Published : 17 May 2018 06:25 PM
Last Updated : 17 May 2018 06:25 PM

“நான் நடிகன் கிடையாது; எனக்கு நடிக்கத் தெரியாது” - விஜய் ஆண்டனி விறுவிறு பேட்டி

‘நான் நடிகன் கிடையாது; எனக்கு நடிக்கத் தெரியாது’ என விறுவிறுப்பாகப் பேட்டி அளித்துள்ளார் விஜய் ஆண்டனி.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரிலீஸாக இருக்கும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இந்தப் படத்துக்கு இசையமைத்து, தயாரித்தும் இருக்கிறார். விஜய் ஆண்டனியிடம் ‘தி இந்து’வுக்காகப் பேசினேன்.

‘காளி’ படம், விஜய் ஆண்டனியின் மாஸ் ஹீரோ ஆகும் முயற்சிகளில் ஒன்றா? அதனால்தான் ரஜினி படத் தலைப்பை வைத்தீர்களா?

நான் அப்படி நினைப்பதில்லை. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. சத்தத்தில் ஒரு அதிர்வு இருக்கிறது. ‘காளி’ என்று சொல்ல கெத்தாக இருந்தது. ஆனால், இந்தத் தலைப்பை நிறைய பேர் பயன்படுத்தாமல் இருந்தனர். காரணம், ரஜினி சாரின் ‘காளி’ ஷூட்டிங்கின்போது தீவிபத்து ஏற்பட்டு, சிலர் அதில் இறந்துவிட்டனர். எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை. எல்லாக் கடவுள்களுமே ஒன்றுதான், எல்லாக் கடவுள்களுமே நல்லதைத்தான் நினைப்பார்கள். அழிக்கிற கடவுள் யாருமே கிடையாது. அதனால், யாருக்கும் எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையில் இந்தத் தலைப்பை வைத்தேன். அதுமட்டுமில்லாமல், இந்தப் படத்துல ‘காளி’ என்ற கேரக்டர் முக்கியமானது. ஹீரோவின் பெயர் அதுதான். அதனால், அந்தத் தலைப்பையே வைத்துவிட்டேன்.

கிருத்திகா உதயநிதியின் இயக்கம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ரொம்ப ரொம்பத் தெளிவு உள்ள, டென்ஷன் இல்லாத ஒரு இயக்குநர். சில பேர் பயத்தில் ஒருமாதிரி படபடப்பாக இருப்பார்கள். ஆனால், இவரிடம் அதெல்லாம் கிடையாது. ஜாலியா டிஸ்கஷனுக்கு வருவது போல வந்து இயக்கினார். பக்கா புரொஃபஷனலான இயக்குநர்.

முதன்முதலாகப் பெண் இயக்குநரின் இயக்கத்தில் நடித்திருக்கிறீர்கள். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?

அப்படி எதுவுமே கிடையாது. ‘பெண் என்றால் கமர்ஷியலாக எடுக்க மாட்டார்கள்’என எனக்கு ஓர் எண்ணம் இருந்தது. ஆனால், அதை கிருத்திகா மாற்றிவிட்டார். மற்றபடி, வேலை விஷயத்தில் பெண் என்ற எண்ணம் எந்த வகையிலும் எனக்குத் தோன்றவில்லை.

‘காளி’ - இது நடிகர் விஜய் ஆண்டனிக்கான படமா? இல்லை, ஹீரோ விஜய் ஆண்டனிக்கான படமா?

நடிகர் அல்ல, ஹீரோ விஜய் ஆண்டனிக்கான படம். ‘நான் நடிகன் கிடையாது, எனக்கு நடிக்கத் தெரியாது’ என நிறைய பேரிடம் சொல்லியிருக்கிறேன். பலமுறை யோசித்துப் பார்க்கும்போது, நிறைய விஷயங்கள் எனக்கு வராது, நிறைய லிமிட்டேஷன் இருக்கிறது எனத் தெரியும்.

‘எனக்கு மியூஸிக்கே தெரியாது’ என்று சொல்லிவிட்டு இசையமைப்பது, ‘நடிப்பே வராது’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடிப்பது எல்லாம் ஒருவகையான ட்ரெண்டா?

‘எனக்கு நடிக்கத் தெரியாது’ என நான் சொல்வதை உண்மை என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்? ‘நான் நடிச்சிருக்கேன்’ என்று சொன்னால் நம்பிவிடுவீர்களா? என்னுடைய லிமிட்டேஷன் எனக்குத் தெரியும். ‘நான் நடிகன்’ கிடையாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ‘நான் ஹீரோ’ என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். எப்படிப்பட்ட ஹீரோ என்றால், என் அப்பா எனக்கு ஹீரோ. நான் பிரச்சினையில் இருக்கும்போது உதவி செய்த நண்பன் எனக்கு ஹீரோ. ஹீரோ என்பது ஆக்‌ஷன், பில்டல்புகள், ஸ்லோமோஷனில் நடந்து... அப்படிப்பட்ட ஹீரோ நான் கிடையாது. பறந்து பறந்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். ஆளுமை, குணாதிசயம், நல்லவன் என்பதுதான் ஹீரோ என்பதற்கு என்னுடைய அளவுகோல்கள்.

பார்ப்பதற்கு இவ்வளவு சாதுவாக இருக்கிறீர்களே... உங்களுக்குக் கோபம் வருமா?

கண்டிப்பாக வரும். நானும் சில முறை கோபப்பட்டிருக்கிறேன். எப்போது என்றால், வேலை நேரங்களில் மட்டும்தான். நான் சரியாக இருந்து, வேறு யாராவது அப்படி இல்லை என்றால், அந்த வேலையைக் காப்பாற்றுவதற்காக கோபப்படுவேன். அதாவது, நான் கோபப்பட்டுக் கத்தினால் தான் அந்த வேலை நடக்கும் என்றால், அந்த சமயங்களில் மட்டும் கோபப்படுவேன்.

ஒரே நேரத்தில் 4 ஹீரோயின்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

இதற்கு முன்னால் எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தது இல்லை. ஒரே சமயத்தில் 4 பேருடனும் ரொமான்ஸ் செய்யத் தேவையில்லை என்பதால் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தது. ஒவ்வொருவருடனும் தனித்தனியாகத்தான் ரொமான்ஸ் செய்திருக்கிறேன்.

நீங்கள் யாருடனும் நெருக்கமாக நடித்தது இல்லை, கூச்ச சுபாவம் கொண்டவர் என உங்களுக்கு ஒரு இமேஜ் இருக்கிறதே...

எனக்கு கூச்ச சுபாவமே கிடையாது. இதற்கு முன் வெளியான படங்களில் எனக்கு அமைந்த கேரக்டர்கள் அப்படி. ‘இங்கு என்ன பேச வேண்டும்? ஏன் அதைப் பேச வேண்டும்?’ என சில சமயங்களில் யோசிப்பேன். ‘இங்கு பேசத் தேவையில்லை’ என சில சமயங்களில் பேசாமலேயே இருந்து விடுவேன். அவ்வளவு தானே தவிர, கூச்சம் என்பதெல்லாம் கிடையாது.

ஆனால், இதற்கு முன்னாடி கூச்சம் இருந்தது. இப்போது எனக்குள் ஏதோ நடக்கிறது. முழுவதும் மாறிக்கொண்டே வருகிறேன். உருவம், சிந்தனை என எல்லாமே மாறிக்கொண்டு வருகிறது. நானும் அம்மாவும் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போது, பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்போம். அப்போது அங்கு விற்கிற வெள்ளரிக்காயை வாங்கி என்னிடம் சாப்பிடக் கொடுப்பார் அம்மா. ‘எல்லாரும் பார்க்கிறாங்க’ என்று சொல்லி அந்த வெள்ளரியைக் கூட வாங்கிச் சாப்பிடக் கூச்சமாக இருக்கும். அப்படி இருந்த ஆள், நாளுக்கு நாள் மாறி உங்களிடம் சாதாரணமாகப் பேசுகிறேன், கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ரொமான்ஸ் காட்சிகளில் தயக்கமில்லாமல் நன்றாகவே நடிக்கிறேன்.

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?

நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போது எம்.எஸ்.உதயமூர்த்தி சாரோட ‘எண்ணங்கள்’ புத்தகம் வாசித்தேன். என்ன படித்தேன் என நியாபகம் இல்லை. ஆனால், சிந்தனை என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்துகொண்டேன். அப்போது முதல் யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு, ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என எல்லாவற்றுக்குமே கேள்வி கேட்க ஆரம்பித்தேன். அப்படி எனக்கே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தேன். அதிலிருந்து நம்பிக்கை வளர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளும் மாற்றங்கள் உண்டானது. ஆனால், அந்தப் புத்தகம் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் கொடுத்ததா எனத் தெரியவில்லை. ஒருவேளை கோபம் வந்ததால் கூச்சம் போய்விட்டதோ என்னவோ...

படத்தின் ஸ்னீக் பீக், ‘சைத்தான்’ படத்தை நினைவூட்டுகிறதே?

அதற்கும், இந்தப் படத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இது முழுக்க முழுக்க வேறு கதை. உங்களுக்கு அப்படிப் பார்க்கத் தோணுது. ஆனால், இது முற்றிலுமாக ஃபேமிலி என்டெர்டெயினர் படம்.

இதற்கு முன் உங்கள் ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் அனைவருமே புதுமுகங்கள். ஆனால், இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா என ஏற்கெனவே நன்கு அறிமுகமான நடிகைகளுடன் நடித்திருக்கிறீர்களே...

இதற்கு கிருத்திகா தான் காரணம். என்னை விட்டிருந்தால், புது ஹீரோயின்களைத்தான் ஒப்பந்தம் செய்திருப்பேன். அவர் தான் அஞ்சலி, சுனைனா வேண்டுமெனக் கேட்டார். புது ஹீரோயின் என்றால் நாம் நினைத்த நேரத்துக்கு ஷூட்டிங்கை ஆரம்பிக்க முடியும், முடிக்க முடியும். என்னுடைய நேரத்துக்கு எல்லாம் நடக்கும். பிஸியான ஹீரோயின்கள் ரொம்ப பிஸியாகவே இருப்பார்கள். அவர்கள் கொடுத்த தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். அதனால், ஏற்கெனவே ஃபீல்டில் இருக்கும் நடிகைகள் பக்கம் போகவே மாட்டேன். இந்தப் படத்தில் அந்தப் பொறுப்பை கிருத்திகா ஏற்றுக் கொண்டதால், அஞ்சலியும் சுனைனாவும் நடிக்க நேர்ந்தது.

போன ஜென்மம் - இந்த ஜென்மம், அப்பா - மகன் பழிவாங்கல் என வழக்கமான கதை தான் ‘காளி’யா?

இருக்கலாம்... (சிரிக்கிறார்)

‘சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, இப்போது ‘காளி’ என தொடர்ந்து இரண்டு கேரக்டர்கள் கதைகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

எந்தக் காரணமும் இல்லை. கதைகள் நன்றாக இருந்தன, பிடித்திருந்தது என்பதால் தான் பண்ணேன். அடுத்தடுத்து நான்கு, எட்டு கேரக்டர்கள் கதை வந்தாலும் நடிப்பேன். கதையில் நான் முக்கியம் கிடையாது. கதை ஸ்ட்ராங்காக இருக்கும்போது எத்தனை கேரக்டர்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஒவ்வொரு படத்தின் கதை குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள். எதிர்காலத்தில் இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?

இப்போதே என்னால் ஒரு படத்தை இயக்க முடியும். ஆனால், அதற்கான ஐடியா இல்லை.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை, மற்றவர்களின் படங்களில் எப்போது பார்க்கலாம்?

பார்க்கவே முடியாது. அதற்கான நேரம் கிடையாது. எதிர்காலத்தில் என்னுடைய படங்களிலேயே பார்ப்பேனா எனத் தெரியாது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x