Last Updated : 17 Aug, 2017 05:37 PM

 

Published : 17 Aug 2017 05:37 PM
Last Updated : 17 Aug 2017 05:37 PM

திரைப்படங்களின் வசூல் கிடைக்காமல் திணறும் தயாரிப்பாளர்கள்: மவுனம் சாதிக்கும் தமிழக அரசு

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு தொடர்ச்சியாக மவுனம் சாதிப்பதால், திரையரங்குகளிலிருந்து தயாரிப்பாளருக்கு வரும் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியின் மீது கேளிக்கை வரி இருக்கும் என்று தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைக் குழுவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழ் திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு முறை நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தற்காலிகமாக கேளிக்கை வரி நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்திருந்தாலும், முழுமையாக நீக்கம் என்று அறிவிக்கவில்லை. மேலும் ஜிஎஸ்டி வரி தொடர்பாகவும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனால், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வெளியான படங்களின் வசூல் எதையுமே திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு சமர்ப்பிக்கவில்லை. எப்போதுமே வாரத்துக்கு ஒருமுறை படத்தின் வசூல் இவ்வளவு, விநியோகஸ்தர் பங்கு போக மற்றதை தயாரிப்பாளர்களுக்கு அளித்து வந்தார்கள்.

தற்போது ஜிஎஸ்டி எவ்வளவு, கேளிக்கை வரி உண்டா இல்லையா என்று எதுவும் தெரியாதக் காரணத்தால் 'இவன் தந்திரன்', 'வனமகன்', 'விக்ரம் வேதா', 'மீசைய முறுக்கு' உள்ளிட்ட படங்களின் வசூலை இன்னும் முழுமையாக திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு அளிக்கவில்லை.

தமிழக அரசு தொடர்ச்சியாக மவுனம் சாதித்து வருவதால், தயாரிப்பாளர்களுக்கு நாளுக்கு நாள் நஷ்டம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x