Published : 18 Jun 2018 06:15 PM
Last Updated : 18 Jun 2018 06:15 PM

‘பிக் பாஸ் 2’ குளறுபடிகள்

‘பிக் பாஸ் 2’ வீட்டில் சில குளறுபடிகள் நடந்துள்ளது நம் கவனத்துக்கு வந்துள்ளது.

தமிழக மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், ஓவியா விருந்தினராக ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளார். யாஷிகா ஆனந்த், அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம், மும்தாஜ், மமதா சாரி, ஜனனி, வைஷ்ணவி, மஹத், பாலாஜி, நித்யா, டேனியல், சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, என்.எஸ்.கே.ரம்யா, ரித்விகா, ஷாரிக் ஹாசன் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் புரமோஷன் வீடியோ, கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 15 பிரபலங்கள் என்று சொன்னார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 2’ லேட்டஸ்ட் புரமோ

ஆனால், நேற்று 16 பேர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதுமட்டுமல்ல, 60 கேமராக்கள் என்று இவர்கள் சொல்வதிலும் தகிடுதத்தம் இருக்கிறது. 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய 60 கேமராக்களுடன் இணைந்து, எக்ஸ்ட்ராவாக 10 கேமராக்கள் ஸ்டாண்ட்பை-யாக (standby) பொருத்தப்பட்டுள்ளன.

நேற்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், ‘நீங்கள் விருந்தினர் என ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் இருப்பவர்களுக்குத் தெரியாது. உங்களையும் சக போட்டியாளர்களாகத்தான் கருதுவார்கள். உங்களின் பலம் (ரசிகர்கள்) என்னவென்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்களைப் பயமுறுத்துங்கள்’ என ஓவியாவிடம் சொல்கிறார் கமல்ஹாசன்.

அதன்படி ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் நுழையும் ஓவியா, கையில் சூட்கேஸுடன் செல்கிறார். அதற்கு முன்னர் சென்ற 16 போட்டியாளர்களும், கையில் சூட்கேஸ் இல்லாமல்தான் சென்றனர். அவர்களுடைய சூட்கேஸ், ஸ்டோர் ரூமில் வைக்கப்படும். அங்கிருந்துதான் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் முதல் சீஸனிலும் நடைபெற்றது.

அப்படியிருக்கும்போது, ஓவியா கையுடன் சூட்கேஸ் எடுத்து வருவதைப் பார்க்கும் போட்டியாளர்கள், அவர் விருந்தினராகத்தான் வருகிறார், போட்டியாளராக அல்ல என்று நினைக்க மாட்டார்களா? அல்லது அப்படி நினைக்காத அளவுக்கு அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என நினைத்துவிட்டார்களா? என்று தெரியவில்லை.

கடந்த சீஸனில், முதல் நாளின்போது 15 பேர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் சென்றனர். அவர்கள் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் 14 நாற்காலிகள் போடப்பட்டன. ஒருவர் தாமதமாகவோ அல்லது முன்பாகவோ சாப்பிட்டால் கூட, மற்ற 14 பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.

ஆனால், இந்த முறை 16 பேர் + ஓவியாவுடன் சேர்த்து 17 பேர் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். ஆனால், அவர்கள் சாப்பிட டைனிங் டேபிளில் 10 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. எல்லாருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அப்படியிருக்கும்போது, இந்த டைனிங் டேபிள் செட்டப், போட்டியாளர்களைத் திட்டமிட்டு பிரிப்பதாகவே கருதப்படுகிறது.

முதல்நாளில் இருந்தே பங்கேற்கும் போட்டியாளர்கள் மட்டுமின்றி, சிலபல நாட்கள் கழித்தும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். அப்படி இடையில் அனுப்பப்படுபவர்கள் தங்கள் டாஸ்க்கை சிறப்பாகச் செய்தாலும், அவர்களால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது. அப்படியே பங்கேற்றாலும், அவர்களால் வெற்றிபெற முடியாது.

காரணம், நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே இருப்பவர்கள் அதிருப்திக்கு ஆளாவார்கள். இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாவிட்டாலும், இடையில் செல்பவர்களும் ‘பிக் பாஸ்’ சொல்லும் அத்தனை டாஸ்க்குகளையும் செய்ய வேண்டும். வெற்றிபெற முடியாது என்று தெரிந்தும், அவர்களை டாஸ்க்கில் ஈடுபடுத்துவது ஏன்? அப்படி இடையில் சில போட்டியாளர்களை உள்ளே அனுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? என்பன உள்ளிட்ட குளறுபடிகளின் நீட்சியாக கேள்விகள் எழுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x