Published : 19 May 2017 04:23 PM
Last Updated : 19 May 2017 04:23 PM

2-வது கணவரிடம் இருந்து மகளை கடத்தவில்லை: வனிதா விஜயகுமார் விளக்கம்

''விவாகரத்தான எனது இரண்டாவது கணவரிடம் இருந்து மகளைக் கடத்தவில்லை. மகளின் விருப்பத்தின் பேரிலேயே என்னுடன் அழைத்து வந்தேன்'' என்று வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆனந்தராஜன் என்பவரை 2009-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், இருவரும் 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

வனிதாவின் சம்மதத்தோடு ஜெயனிதாவை ஆனந்தராஜனே வளர்த்து வந்த நிலையில், மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலங்கானா மாநிலம் அல்வால் காவல் நிலையத்தில் ஆனந்தராஜன் புகார் அளித்துள்ளார். குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக 'தி இந்து' இணையத்திடம் பேசிய வனிதா விஜயகுமார், ''இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு. 2011-ல் விவாகரத்தான போதே, மகளை திங்கள் முதல் வெள்ளி வரை அவர் பார்த்துக்கொள்வார் எனவும், சனி, ஞாயிறுகளில் நான் பார்த்துக் கொள்வதாகவும் முடிவானது. ஆனால் 2014-ல் திடீரென ஆனந்தராஜன் ஹைதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரியை அளிக்கவில்லை; செல்பேசி எண்ணையும் மாற்றிவிட்டார்.

தொடர்பு கொள்ள முடியவில்லை

இமெயில் முகவரி மட்டுமே என்னிடம் இருந்தது. தொடர்ந்து மெயில்கள் அனுப்பியும் பலன் இல்லை. 10 மெயில்கள் அனுப்பினால் சில சமயங்களில் 1 மெயிலுக்கு பதில் அனுப்புவார். ஃபேஸ்புக்கில் கேட்டாலும் பதில் கிடைக்காது. அதில் இடப்படும் புகைப்படங்களைப் பார்த்து என் மகள் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்துகொள்வேன். தொடர்பு கொள்ள வழியே இல்லாமல் 3 வருடங்கள் என் மகளைப் பார்க்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் எனக்கு புது எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய என் மகள், தான் பாதுகாப்பாக இல்லை என்றும், மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறினாள். உடனடியாக வந்து அவளை அழைத்துச் செல்லுமாறும் கூறினாள். இருக்கும் இடம் பற்றிக் கேட்டதற்கு, முகவரி தெரியாது என்றும், அவள் தினமும் செல்லும் இசைப் பள்ளியின் பெயரைக் கூறி அங்கே வரச் சொன்னாள்.

காவல் நிலையத்தில் புகார்

உடனடியாக அடுத்த விமானம் பிடித்து ஹைதராபாத் சென்றேன். அங்கே சென்று கடத்தல் புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே அல்வால் காவல் நிலையத்தில்தான் புகார் கொடுத்தேன். காவலர்கள் உதவியுடன் என் மகளை மீட்டு வந்தேன். இப்போது அவர் என்னுடன்தான் இருக்கிறாள். அவளுக்கு தந்தையிடம் திரும்பிச் செல்ல விருப்பமில்லை.

என் மகள் என்னுடன் விரும்பி வந்ததை எப்படிக் கடத்தல் என்று கூறமுடியும். இந்த பிரச்சினையை சட்டபூர்வமாக சந்திப்பேன். என்னுடைய வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x