Last Updated : 28 Aug, 2017 11:54 AM

 

Published : 28 Aug 2017 11:54 AM
Last Updated : 28 Aug 2017 11:54 AM

ஜூலியை விமர்சிப்பவர்கள் அரசியல்வாதிகளையும் விமர்சிக்கலாமே: பிக் பாஸ் பார்வையாளர்களை சாடிய கமல்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஜூலியைச் சாடிய பார்வையாளரை, அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுப் கடுமையாக சாடிப் பேசினார் கமல்

நேற்றைய (ஆகஸ்ட் 27) 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆர்த்தி, ஜூலி, ஷக்தி, பரணி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோருடன் கமல் கலந்துரையாடினார். அப்போது ஒவ்வொருவரிடம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்றவுடன் மக்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்டிருந்தார்.

அப்போது ஜூலி "எங்கள் வீட்டு பிள்ளையாகத் தானே உன்னை அனுப்பினோம். நீ போய் பொய் சொல்லிட்டயம்மா" என்று கூறியவுடன் அரங்கிலிருந்த பார்வையாளர்களில் சிலர் கடும் அதிருப்தி தெரிவித்தார்கள்.

அப்போது ஜூலியைப் பார்த்து கமல் "புரிந்துக் கொண்டீர்களா.. இதையும் வெல்ல முடியும். உங்களுடைய குணாதிசயங்கள் எல்லாம் இவர்களுக்குள்ளும் இருக்கிறது. அதை குத்திக்காட்டுகிறாரோ என்று கூட கோபம் வரலாம்" என்று தெரிவித்தார்.

மேலும், பார்வையாளர்களைப் பார்த்து கமல், "இவ்வளவு கோபப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சின்ன விஷயத்துக்காக பொய் கூறினார். அதற்காக இவ்வளவு கோபம்.

அப்படியென்றால் அரசியல்வாதிகளை எல்லாம் ஏன் விட்டு வைத்தீர்கள். இவ்வளவு கோபத்தை ஒரு சின்ன பெண் மீது காட்டுகிறீர்களே. எத்தனையோ பேர் குண்டர் சட்டத்தில் உள்ளே போக வேண்டியவர்கள் எல்லாம், நம் மீது அதை பாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கோபத்தை எல்லாம் பாதுகாத்து வையுங்கள். அதை வெளிக்கொண்டு வர வேண்டிய காலம் விரைவில் வரும். நான் ஜூலிக்கு பரிந்து பேசவில்லை. எதிர்த்துப் பேசுகிறேன். நீங்களும் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேசியாக வேண்டும்.

ஜூலி, காயத்ரி ஆகியோரின் பெயரில் கோபத்தை வீணடிக்காதீர்கள். இவர்கள் எல்லாம் உங்களையும் என்னையும் போன்று சாதாரண மக்கள். கோபம் அனைவருக்கும் தேவை தான். சும்மா பல ஓட்டைகள் கொண்ட ஷவர் மாதிரி இருக்கக் கூடாது. தீயணைப்பு வண்டியில் இருந்து வரும் தண்ணீர் ஜெட் போன்று இருக்க வேண்டும்.

அறிவுரை சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் தைரியம், அறிவுரை. ஏனென்றால் எனக்கு நிறைய தேவைப்படுகிறது. அதற்கு உங்களுடைய கோபம் மட்டுமே எனக்கு ஊக்க சக்தியாகும்.

பிக் பாஸ் வீட்டு பிள்ளைகளை எல்லாம் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். திருத்துங்கள். திருந்தவில்லை என்றால் திருத்த முயற்சி செய்யுங்கள். அதைக் கோபத்தால் செய்ய முடியாது. நான் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். இவர்களை திருத்த முற்படும் போது நான் திருந்தி விடுகிறேன்" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x