Published : 14 Sep 2017 07:45 AM
Last Updated : 14 Sep 2017 07:45 AM

பெப்சி - தயாரிப்பாளர் சங்க பிரச்சினை முடிந்தது: படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின

திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் இனி தடையின்றி படப் பிடிப்பு நடைபெறும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று தெரிவித்தார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3 மாதங்களாக திரைப் படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டாததால் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 'காலா' உள்ளிட்ட 40 -க் கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெப்சி அமைப்பில் உள்ள 24 சங்கங்களில் தினமும் 3 சங்கங்கள் வீதம் சம்பளம் உள்ளிட்ட விஷயமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சங்கங்களின் பிரச்சினையும் பேசி முடிக்கப்பட்டு தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு நேற்று முதல் படப்பிடிப்பு கள் தொடங்கின.

தடையின்றி தொடக்கம்

இந்தப் பிரச்சினை ஒரு மனதாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வ மணி நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசியதா வது:

கடந்த 3 மாதங்களாக தமிழ் திரையுலகில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆகையால்,வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு, படப் பிடிப்புப் பணிகள் அனைத்தும் மீண்டும் தடையின்றி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் முடிவதற்கு காரணமான சம்மேளனத்தின் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒப்பந்த கையெழுத்து

தொழிலாளர்களுக்கு வேலை செய்யும்போது மட்டுமே சம்பளம், பயணம் செய்யும்போது சம்பளம் கொடுக்க மாட்டோம் என்பதுதான் முக்கிய பிரச்சினையாக இருந்தது. தற்போது பயணம் செய்யும்போது பாதி சம்பளம் என்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு இருக்கிறோம். தற்போது அனைவருடனும் சுமூகமாக பணிபுரிய முடிவு செய்திருக்கிறோம். தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து டெக்னிஷியன் யூனியனை நீக்கியுள்ளோம். அவர்கள் தனியாக இயங்குகிறோம் என கூறிவிட்டார்கள். உடனிருந்து சண்டையிட்டுக் கொள்வதைவிட, தள்ளியிருந்து நட்பாக இருப்பது நல்லது என நினைக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இருவருக்கும் இடையே ஆன ஒப்பந்தத்தில் முதல் விதியே, எந்தச் சூழ்நிலையிலும் இணைந்து பணியாற்றுவோம் என்ற விதிதான். அதே போல், யாருடனும் பணியாற்றுவோம் என்ற தயாரிப்பாளர்களின் பேச்சையும் சுமூகமாக பேசி முடித்துள்ளோம்.

சிறுபடத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்புகளுக்கு எவ்வளவு தொழிலாளர்கள் வேண்டுமோ, அவ்வளவு பேரை மட்டும் வைத்து பணிபுரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்திருக்கிறோம். தயாரிப்பு துறையை நசுக்குவது எங்கள் நோக்கம் அல்ல. அதனை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். அடுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதுவரை இந்த ஒப்பந்தமே நிலுவையில் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x