Last Updated : 13 Jun, 2018 03:55 PM

 

Published : 13 Jun 2018 03:55 PM
Last Updated : 13 Jun 2018 03:55 PM

வாய் தவறி ரஜினியை டேய்னு கூப்பிட்டுட்டேன்!- காலாவின் மூத்த பேரன் மிதுன் கலகல பேட்டி

வழக்கமாக அதிரடியாக அறிமுகமாகும் ரஜினிகாந்த், 'காலா' படத்தில் ரொம்ப கூலாக சின்னப்பசங்களுடன் கிரிக்கெட் ஆடுவது போல அறிமுகமாவார். அப்போது, ”இதப்பாரு காலா... லாஸ்ட் பால்... ரெண்டு ரன் அடிக்கணும். நீ சும்மா தொட்டுவிடு நான் ஓடிவந்திடுறேன்” என்று சொல்லி ரஜினியை அறிமுகப்படுத்தி வைப்பவர் வெறும் 13 வயதே ஆன மிதுன். ஸ்கூலுக்கு கூட போகாமல், நடிப்புப் பயிற்சியில் தீவிரமாக இருக்கும் அவருடன் ஒரு மினி பேட்டி...

முதல்ல, ரஜினியோடு நடிச்ச அனுபவத்தைச் சொல்லுங்க...

ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சி. சின்னப்பசங்க எல்லாருக்கும் ரஜினி சார் சாக்லேட் கொடுத்தார். அவர் சாப்பிடுற நிலக்கடலையில இருந்தும் ஒரு பங்கு கொடுத்தார். சூட்டிங் ஆரம்பிச்சதும், ஓப்பனிங் வசனம் பேசச் சொன்னாங்க. "உன்னோட ஃபிரண்ட் மாதிரி நினைச்சுக்கிட்டு ரஜினிகிட்ட கேசுவலா பேசு”ன்னு சொன்னாங்க. “டேய் காலா, லாஸ்ட் பால்...னு ஆரம்பிச்சேன்.

'கட்’ சொல்லி, "ஏய் அவரு உனக்கு தாத்தாப்பா" என்றார்கள். அடுத்த டேக்ல, "ஏய் காலா" என்று பேசிட்டேன். அடுத்து ரஞ்சித் சார் வந்து, "இதப்பாரு காலான்னு பேசுப்பா"ன்னு சொன்னாரு. அப்புறம்தான் சரியா டயலாக் பேசுனேன். அந்தக் காட்சி சென்னையில் போட்ட செட்லதான் படமாச்சி. மொட்டை வெயில். ஆனாலும், ரஜினி சார் செம கூலா இருந்தாரு. நான் தப்பா வசனம் பேசுனப்ப கூட சிரிச்சாரு.

 

இந்த வாய்ப்பு கிடைத்ததைப் பத்தி...
 சென்னை வியாசர்பாடிதான் அப்பா ராஜ்குமாரோட பூர்வீகம். அவர் ஐடி துறையில் (சிடிஎஸ்) வேலை பார்க்கிறதால, வேலை நிமித்தமா வேப்பேரியில் குடியிருக்கோம். அம்மா பேரு சுரேகா. நடிப்பும், மியூசிக்கும்தான் என்னோட எதிர்காலம்னு தீர்மானிச்சிட்டதால, ஸ்கூலுக்குப் போகாம ஹோம் ஸ்டடி தான் (8ம் வகுப்பு) பண்றேன்.

'அக்களம்' என்ற நாடக பட்டறையில் 3 வருஷமா பயிற்சி எடுக்கிறேன். அதை நடத்தும் மாஸ்டர் செந்திலும், ‘காலா’வில் நடிச்சிருக்கார். (ஓப்பனிங் சீனில், ஒரு பெண்ணோட வயிற்றில் எட்டிமிதித்துவிட்டு, ரஜினியையும் அடிக்க கை ஓங்குவாரே, அவர்).

'காலா' படத்துக்கு சிறுவர்கள் கதாபாரத்திரத்துக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதாக தகவல் கிடைத்ததும் போனேன். அவங்க சொன்னபடி நடிச்சிக் காட்டுனேன்.

சொந்தமா ஏதாவது பண்ணிக்காட்டுன்னு சொன்னப்ப, "ஏன்டா வெள்ளைப் பண்ணி. எந்த வேலையும் செய்யாம, தகுதியான படிப்பும் இல்லாம... உங்கப்பா பணக்காரன்கிற ஒரே காரணத்துனால நோகாம..." என்று விஐபி படத்துல நீளமான வசனம் வருமில்லையா? அதைப் பேசிக் காட்டுனேன். செலக்ட் ஆகிட்டேன். நான் தனுஷ் ரசிகன். அப்புறம்தான் தெரிஞ்சுது படத்தோட தயாரிப்பாளரும் தனுஷ்தான்னு. 

 

மற்ற நடிகர்களின் அணுகுமுறை எப்படியிருந்தது?

ரஜினியோடு மொத்தம் 45 நாள் சூட்டிங்கிலும் கூடவே இருந்தேன். அவர் நடிக்கிறதையே பார்த்துக்கிட்டு இருப்போம். ரஜினி சார் வருவதற்கு முன்பே, 15 நாள் அத்தனை நடிகர்களும் ஒத்திகை பார்த்தோம். அதனால எல்லாரோடும் பழகுற வாய்ப்பு கிடைச்சுது. சமுத்திரக்கனி சாரும், அஞ்சலி பாட்டீலும் ஃபிரெண்ட் ஆகிட்டாங்க. அதேமாதிரி என்னோட தங்கச்சியா நடிச்ச பொண்ணோட அண்ணன் ரிஷியும், ஹுமா குரோஷியோட மகளா நடிச்ச சலோனியும் பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிட்டாங்க. தாராவியில் இருந்து வந்த ஹிப்ஹாப் அண்ணன்களுக்கும் என்னையப் பிடிச்சிப் போச்சு.

ஏற்கெனவே ஒரு குறும்படத்துல நடிச்சிருக்கீங்கல்ல?

ஆமா. பிரவீண் இயக்கிய ‘வால் காத்தாடி’ன்னு ஒரு குறும்படம் பண்ணிருக்கேன். 2014ல் வந்தது. அதை திருப்பூரில் ஒரு கல்லூரி சிறந்த குறும்படமா தேர்வு செய்து, சமுத்திரகனி சார் கையால விருது கொடுத்தாங்க. அந்த நிகழ்ச்சிக்கு என்னால போக முடியல. சூட்டிங்ல அதை சமுத்திரக்கனி சார்கிட்ட சொன்னதும், சந்தோஷமா வாழ்த்துனாரு.

இப்ப சந்தோஷ் நாராயணன் சாரோட "தாய் எங்கள் தமிழ்நாடு" என்ற வீடியோ ஆல்பத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட 'வந்தே மாதரம்' ஆல்பம் மாதிரி, இது பயங்கரமா ரீச் ஆகும். பிரமாண்டமா எடுக்கிறாங்க. தமிழ்நாட்டை அவ்வளவு அழகா, நெகிழ்ச்சியா காட்டும் இந்த ஆல்பம். 

பேட்டி முடிந்தது வாழ்த்து சொல்லி விடைபெறுகையில், மிதுன் சொன்னார், “அங்கிள்... இன்னைக்கு எனக்கு பெர்த் டே (ஜூன் 13)” என்று.

நாமும் வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x