Published : 03 May 2018 03:59 PM
Last Updated : 03 May 2018 03:59 PM

‘பெண்கள் அடுப்பங்கரைக்குத்தான் போகணுமா?’ - விவேக்கின் ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு

விவேக் போட்ட ட்வீட்டால், ‘பெண்கள் அடுப்பங்கரைக்குத்தான் போகணுமா?’ என நெட்டிசன்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

நடிகர் விவேக், “அன்பான மாணவர்கள் மற்றும் குழந்தைகளே! உங்கள் விடுமுறையை சந்தோஷமாகக் கழியுங்கள். விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் பருகுங்கள். பெண் குழந்தைகள் கிச்சனுக்குச் சென்று அம்மாவுக்கு உதவியாக இருப்பதோடு, சமையலை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் குழந்தைகள் அப்பாவோடு அலுவலகம் சென்று, குடும்பத்துக்காக எப்படி உழைக்கிறார் என்று பாருங்கள். உறவு வலுப்படும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு, நெட்டிசன்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இன்னும் பெண்கள் அடுப்பங்கரைக்கும், ஆண்கள் வேலைக்கும்தான் செல்ல வேண்டுமா? நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’, ‘சினிமாவில் மட்டும் பகுத்தறிவு, பெண்ணுரிமை பேசினால் போதாது, வாழ்ந்து காட்டணும். பழைய பஞ்சாங்கமா இருக்காதீங்க...’, ‘பாலின பாகுபாடு குற்றம்’ என்றெல்லாம் அவர் பதிவுக்குப் பதில் அளித்துள்ளனர். அதேசமயம், அவருடைய கருத்துக்கு நிறைய பேரிடம் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், “நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். மதிப்புமிகு பெற்றோர்கள் புரிந்துகொள்வர். அவசரப்பட்டு எதிர்மறை மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம், அவர்கள் புரிதல் அவ்வளவே.

இதன் பொருட்டு அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. ஏனெனில், நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்; அன்புமயமானவர். நான் நேசிக்கும் மாணவச் செல்வங்களுக்கு என் மாலை வணக்கங்கள். ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி” என தன் ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் விவேக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x