Published : 09 May 2018 01:12 PM
Last Updated : 09 May 2018 01:12 PM

“பாஜகவிடம் சுயசிந்தனை இல்லை; அவர்கள் யாருக்கோ வேலை பார்க்கிறார்கள்” - நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

‘பாஜகவிடம் சுயசிந்தனை இல்லை; அவர்கள் யாருக்கோ வேலை பார்க்கிறார்கள்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மீதான தன்னுடைய விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். ‘பாஜகவை மட்டும் நீங்கள் எதிர்ப்பது ஏன்?’ என்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ள பிரகாஷ் ராஜ், ‘பாஜகவிடம் சுயசிந்தனை இல்லை; அவர்கள் யாருக்கோ வேலை பார்க்கிறார்கள்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

“எல்லா மதக்காரர்களும், எல்லா இனத்தில் இருப்பவர்களும், எல்லா மொழிகளும் சேர்ந்ததுதான் நம் நாடு. எல்லாருக்கும் சம உரிமை வேண்டும். எல்லாக் கட்சிகளும் ரொம்ப நல்ல கட்சிகள் என்று நான் சொல்லவில்லை. விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் வந்த எல்லாக் கட்சிகளும் நமக்கு துரோகம்தான் செய்துள்ளன. அதற்கு காரணம் நாமும் தான். காசைப் பார்த்தும், ஜாதியைப் பார்த்தும் தான் நாம் ஓட்டு போட்டிருக்கிறோம். ஓட்டு போடாமலும் இருந்திருக்கிறோம். எதையும் கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கிறோம். கேள்வி கேட்க வேண்டும்.

மற்ற கட்சிகளைவிட பாஜக ஏன் இந்த நாட்டுக்கு வில்லனாக எனக்குத் தெரிகிறது என்றால், நம்முடைய அரசியலமைப்பையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரே இனம், ஒரே ஜாதி தான் முக்கியம் என்றால், அதை எப்படி நீங்கள் சொல்லலாம்? என்னுடைய அரசியலமைப்பு, எல்லாருக்கும் சம பங்கு என்றுதான் சொல்கிறது. இவர்களை இப்படியே விட்டால், முதலில் மொழியைக் (இந்தி) கொண்டுவர முயற்சித்தார்கள். அதாவது, எல்லா மொழிகளும் செத்துவிட வேண்டும், இவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். இவர்கள் மொழியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது, ஒரு ஜாதியைக் கொண்டு வருகிறார்கள். அப்போ, என்னதான் சொல்ல வருகிறீர்கள்? தலித்துகள் எங்கே செல்ல வேண்டும்? கிறிஸ்தவர்கள், ஜெயின் சமூகத்தினர், சீக்கியர்கள் எங்கு செல்ல வேண்டும்? மனிதன் எங்கே செல்ல வேண்டும்? ரத்தம் என்றாலே அதற்குள் ஜாதி இருக்கிறது என்கிறீர்கள். நோய் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டுமே தவிர, உன் ஜாதி என்ன என்று தெரிந்து கொள்வதற்காகப் பரிசோதனை செய்வதற்கல்ல ரத்தம்.

பாஜகவிடம் எனக்குப் பிரச்சினை என்னவென்றால், அவர்களிடம் சுயசிந்தனை இல்லை. அவர்கள் யாருக்கோ வேலை பார்க்கிறார்கள். நாட்டுக்கு வேலை பார்க்க மாட்டார்கள். இப்பேர்ப்பட்ட மோசமான ஆட்களிடம் இருந்து முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எதற்கு நான் எந்தக் கட்சியிலும் இல்லை என்றால், எல்லோரையும் கேள்வி கேட்கும் குணம் வரவேண்டும். நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேரலாமா அல்லது ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கலாமா அல்லது ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாமா என்று யோசித்தேன். ஆனால், மக்களுக்கு ஒரு குரல் தேவைப்படுகிறது என எனக்குத் தோன்றியது.

ஆட்சியைப் பிடிப்பது நோக்கமல்ல. ஏற்கெனவே பெயரும் புகழும் வந்திருக்கிறது. சமுதாயத்திடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் தான் அது வந்திருக்கிறது. எனவே, மக்களுடனேயே நானும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இது ஒரு பெரிய பாதை. மக்கள் கேள்வி கேட்டால்தான் யாராவது இனிமேல் வேலை செய்வான். ஆனால், கேள்வி கேட்பவனைத் தனிமைப்படுத்தி, அவனை அடிக்கிறார்கள் அல்லது விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். 10 பேர் சேர்ந்தா பதில் கொடுத்துத்தானே ஆக வேண்டும்? அந்த மாதிரியான ஒரு புரட்சி, சிந்தனை மக்களுக்குள் போகவேண்டும் என்பதற்காக நான் மக்களுக்குப் பக்கத்தில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x