Published : 18 May 2018 08:18 PM
Last Updated : 18 May 2018 08:18 PM

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் அரசியல் படம் ‘எல்.கே.ஜி’

ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘எல்.கே.ஜி.’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.வாகப் பணியாற்றும் பாலாஜி, சமூக விஷயங்களிலும் அக்கறை கொண்டவர். சென்னையில் வெள்ளம் வந்தபோது, நடிகர் சித்தார்த்துடன் இணைந்து உதவிகளை ஒருங்கிணைத்தவர். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிரச்சினை எழுந்தபோது, ‘நான் கமெண்ட்ரி செய்யவில்லை’ என வெளிப்படையாக அறிவித்தவர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான பாலாஜி, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’, ‘தேவி’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ‘கீ’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘யங் மங் சங்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதற்கு ஏற்றதுபோல சுவர் விளம்பரம், கட்சிக்கொடி என வெளியாக, ‘ஒருவேளை உண்மையாக இருக்குமோ...’ என ஒருகட்டத்தில் சந்தேகம் எழுந்தது.

ஆனால், அது ஒரு படத்துக்கான விளம்பரம் எனப் பின்னர் தெரியவந்தது. அந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. ‘எல்.கே.ஜி.’ என தலைப்பு வைத்துள்ளனர். அரசியல் படமான இதில், ஹீரோவாக நடிக்கிறார் பாலாஜி. அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x