Published : 23 May 2018 03:07 PM
Last Updated : 23 May 2018 03:07 PM

“அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது” - கார்த்தி

‘அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது’ என தூத்துக்குடி சம்பவம் குறித்து கார்த்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை, அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாமற்றது; நேர்மையற்றது.

எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மக்களைக் காப்பதுதானே காவல்துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல்துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க முடியாதது.

மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன். சுற்றுச்சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும், அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம், நல்ல மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை, மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். நடந்த பெரும் துயரத்துக்கு, அரசு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக, நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும், அந்தத் துயரில் இருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப்போய் உதவ வேண்டும். போராடுவது, மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை, அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். ‘மக்கள் போராட்டக் களத்துக்கே வரக்கூடாது’ என அரசு நினைப்பது தவறு. மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது” என கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x