Last Updated : 05 Dec, 2017 11:58 AM

 

Published : 05 Dec 2017 11:58 AM
Last Updated : 05 Dec 2017 11:58 AM

ஏப்ரலில் 2.0 வெளியீடு: தெலுங்கு திரையுலகில் வெடிக்கும் சர்ச்சை

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள '2.0' ஏப்ரலில் வெளியாகும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் சர்ச்சை வெடித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 26-ம் தேதி வெளியீடாக இருந்த '2.0', கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் ஏப்ரலில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

'2.0' வெளியீட்டு தேதி மாற்றத்தால் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் 'Bharat Ane Nenu' மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'Naa Peru Surya' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

'Bharat Ane Nenu' படத்தை தயாரித்து வரும் டிவிவி நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், "மற்ற மொழிப் படங்களை டோலிவுட் என்றுமே அரவணைத்திருக்கிறது. ஆனால் ’2.0’ மாதிரியான ஒரு பிரமாண்டப் படம் அதன் வெளியீடு தேதியை மாற்றுவது மற்ற தயாரிப்பாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே போட்டியைத் தவிர்க்க ஏப்ரல், மே மாதங்களில் படங்களை வெளியிடவுள்ள தயாரிப்பாளர்கள் அவர்களுக்குள் கலந்துரையாடி வருகிறார்கள். தற்போது '2.0' தரப்பிலிருந்து வந்துள்ள திடீர் அறிவிப்பு மற்ற தெலுங்குப் படங்களின் வெளியீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் வர்த்தகத்தில் இருப்பவர்கள் தெளிவான முடிவெடுத்து, சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பென்னி வாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "உங்கள் திரைப்படத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் வெளியீட்டுத் தேதியை மாற்றுவதால் மற்ற மாநில மொழிப் படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. நானும், தனயாவும் பேசி வருகிறோம். நான் இந்தப் பிரச்சினையை ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத்திடம் எடுத்துச் செல்கிறேன். சொன்ன தேதியில் வெளியிட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். எங்கள் செயல், எதிர்காலத்தில், மாநில மொழி பட வெளியீட்டுக்கு உதவும் என்றும் நம்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

இரண்டு முக்கிய தயாரிப்பாளர்களின் அதிருப்தியால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x