Published : 19 May 2018 02:08 PM
Last Updated : 19 May 2018 02:08 PM

“அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா உதயநிதி

‘அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால், யாரையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது’ என இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நேற்று ரிலீஸான படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, ‘ஒரு இயக்குநராக அடல்ட் காமெடிப் படங்களின் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ‘தி இந்து’வுக்காகக் கேட்டேன். “அடல்ட் படங்கள் எடுப்பது எனக்கு தவறாகத் தெரியவில்லை. அதை நாம் ‘அடல்ட் காமெடி’ என்று வெளிப்படையாகவே சொல்கிறோம். ‘ஏ’ சான்றிதழ் பெற்று, அதையும் வெளிப்படையாகவே போட்டுக் கொள்கிறோம். மத்திய தணிக்கை வாரியம் அதற்குத்தான் இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் படத்தைப் பார்க்கிறார்கள். ‘நாம் அடல்ட் படம் பார்க்கப் போகிறோம்’ என்ற உணர்வுடன் தான் அவர்கள் படத்துக்குச் செல்கிறார்கள். எந்தப் படத்தை, எப்படிப் பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு.

நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தவறாகக் காட்டியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதைத் தவிர்த்திருக்கலாம். அந்த சமூகத்தைப் பற்றி ‘சதையை மீறி’ என நான் ஒரு பாடல் எடுத்தேன். அதனால், அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய கஷ்டம், வேதனை, எந்தளவுக்குப் போராடுகிறார்கள் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன்.

ஒருசில ரசிகர்கள் இதை படமாக மட்டும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ‘படத்தில் கூட இப்படித்தான் காட்டியிருக்கிறார்கள். நாம் செய்வதில் தவறில்லை’ என்று சிலர் நினைத்து, அவர்களைக் கேலி, கிண்டல் செய்ய நேரிடும். எனவே, சும்மா இருப்பவர்களைத் தூண்டிவிட்டதுபோல ஆகிவிடும். யாரையும் புண்படுத்தாமல் அடல்ட் காமெடிப் படங்கள் வருவதில் தவறில்லை” என்றார் கிருத்திகா உதயநிதி.

‘என்னதான் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் திரையரங்கில் பார்க்க முடியும் என்றாலும், ட்ரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் போன்றவை சமூக வலைதளங்களில் தான் வெளியிடப்படுகின்றன. 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் அவற்றைப் பார்த்துக் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதே...’ என்று கேட்டதற்கு, “கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள், கெட்டுப் போய்த்தான் ஆவார்கள். புரிகிற வயது வந்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அதைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மை வந்துவிடும். புரியாத வயதில் இருப்பவர்களுக்கு அது புரியப் போவதில்லை. எனவே, ‘ஸ்னீக் பீக்’ குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. சமூக வலைதளங்களில் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை கொள்கையை வகுப்பவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகுதான் நானே சில தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘தாலி கட்டினாலே குழந்தை பிறந்துவிடும்’, ‘காலும் காலும் உரசிக் கொண்டாலே குழந்தை பிறந்துவிடும்’ என்றுதான் 12 வயது வரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, பெரும்பாலான குழந்தைகள் அப்படித்தான் நினைக்கும். அதற்கு மேல் குழந்தைகளுக்கு ஐடியா இருக்காது” என்று பதில் அளித்தார் கிருத்திகா உதயநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x