Published : 21 May 2018 03:19 PM
Last Updated : 21 May 2018 03:19 PM

“நிச்சயம் இந்தப் படத்தை என் மகளுக்குக் காண்பிப்பேன்” - கார்த்தி நெகிழ்ச்சி

‘நிச்சயம் இந்தப் படத்தை என் மகளுக்குக் காண்பிப்பேன்’ என ‘எழுமின்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் கார்த்தி.

வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள், சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால் கூட எல்லாம் சினிமா மயமாகத்தான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார் வி.பி.விஜி. நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். என் மகளை அழைத்துக் கொண்டுபோய் நிச்சயம் இந்தப் படத்தைக் காண்பிப்பேன். எவனாவது ஒருத்தன் செயினைப் பிடுங்கினால், ‘ஐயையோ...’ என்று பயந்து நின்றுவிடக் கூடாது. ‘அடிங்க்... என் செயினையா பறிக்கிற?’ என்று ஒரு குத்து விட வேண்டும். அந்தளவுக்குக் குழந்தைகள் தயாராக வேண்டும்.

தற்காப்புக் கலை தான் அதற்கு உங்களைத் தயார்படுத்தும். அதை கற்றுக் கொண்டால் மட்டும்தான் உங்களால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியும். அந்தச் செயின் திரும்பக் கிடைக்கிறதோ, இல்லையோ... குறைந்தபட்சம் நாம் தைரியமாகமாவது இருக்க அது உதவும். ‘அடுத்த முறை அவன் கையை உடைத்து விடுவேன்’ என்று சொல்லும் அளவுக்குத் தைரியம் வரவேண்டும். என் மகளும் டேக்வாண்டோ பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

குழந்தைகளிடம் இருந்த இந்த ஃபயரை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடம் போன், லேப்டாப்பைக் கொடுத்து விடுகிறோம் அல்லது டிவி பார்க்கச் சொல்லி விடுகிறோம். அப்படி இல்லாமல், மேடையில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகளைப் பார்த்து எனக்கு ஊக்கமாக இருந்தது.

என் கையால் ஒரு பள்ளிக்கு நன்கொடை கொடுக்கச் சொன்னார்கள். என் பங்காக 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன். சிறிய தொகையாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x