கு தடை போட முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல வார இதழில் தமிழ் திரையுலகினர் கேட்கும் கேள்விகளுக்கு கமல் பதிலளித்து வருகிறார். அதில் நடிகர் விவேக் கேட்ட கேள்வி:

"சமூக வலைத்தளங்களில் படம் நன்றாக இல்லை என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். இதனால் படத்திற்கு வரவேண்டியவர்களையும் தடுத்து விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் கமென்ட்களில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புகிறார்கள். இது சரியா.. இதற்கு அரசாங்கம் சென்சார் கொண்டு வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கமல், "இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும், அண்ணன் ஜேசுதாஸும் ஒரே நாளில் இறந்துபோன வதந்தி எங்கள் காதுக்கே எட்டியது. சிரித்தபடி, பரஸ்பரம் இரங்கல் தெரிவித்துக் கொண்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன.

விமர்சனத்துக்கு வரம்போ, தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணை கோடிட்டுக் காட்டி விடுவான். இன்டர்நெட் விமர்சகனுக்குத் தடை போடுவது, பெண்ணுக்குத் தாலி கட்டுவது அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நம் கலையும், திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலாக் கருத்து" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x