Last Updated : 20 Aug, 2017 03:00 PM

 

Published : 20 Aug 2017 03:00 PM
Last Updated : 20 Aug 2017 03:00 PM

விவேகம் படத்துக்காக அஜித்தின் அர்ப்பணிப்பு: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி

'விவேகம்' படத்திற்காக அஜித்தின் அர்ப்பணிப்போடு பணிபுரிந்ததை விவேக் ஓபராய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் விவேக் ஓபராய். இதில் அஜித்தின் நண்பராக நடித்திருக்கிறார். 'விவேகம்' படம் குறித்து விவேக் ஓபராய் கூறியிருப்பதாவது:

என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், வியாபாரம், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை 'விவேகம்' நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

'விவேகம்' கதையை கேட்ட பிறகு, அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த 'வீரம்', 'வேதாளம்' படங்களைப் பார்த்தேன். ஒரு நாயகனுக்கும், இயக்குநருக்கும் இடையேயான நட்பு புரிந்தது. ஆன்மீகப் புரிதல் எங்களுக்குள் சரியாக அமைந்தது.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன். அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, 'விவேகம்' ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். இப்படத்திற்காக நான் டப்பிங் செய்யவில்லை, பிரின்ஸ் என்பவர் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்கு அவர் டப்பிங் பேசினார்.

அஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் தீவிர ரசிகன் என்பதையும் சொன்னேன். படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். உதவியாளர்கள் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றிக் கொடுப்பார்.

அஜித் அண்ணாவுடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

என்னோடுதான் காஜல் அகர்வால் முதல் படம் நடித்தார். பல வருடங்கள் கழித்து மீண்டும் 'விவேகம்' படத்தில் அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. கமல் சார், சரிகா, ஸ்ருதிஹாசன் எல்லோரும் அக்‌ஷராவை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள்.

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பைக் கொடுக்க முடியும்.

சென்னை எனக்கு எப்போதும் பிடித்த இடம். என்னுடைய உறவினர்கள் பலரும் இங்கு தான் வசிக்கிறார்கள். சின்ன வயதில் இங்கு தான் சைக்கிளில், காரில் எல்லாம் பயணித்திருக்கிறேன். டைலர்ஸ் ரோட்டில் சுற்றியிருக்கிறேன். அந்த நேரத்தில் இப்போது பேசுவதை விட நன்றாக தமிழ் பேசினேன். ஸ்டைல் கிங் ரஜினி சார், நடிப்பின் உச்சம் கமல் சார் எல்லோருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் சொத்து, இந்தியாவின் பெருமை.

'பில்லா', 'சகலகலா வல்லவன்' என பழைய கிளாசிக் படங்களை ரசித்திருக்கிறேன். சமீப காலங்களில் 'ஆரண்ய காண்டம்', 'வீரம்', 'வேதாளம்' போன்ற தமிழ்ப் படங்களை பார்த்து ரசித்தேன்

இவ்வாறு விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x