Published : 09 May 2018 05:43 PM
Last Updated : 09 May 2018 05:43 PM

‘காலா’ இசை வெளியீட்டு விழா: அரசியல் பேசுவாரா ரஜினிகாந்த்?

‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவாரா ரஜினிகாந்த் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சமுத்திரக்கனி, நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால் எனப் பலர் நடித்துள்ளனர். மொத்தம் 9 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்தும் இன்று காலை 9 மணிக்கே இணையத்தில் வெளியாகிவிட்டாலும், விழாவையும், தன்னுடைய தலைவன் ரஜினியையும் காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மாலை தான் விழா என்றாலும், ஆர்வத்தால் காலையில் இருந்தே பல ரசிகர்கள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூடியுள்ளனர்.

தங்கள் தலைவனை ரசிப்பதற்காக மட்டும் அவர்கள் கூடவில்லை. இந்த விழாவில் தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஏதாவது பேசுவாரா? என்ற எதிர்பார்ப்புடனும்தான் கூடியுள்ளனர். காரணம், ‘இதோ அரசியலுக்கு வரப் போகிறார்... இன்னும் சில வருடங்களில் வந்துவிடுவார்...’ என்று பல வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ரசிகர்கள் சந்திப்பில் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவித்தார்.

“அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.

சாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும்.

காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம். என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு” என்று தன்னுடைய கட்சி அறிவிப்பு குறித்துப் பேசினார் ரஜினிகாந்த்.

அதன்பிறகு ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாறியது. அதேபோல, நெட்டிசன்களின் கிண்டலால் லோகோவில் இருந்த தாமரை, பாம்பு ஆகியவை நீக்கப்பட்டன. மேலும், ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்க தனி இணையதளமும் செயலியும் தொடங்கப்பட்டன. ஆர்வத்துடன் அதில் பலர் உறுப்பினராகவும் இணைந்தனர்.

ஆனால், அதன்பின்னர் அவ்வளவாக அரசியலில் ஆர்வம் காட்டாத ரஜினி, தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களில் பட்டும் படாமல் ஒதுங்கியே இருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழ்த் திரையுலகம் சார்பில் நடைபெற்ற மவுன அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

 அதேபோல, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் தவறு என்றும் தெரிவித்தார். அதேசமயம், முக்கியமான சில விஷயங்களில் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல், மவுனமாகவே இருந்தார்.

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரியாக இருந்த ராஜு மகாலிங்கம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியுடன் இணைந்தார். அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராகப் பதவி தரப்பட்டது.

இதனால், பல வருடங்களாக மன்றத்தில் இருந்தவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதிலும், திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்றப் பொறுப்பாளர் தம்புராஜ் நீக்கம் என அவ்வப்போது சில அரசல் புரசல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து, ‘இப்போது கட்சிப் பெயரை அறிவிப்பார்... அப்போது அறிவிப்பார்...’ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், 4 மாதங்களுக்கு மேலாகியும் இப்போது என்ன அவசரம் என்பதைப் போல இமயமலைக்கு ஆன்மிகப் பயணம், முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்க பயணம், அடுத்தடுத்த படங்கள் என வழக்கமான தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

இந்நிலையில், இன்றுதான் மறுபடியும் தன்னுடைய ரசிகர்களை ஒட்டுமொத்தமாகச் சந்திக்க இருக்கிறார். எனவே, இன்று அரசியலில் தன்னுடைய அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘கற்றவை பற்றவை’ பாடலுக்கு வசனம் எழுதிய ரஜினிகாந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x