Last Updated : 11 Apr, 2016 02:47 PM

 

Published : 11 Apr 2016 02:47 PM
Last Updated : 11 Apr 2016 02:47 PM

24-க்கு பலம் ரஹ்மான்தான்: குட்டிக் கதையுடன் சூர்யா புகழாரம்

'24' படத்தை ஒப்புக் கொண்டு எங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான் என சூர்யா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியது, "'24' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து தொடர்ச்சியாக கைதட்டினார்கள். அதற்காக தான் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம். மற்ற நாயகர்கள் மாதிரி நான் இல்லை. ரசிகர்களைப் பார்த்தே 2 வருடங்களுக்கு மேல் இருக்கும். உங்களை எல்லாம் நான் தனியாக சந்திப்பதே இல்லை. நடித்த 3 படங்களுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதால் சென்னையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்று எனக்கு பெரிய குற்ற உணர்ச்சி இருக்கிறது.

ஒரு கதையைக் கேட்டவுடன் தயாரிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஒரு அழகான குழுவும் அமைந்தது. அந்த குழுவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரு சாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தவுடன் போய் கை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். காசுக்காக இல்லாமல் அனைவருமே மனதார பணியாற்றி இருக்கிறார்கள்.

என் அப்பா இதற்கு முன்பு எந்த ஒரு மேடையிலும் இப்படி பேசியதில்லை. முதல் முறையாக அப்பா இப்படி பேசிப் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக தான் பார்க்கிறேன். அவருடைய அழகான வார்த்தைகளுக்கு அடையாளம் கொடுத்தது, வழிகாட்டியது எல்லாமே ரசிகர்கள் தான். இந்த காலகட்டத்தில் என்னை ஒரு நடிகனாக்கி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சரியான படம் பண்ணினால் மட்டும் ஜெயிக்க வையுங்கள். தப்பான படம் நான் பண்ணினாலும் ஜெயிக்க வைக்காதீர்கள். அப்போது தான் நான் இன்னும் நல்ல படங்கள் கொடுக்க முடியும். இன்னும் நல்ல கதைகள் தேடி ஒட முடியும். நல்ல படங்களை மட்டும் ஜெயிக்க வையுங்கள், பரவாயில்லை.

20 வயதிற்குள் ஒரு குறும்படம் பண்ணி தேசிய விருது வாங்கியவர் இயக்குநர் விக்ரம் குமார். அவருடைய ஒவ்வொரு படத்தின் கதையும் வேறுபடும். எங்கே வாய்ப்பு இருக்கிறதோ, போய் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு தைரியமான ஆள். அவரைப் போல அனைவருமே கிடைக்கும் வாய்ப்பில் ஜெயிக்க வேண்டும். எல்லைகள் தாண்டியும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணம் விக்ரம் குமார். 'மனம்' என்ற ஒரு அழகான தெலுங்கு படத்தைக் கொடுத்துவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார்.

நாலரை மணி நேரம் கதை சொன்னார் விக்ரம். அவர் சொல்லி முடித்தவுடன் எழுந்து நின்று கைதட்டினேன். என் பொழுதுபோக்கிற்காக நான் இந்த படத்தை பண்ணவில்லை. உண்மையாக மனதார ஒரு படத்தை பண்ணியிருக்கிறோம்.

இக்கதைக்காக என்னவெல்லாம் பண்ணலாம் என்று பேசினோம். அப்போது இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான் என்று சொன்னார்கள். உடனே அவருக்கு "ஒரு கதைக் கேட்டேன். நீங்கள் கேட்க வேண்டும். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். 2 நாட்களில் போய் கதைச் சொன்னார். அரை மணி நேரம் போதுமா என்று கேட்டார். ரம்ஜான் நாட்கள் என்பதால் வீட்டில் இருந்து தொடர்ச்சியாக அவருக்கு போன் வந்தது. போய் வந்துவிடுகிறேன் என்று வந்து 6 மணி நேரம் கதை கேட்டார். இக்கதையை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதற்கு முக்கியமான காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான். 'காலம் என் காதலி' பாடலை முதலில் கொடுத்துவிட்டு 'என்ஜாய். ஆல் தி பெஸ்ட்' என்று குறுந்தகவல் அனுப்பினார்.

ஒரு சின்ன குழந்தை கடைக்குள் சென்றது. அக்கடையில் நிறைய சாக்லெட், கேண்டீஸ் உள்ள பாட்டில்கள் இருந்தன. அம்மாவும் பின்னாடியே வந்தார்கள். குழந்தையைப் போய் எடுத்துக் கொள் என்றார்கள். ஆனால் குழந்தை எடுக்கவே இல்லை. கடைக்காரரும் சொல்கிறார் ஆனால் அக்குழந்தை எடுக்கவில்லை. இறுதியாக கடைக்காரர் தன்னுடைய கையால் நிறைய சாக்லெட் கொடுத்தவுடன் அக்குழந்தை தன்னுடைய சட்டையில் வாங்கிக் கொண்டது.

அந்த அம்மா "என்ன நீ.. நான் தான் எடுத்துக்கோனு சொல்றேன்ல. பிறகு ஏன் எடுக்கவில்லை? " என்று குழந்தையிடம் கேட்டார்கள். உடனே அக்குழந்தை "என்னுடைய கை ரொம்ப சிறியது, அந்த கடைக்காரர் கை ரொம்ப பெரியது. அவர் எடுத்துக் கொடுத்தால் நிறைய வரும். அதனால் தான் நான் எடுக்கவில்லை" என்றது. அதே போல தான் நாம் கடவுளிடம் கேட்டால் ரொம்ப சின்னதாக கேட்டு விடுவோம். ஆனால் கடவுளாக கொடுத்தால் பெரியதாக கொடுத்தார். அதே போல தான் ரஹ்மான் சாரிடம் போய் இசை எல்லாம் கேட்க முடியாது. நாம் கேட்பதை விட அவர் நிறைய கொடுப்பார். இந்த படத்துக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார்.

நான் ஒரு தற்குறி, அதனால் தான் என்னைச் சுற்றி எப்போதுமே அறிவாளிகளை வைத்து கொள்ள முயற்சி செய்வேன். ரஹ்மான் சாரிடம் சேட் மசாலா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் பேசலாம். நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

சமந்தா மற்ற படங்களை விட இப்படத்தில் மிகவும் அழகாகத் தெரிவார். 20 வருஷம் ஒருவரை ஒருவர் தெரியும் என்று சொல்லிவிட்டு முதல் காட்சி வைத்தால் நித்யா மேனன் அந்த பாத்திரமாக மாறி இருப்பார். அது எப்படி என்று தெரியவில்லை. ஒரு காட்சிக்கு முன்னாடி 20 விநாடிகள் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அப்புறமாக அந்த பாத்திரமாக வருவார். இரட்டை வேடங்களே பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இதில் மூன்று வேடங்கள் பண்ண வைத்திருக்கிறார் விக்ரம் குமார்.

ரசிகர்கள் எங்களுடைய வளர்ச்சியின் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள். காலையில் இருந்து நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். அனைவருக்குமே ஒரு நேரம் கிடைக்கும் போது நாம் நம்மை நிரூபித்துக் கொள்ளலாம். அப்துல் கலாம் பேப்பர் போடும் பையனாக இருந்து ஜனாதிபதியானார். அவர் தன்னுடைய நேரத்தை அழகாக தனது ஆக்கிக் கொண்டார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கேள்வித்தாளைப் பார்த்துவிட்டே 20 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளாதீர்கள். மனது வலிக்கிறது. படிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். இன்னும் மதிப்பெண் கூட வரவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கிறது. பெருமையாக இருங்கள். சும்மா எல்லாம் ஒருவரை படைக்கவில்லை. அவசரப்படாதீர்கள். நான் எல்லாம் ஒரு டம்மி பீஸ். கல்லூரி முடிக்கும் வரை எனக்கு ஒன்றுமே தெரியாது. வேறு மாதிரி எனக்கொரு வாழ்க்கை அமைந்தது. வாழ்க்கை என்பது பேப்பர் கிடையாது, கட் பண்ணுவதற்கு. " என்று சூர்யா பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x