Last Updated : 22 Jan, 2017 05:29 PM

 

Published : 22 Jan 2017 05:29 PM
Last Updated : 22 Jan 2017 05:29 PM

ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன்

ஆம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கி தான் என்று ஒளிப்பதிவாளர் இணையதளத் தொடங்க விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துக்கான புதிய இணையதளம் தொடங்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் பி.சி.ஸ்ரீராம், செயலாளர் பி.கண்ணன், பொருளாளர் ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட நிர்வாகிகளோடு பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த இணையதள துவக்கவிழாவில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இணையத்தை துவக்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "நடனம், மேக்கப் மட்டுமன்றி ஒளிப்பதிவாளராகவும் ஆகியிருப்பேன். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டேன். ஆக, எல்லாமே எனக்கு பயன்பட்டது. 'வீரமாண்டி'யில் வரும் மீசையெல்லாம் நானே வைத்துக் கொண்டது.

சினிமாவில் எல்லா கலையுமே முக்கியமானது. கற்பனையும் ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும்.

ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய ஒளிப்பதிவாளர்களிடம் பாடம் கற்றிருக்கிறேன். என்னை விட வயது குறைந்தவர்களிடம் கூட வியந்து பாடம் கற்றுள்ளேன். குழந்தையில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

யாரோ ஒருவர் தமிழ் பொறுக்கிகள் என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கே பொறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், டெல்லிக்கு எல்லாம் சென்று நான் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறார் என நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல, தன்மானம்.

சினிமாவில் நான் நடிக்க ஆசைப்பட்டதில்லை. தொழில்நுட்ப கலைஞராகவே வர விரும்பினேன். நான் பொறியாளராகவோ, கலெக்டராகவோ இருந்திருந்தால் இன்று அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நின்றிருந்திருப்பேன். அதெல்லாம் எனக்கு சந்தோஷம் இல்லை. ஆனால், உங்கள் இணையத்தை துவங்கி வைக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த இணையதளம் தமிழிலும் இருக்கிறது. காரணம், ஒளிப்பதிவு சம்பந்தமான தொழில்நுட்பங்களை எளிமை படுத்துவதற்கு தான். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி கிடையாது. மொழியை கடந்து நிற்கும் இடம் சினிமா" என்று பேசினார் கமல்ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x