Published : 28 Nov 2017 10:26 AM
Last Updated : 28 Nov 2017 10:26 AM

‘லைவ்’ இசையில்தான் உயிர்ப்பு அதிகம்: இளம் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் நேர்காணல்

வி

ளையாட்டாக இசை படிக்கச் சென்றவர், இன்று விஸ்வரூபமாக 300-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.. இளம் இசையமைப்பாளரான ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், தனது இசை அனுபவம், லட்சியம் ஆகியவை பற்றி ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.,

இசைப் பயணம் தொடங்கியது எப்படி?

5-ம் வகுப்பு வரை திருச்சிதான் உலகம். அதன் பிறகு, சென்னை. அப்பா, அம்மா இருவரும் அரசுத் துறை ஊழியர்கள். காலையில் போனால், மாலைதான் வருவார்கள். பள்ளிப் படிப்பு போக மற்ற நேரத்தில் பொழுதுபோக்கு, அரட்டை என்று நேரம் வீணாகக் கூடாதே என்று கீபோர்டு வகுப்பில் சேர்த்துவிட்டனர். விளையாட்டாகத் தொடங்கிய அந்தப் பயணம்தான் இன்று இசையை முழுநேர வேலையாக்கியுள்ளது.

பள்ளியில் இசைப் போட்டிகள், வெளியிடங்களில் பாராட்டுகள் என்று குவிய ஆரம்பித்த நேரத்தில் நான் 10-ம் வகுப்பு படிக்கிறேன். அதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினீயராகலாம் என்ற ஆசை வந்தது. வீட்டில் சொன்னேன். அவர்களுக்கு சவுண்ட் இன்ஜினீயரிங் என்றால் என்ன என்றே புரியவில்லை. அப்போது அதற்கு பெரிய அளவில் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களும் இல்லை. ‘சவுண்டும் வேணாம், ஒண்ணும் வேணாம். பேசாம படி’ என்று சொல்லி, நாமக்கல்லில் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்தனர். மேல்நிலை வகுப்பை அங்கே கடந்த பிறகு, பொறியியல் கல்லூரி.

‘இனி வேலைக்கு ஆகாது’ என்று காலையில் கல்லூரி, மாலையில் இசைக் கச்சேரி என்று நானே இறங்கினேன். ஒரு காலகட்டத்தில், ‘கல்லூரியே வேணாம், இனி முழுக்க முழுக்க இசைதான்’ என்ற எண்ணம் உள்ளுக்குள் பரவியது. அதுமுதல், முழுநேர இசைப் பணிக்குள் இறங்கினேன்.

அது 2014. கல்லூரி முடித்த காலம். குறும்படங்களின் தாக்கம் அதிகம் இருந்தது. கச்சேரி, மெல்லிசை நிகழ்ச்சி என்று ஓடிக்கொண்டிருந்தபோது குறும்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் வந்தன.

எடுத்த எடுப்பில் குறும்படங்களுக்கு இசையமைப்பது கடினமாக இல்லையா?

இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் முறையான பயிற்சி, அனுபவம் இருந்ததால் எந்தவித தொய்வும் இல்லாமல் குறும்படங்களில் பணியாற்ற முடிந்தது. அது நல்ல அனுபவமாக இருந்தது.

முதன்முதலாக புற்றுநோய் விழிப்புணர்வு சார்ந்த குறும்படத்தில் இருந்து பணியைத் தொடங்கினேன். 30 குறும்படங்கள் வரை, இசை சார்ந்த சில விஷயங்களில் நல்ல பயிற்சி தேவைப்பட்டது. அதுவரைக்கும் பயிற்சிக் காலமாகத்தான் எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு, எனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டேன்.

சினிமா வாய்ப்பு எப்போது வந்தது?

100 குறும்படங்களுக்கு மேல் பயணம் தொடர்ந்ததும், சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், நான் உடனே அவற்றை ஏற்கவில்லை. குறிப்பாக, ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட சில விஷயங்களில் இன்னும் அனுபவம் கிடைக்கட்டும் என காத்திருந்தேன். திரைப்படத் துறைக்கான இசைக்கு நாம் தகுதியாக இருக்கிறோமா என்ற சுய பரிசோதனைக்குப் பிறகே அதை ஏற்பது என்ற உறுதியோடு இருந்தேன்.

கிட்டத்தட்ட 300 குறும்படங்களைத் தொடும்போது ஒரு நம்பிக்கை பிறந்தது. அதோடு, நான் இசையமைத்த ‘வீதி’ குறும்படம் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

அந்த பாராட்டுகளோடு ‘யாமன்’, ‘தூவென்’ என திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். 2 படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன்பு வெளிவந்த ‘வெருளி’ படத்தில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். தொடர்ந்து சித்ரா, உன்னிகிருஷ்ணன், சைந்தவி போன்ற பாடகர்களோடு பயணிக்கும் அனுபவமும், அவர்களது பாராட்டும் கிடைக்க ஆரம்பித்தன.

கணினிமயமாகிவிட்ட இந்த இசை உலகில், நீங்கள் ‘லைவ் இசை’க்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

நாம் இன்று கணினி வழியே பயன்படுத்தும் இசை சாஃப்ட்வேர், வெளிநாட்டினர் உருவாக்கியதுதான். ஆனால், ஹாலிவுட் உள்ளிட்ட வெளிநாட்டு சினிமாக்காரர்கள் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. இசைக் கருவிகளைக் கொண்டு உருவாகும் ‘லைவ்’ இசையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

உயிர்த் துடிப்பு நிறைந்த அந்த ‘லைவ்’ இசை, நம்மிடையே குறைகிறது என்பதுதான் இசைஞானி இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களின் கோபம். அது நியாயமான கோபமே.

என்னதான் நவீனமும், தொழில்நுட்பமும் வந்தாலும் லைவ் இசை அமைப்புதான் அடித்தளம். அது இல்லாமல், வெறுமனே கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன முயற்சி செய்தாலும் பயனில்லை. அதோடு, கம்ப்யூட்டர் ஆதிக்கம் அதிகமாவதால், இசைக் கலைஞர்களும் குறைந்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகள் இது தொடர்ந்தால், இசைத் துறைக்கே அது ஆபத்தாக மாறும். அதனால்தான் லைவ் இசைக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உயிர்பெறும் ஒலிகளை வைத்து இசை அமைப்பதை பிரதானமாகக் கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x