Last Updated : 12 May, 2018 07:24 PM

 

Published : 12 May 2018 07:24 PM
Last Updated : 12 May 2018 07:24 PM

முதல் பார்வை: இரவுக்கு ஆயிரம் கண்கள்

சென்னையில் நடுநிசிப் பொழுதில் ஒரு கொலை நடக்கிறது. குற்றவாளி யார் என்று போலீஸ் விசாரிக்கும்போது அருள்நிதி சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார். அந்த தருணத்தில் கொலை நடந்தது குறித்து போலீஸுக்கு தகவல் அளித்தவர் காவல் நிலையம் வந்து அருள்நிதிதான் அந்த வீட்டில் இருந்து வேகமாக வெளியேறியதாகச் சொல்கிறார். இதனால் அருள்நிதியைப் பிடிப்பதில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. ஆனால், துரிதமாக செயல்படும் அருள்நிதி காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பி விடுகிறார். போலீஸ் கோபாவேசத்துடன் அருள் நிதியைத் தேடுகிறது. உண்மையில் நடந்தது என்ன? கொலை செய்தது யார்? அருள்நிதி ஏன் தப்பிக்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இரவுக்கு ஆயிரம் கண்கள்.

அறிமுக இயக்குநர் மு.மாறன் ஒரு கொலையை பல்வேறு விதமான நபர்களின் பார்வையில் இருந்து வித்தியாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

கால் டாக்ஸி டிரைவராகப் பணியாற்றும் அருள்நிதி கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். காதல், கோபம், எரிச்சல், தயக்கம், பதற்றம் என அத்தனை உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்துகிறார். நெருக்கடியான தருணங்களில் அவசரப்படாமல் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவது அவர் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் ஒரே மாதிரியான முக பாவனைகளால் கொஞ்சம் அலுப்பூட்டுகிறார்.

மஹிமா நம்பியார் குறையில்லாமல் நடித்திருக்கிறார். காதலனுக்காக தனக்கு நேர்ந்த அவமானத்தை மறைக்கப் பார்ப்பது, பிறகு நடந்ததைச் சொல்லி தீர்வு தேடுவது, பெண்ணுக்கு உரிய பாதுகாப்பின்மையை உணர்வுகளால் தெரியப்படுத்துவது என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

செயல்களால் எரிச்சலை வரவழைக்கும் கதாபாத்திரத்தின் தனித்துவத்தை அஜ்மல் உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனந்த்ராஜ் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். கதையை அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்வதிலும் அவர் பங்கு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், சாயா சிங், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், சுஜா வாருணி, கஜராஜ் என்று வரிசை வரிசையாய் பெரிய நட்சத்திரப் பட்டாளமாய் படத்தில் வந்து போகிறார்கள். அவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தங்களை இயல்பாகப் பொருத்திக் கொள்கிறார்கள்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு மழையின் இதத்தையும், இரவின் இருளையும் அப்படியே நமக்குள் கடத்துகிறது. சாம் சி.எஸ். பின்னணி இசையில் படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறார். சான் லோகேஷ் கத்தரி நேர்த்தியாக உள்ளது.

படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அருள்நிதி காவல் நிலையத்திலிருந்து தப்புவதற்கான காரணம் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்படவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த விவரணைகள் சரியாக இல்லை. இறுதியிலும் அவருக்கு ஏற்படும் நிலையும், அவர் குடும்பத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் முழுமையாக சொல்லப்படவில்லை. ராமச்சந்திரன் துரைராஜ் கதாபாத்திரமும் சம்பந்தமே இல்லாமல் அப்படியே தொங்கி நிற்கிறது. சாயா சிங்கின் பின்புலம் தேவையே இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டது ஏற்புடையதாக இல்லை. ஜான் விஜய் அந்த முகவரியைக் கண்டுபிடிப்பது என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. இப்படி சில குறைகள் உள்ளன. இதையெல்லாம் மறக்க வைப்பதற்காக இயக்குநர் மாறன் படத்தில் நிறைய ட்விஸ்ட்களை வைத்திருக்கிறார். ஆனால், அந்த ட்விஸ்ட் கனமில்லாத திரைக்கதையால் ஊசலாடுகிறது. திருப்பங்களை அதிகம் தராமல் நேர்த்தியாக கதாபாத்திரங்களை பயணிக்க வைத்திருந்தால் இரவுக்கு ஆயிரம் கண்கள் வசீகரித்திருக்கும்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x