Published : 05 May 2018 03:31 PM
Last Updated : 05 May 2018 03:31 PM

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘காலா’ இசை வெளியீட்டு விழா

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘காலா’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் தமிழராக ரஜினி நடித்துள்ள இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, அருள்தாஸ், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, அரவிந்த் ஆகாஷ், சாயாஜி ஷிண்டே, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘காலா’ படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். ‘கபாலி’யைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அருண்ராஜா காமராஜ் மற்றும் டோபெடெலிக்ஸ் வரிகளில் உருவான ‘செம்ம வெயிட்டு’ பாடல், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. பாடல் வெளியான இரண்டே நாட்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை இந்தப் பாடலைக் கேட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான ‘கபாலி’ படத்தின் பாடல்கள் ஹிட் என்பதால், ‘காலா’ படத்தின் பாடல்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x