Published : 25 Sep 2016 10:44 AM
Last Updated : 25 Sep 2016 10:44 AM

ஆண்டவன் கட்டளை - திரை விமர்சனம்

கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அருகே யுள்ள கிராமத்திலிருந்து நண்பன் பாண்டியுடன் (யோகி பாபு) சென்னைக்கு வருகிறார் காந்தி (விஜய் சேதுபதி). சுற்றுலா விசாவில் லண்டனுக்குப் போய், அங்கே வேறு அடையாளத்துடன் ஒளிந்து வாழ்ந்து, பொருளீட்டி ஊர் திரும்புவதுதான் இவர்கள் நோக்கம்.

பாஸ்போர்ட் எடுப்பதற்காகப் போலி முகவரின் பேச்சைக் கேட்டுப் பல தகிடுதத்தங்கள் செய்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தும் விசா கிடைக்காத காந்திக்கு, லண்டன் செல்ல வேறொரு வாய்ப்பு வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் ஒரு பொய்யான தகவலை நீக்கினால்தான் விசா கிடைக்கும். அந்தப் பெயரை நீக்க மேலும் குறுக்கு வழிகள், பொய்கள் என்று தொடர்கிறது. இது எங்கே கொண்டுசெல்கிறது என்பதுதான் கதை.

அருள்செழியனின் கதை. அவரும் இயக்குநர் மணிகண்டன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். சாமானிய மனிதர்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்சினை இயல்பான நகைச் சுவையுடன் கச்சிதமாகச் சித்தரிக் கப்படுகிறது. குறுக்கு வழிகளின் இயல்பே மோசடிகளின் மீளாச் சுழலின் சிக்கவைப்பதுதான் என்பதைத் தெளிவாகக் காட்டு கிறது திரைக்கதை. இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை, சென்னையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் அவலம், குடும்ப நல நீதிமன்றச் சூழலின் யதார்த்தங்கள் ஆகியவையும் கதைப் போக்கினுள் இயல்பாகக் கலந்துவிடுகின்றன.

திருமணமாகாத ஒருவன் திருமணம் ஆனதாகப் பொய் சொல்வதற்காகக் கார்மேகக் குழலி என்னும் பெயரைப் பயன் படுத்துகிறான். அதே பெயரில் ஒரு பெண்ணை அவன் சந் திக்க நேர்கிறது. அவள் இவன் பிரச்சினைக்கு உதவுகிறாள். தற்செயல் நிகழ்வுகள் மூலமா கவே படத்தின் திருப்பங் களையும் சிக்கல்களையும் கையாளும் தமிழ் சினிமாவுக்கு இது புதிது அல்ல. ஆனால், மணிகண்டன் இதைக் கையா ளும் விதத்தில் ஓரளவேனும் நம்பகத்தன்மையை உருவாக்கு கிறார். இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள், ஒருவரை ஒருவர் பாதிக்கும் திருப்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் யதார்த்தமாகச் சித்தரிக்கிறார்.

இறுக்கமான காட்சிகள் இல் லாமலேயே படம் கதைமாந்தர் களின் வலியைச் சொல்லிவிடு கிறது. ஒரு மிதிவண்டியில் நண் பனை வைத்து மிதித்துக் கொண்டு வரும் அறிமுகக் காட்சியே காந்தியின் சமூக, பொருளாதார அந்தஸ்தைக் காட்டப் போதுமானதாக இருக் கிறது. குடிபெயர்வு அதிகாரியின் விசாரணைக் காட்சி அதற் குரிய தோரணையுடன் படமாக் கப்பட்டிருக்கிறது.

போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைதான் படத்தின் மையம். கார்மேகக் குழலி என் னும் பெயரால் ஏற்படும் நெருக் கடிகளே இதைக் காட்டப் போது மானவை. அப்படி இருக்க, முதல் பகுதியில் விசா முயற்சிகளையும் விஜய், யோகி பாபுவின் பிரச் சினைகளையும் அத்தனை விரி வாகக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யோகி பாபுவை நடுவில் அம்போ என்று விட்டிருக்க வேண்டியதும் இல்லை. கிளைமாக்ஸ் நெருங் கும்போது படம் தேவையின்றி நீள்கிறது. உணர்த்தப்படும் விஷயங்கள் வசனங்களாகவும் திரும்பச் சொல்லப்படுகின்றன.

விஜய் சேதுபதி வழக்கம் போல மிக இயல்பாக அடக்கி வாசித்திருக்கிறார். விசா மறுக் கும் அதிகாரியிடம் கெஞ்சும் காட்சி, குடிபெயர்வுத் துறை புலனாய்வு அதிகாரியிடம் பாண் டியைப் பற்றிப் பதைபதைப்புடன் விசாரிப்பது, ரித்திகாவிடம் காதலைச் சொல்வது எனப் பல இடங்களிலும் முத்திரை பதிக்கிறார்.

ரித்திகா சிங், துணிச்சலும் தன்னம்பிக்கையுமான பெண்ணை அனாயாசமாகப் பிரதிபலிக்கிறார். பத்திரிகை யாளர் சந்திப்பில் எதிர்ப்பை எதிர் கொள்ளும் விதம், உதவி செய் யப்போய் மாட்டிக்கொள்ளும் போது படும் சங்கடம், கடைசிக் காட்சியில் வெட்கம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்று பல இடங்களில் தேர்ந்த நடிகைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.

யோகி பாபுவின் உருவத்தை வைத்துச் செய்யப்படும் மலின மான நகைச்சுவையைப் பார்த்து வெறுத்தவர்களுக்கு இந்தப் படம் பெரிய ஆறுதல். நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தக் கிடைத் திருக்கும் வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். இலங்கைத் தமிழராக வரும் அரவிந்தனின் நடிப்பும் மனதில் நிற்கிறது. வழக்கறிஞர் ஜார்ஜும், அவரது உதவியாளர் விநோதினியும் நீதிமன்றக் காட்சி களைக் கலகலக்க வைக்கிறார் கள். சில காட்சிகளில் மட்டுமே வரும் நாசர் அந்த எல்லைக்குள் ளாகவே தன் நடிப்பு ஆகிரு தியைக் காட்டிவிடுகிறார். பூஜா தேவரியாவுக்குப் போதிய வாய்ப்பு இல்லை.

ஒன்பது பாடல்கள் இருந் தாலும் எதுவுமே திரைக்கதை யைப் பாதிக்காமல் கதைப் போக்குடன் கலந்துவிடுகின்றன. ‘கே’யின் பின்னணி இசை பொருத்தம். பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன.

கை அழுக்காக இருக்கிறதே என்று கொள்ளிக்கட்டையால் மூக்கைச் சொறிந்துகொள்ளக் கூடாது என்பதைப் பிரச்சாரத் தொனி இல்லாமல் சொல்லி யிருக்கிறது படம். காட்சிகளைப் பெருமளவில் யதார்த்தமாக நகர்த்திச் சென்று ‘செய்தி’யை அனுபவமாக மாற்றுகிறார் இயக் குநர். கனமான அனுபவங் களையும் நீர்த்துப்போகாமல் இலகுவாகச் சொல்ல முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார். கதைப் போக்கு, வசனங்கள், பாத்திர வார்ப்புகள், நடிகர்களின் தேர்வு, திறமையான நடிப்பு, இசை என்று பல்வேறு அம்சங் களால் ‘ஆண்டவன் கட்டளை’ நம் மனதில் தங்கிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x