Published : 23 Feb 2018 03:07 PM
Last Updated : 23 Feb 2018 03:07 PM
பிஸியான பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு தாயகம் கனடா. ஓர் அமெரிக்க இந்திய நடிகையான சன்னி தற்போது தமிழ் சினிமாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். போர்க்களத்தை எதிர்கொள்ளும் இளவரசியாக இவர் நடிக்கும் வீரம்மாதேவி திரைப்படம் ஒரே நேரத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. வீரம்மாதேவி குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஐஏஎன்எஸ்க்கு சன்னி லியோன் அளித்த ஒரு மினி இ மெயில் பேட்டி:
தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்கு பரந்துபட்ட அளவில் ரசிகர்களைப் பெறமுடியும் என்பதுதான் காரணமா?
ஆமாம், ஒரு நபராகவும் ஒரு நடிகையாகவும் நான் வளர இது உதவும் என்பதால் இப்படத்தை நான் ஒப்புக்கொண்டேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சாரமாக அது இருப்பதால் அங்கு கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் நிறைய விரும்பவும் அனுபவிக்கவும்கூட அங்கு நிறைய உள்ளது.
ஆனால் மொழி ஒரு தடையாக இருக்குமே?
அதுதான் சவால். இந்தப் படத்திற்காக மட்டும் என்று கற்றுக்கொள்ளவேண்டுமே என்று நான் கவலைப்படவில்லை. மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமும் மிகப்பெரிய ஈடுபாடும் எனக்கு உண்டு.
'வீரம்மாதேவி' திரைப்படத்தில் உங்கள் பங்கேற்பு குறித்து?
நான் எப்போதும் செய்யவிரும்பியதாக 'வீரம்மாதேவி' கதாப்பாத்திரம் இருக்கிறது. நான் இக் கதாப்பாத்திரத்தோடு மிகவும் ஒன்றிவிட்டது ஆச்சரியமான ஒன்று. இப்படத்தில் நடிக்கும் அனுபவங்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அப்பாலும் உற்சாகத்தோடு இருக்க வைத்திருக்கிறது. இப்படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக இந்தியாவிலும் லாஸ் ஏஞ்சல்ஸ்ஸிலும் குதிரை சவாரி பயின்று வருகிறேன். அதுமட்டுமின்றி தமிழை முறையாகப் பயிலவும் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கேற்கிறேன்.
தென்னிந்தியப் படங்கள்மட்டும்தான் தங்கள் இலக்கா?
நிச்சயமாக இல்லை. இந்திப் படங்கள் தென்னிந்தியப் படங்கள் மட்டும்தான் எனது இலக்கு என்று சொல்வதற்கில்லை. மற்ற பிராந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். முக்கியமாக என்னை அணுகுவதற்கான கதாப்பாத்திரங்கள் எனக்குப் பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். அப்படியெனில் நிச்சயமாக நான் மற்ற மொழிப் படங்களிலும் நடிப்பேன்.
பிக் பாஸ் 5 எனும் டிவி ரியாலிடி ஷோ வாயிலாக ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2, ஏக் பஹேலி லீலா, மாஸ்டிஸாதே, குச்குச் லோச்சா ஹை போன்ற இந்திப்படங்களின் மூலம் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தனது படங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அறிமுகப்படுத்த வந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT