Published : 10 May 2018 09:34 AM
Last Updated : 10 May 2018 09:34 AM

“ரஜினியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை இவைதான்...” - தனுஷ் போட்ட பட்டியல்

‘ரஜினியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இவை’ என ஒரு பட்டியலே போட்டுள்ளார் தனுஷ்.

ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், ரஜினியிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இவை என ஒரு பட்டியலே போட்டார்.

“தலைவரைப் புகழ்ந்து பேசினால் அவருக்குப் பிடிக்காது. ஆனால், அவரிடம் கற்றுக்கொண்ட ஒருசில விஷயங்களைப் பற்றி மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘காலா’வின் கடைசி நாள் ஷூட்டிங். பதினோரு மணிக்கு முடிந்துவிடும் என்றார்கள். கடைசி நாள் என்பதால், மரியாதை நிமித்தமாக நானும் அங்கு சென்றிருந்தேன். ஆனால், நள்ளிரவு இரண்டு மணிக்கு மேலாகியும் ஷூட்டிங் முடியவில்லை. அன்றைக்குப் பார்த்து நிறைய தூசு, புகை, நெருப்பு என சிக்கலான சூழ்நிலையாக இருந்தது.

நான் பக்கத்தில் சென்று, ‘இரண்டரை மணி ஆச்சே... பரவாயில்லையா?’ என்று கேட்டேன். ‘என்ன இது நல்ல கதையா இருக்கே... இதுதாங்க நமக்கு எல்லாமே... அவங்கவங்க வாய்ப்பு கிடைக்காம எவ்வளவு கஷ்டப்படுறாங்க’ என முதல் பட நடிகர் போல என்னிடம் சொன்னார். அதில் இருந்து அவரிடம் நான் தொழில் பக்தியைக் கற்றுக் கொண்டேன்.

வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்து, சாதித்து, முன்னுக்கு வந்து உச்சத்தில் நிற்பது. இன்னொன்று, அப்படி உச்சத்தில் இருப்பவர்களைத் தாக்கிப் பேசுவது. ஒருவேளை நான் எங்காவது எல்லை மீறிப் பேசினால் என்னை மன்னித்து விடுங்கள். அப்படி தொடர்ந்து 40 வருடங்களாக உச்சத்தில் இருக்கும்போது, தொடர்ந்து அவரை வைத்து சம்பாதித்தவர்கள், அவர் வாழவைத்தவர்கள், அவர் வாழ்க்கை கொடுத்தவர்களே அவரைக் கொஞ்சம் அப்படி இப்படி தாக்கிப் பேசும்போது, அமைதியாக சிரித்துக்கொண்டே இருப்பார். ‘பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள். அதுக்குத் தகுந்த மாதிரி அவரிடம் பொறுமையக் கற்றுக் கொண்டேன்.

ரஞ்சித் தான் ‘காலா’வின் இயக்குநர் என்று முடிவானபிறகு, ரஞ்சித் தலைவரிடம் கதை சொல்லச் சென்றபோது, ‘தயாரிப்பாளரிடம் கதை சொல்லிடுங்க’ என ரஞ்சித்திடம் சொல்லியிருக்கார். ஒரு தயாரிப்பாளரை எப்படி மதிக்க வேண்டும் என்ற பண்பை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.

சமீபத்தில் நடந்தது... ‘காலா’ இசை வெளியீட்டு விழாவுக்காக அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்தபோது, ‘ஒரு சிலர் வருத்தப்படும்படி பேசியிருக்கிறார்களே... அவர்களைக் கூப்பிடலாமா?’ என அவரிடம் சென்று கேட்டேன். என் சிற்றறிவுக்கு அவ்வளவுதான் தோன்றியதால், நான் அப்படி கேட்டேன். ‘எல்லாரும் நமது நண்பர்கள். எல்லாரையும் கூப்பிடுங்க’ என சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருக்குறளுக்குத் தகுந்த மாதிரி, பெருந்தன்மையையும், மன்னிக்கும் குணத்தையும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்று பேசினார் தனுஷ்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x