Published : 26 Jul 2014 11:03 AM
Last Updated : 26 Jul 2014 11:03 AM

ஷூட்டிங் ஸ்பாட்: ரஜினியை நினைவூட்டும் அஜித்தின் அப்ரோச்!

அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு என்ன தலைப்பு, இன்று எங்கு ஷுட்டிங் என எந்த ஒரு செய்தியைக் கேட்டாலும் படக்குழுவிடம் இருந்து வரும் பதில் தெரியாது என்பது தான். அந்தளவிற்கு படக்குழு, படத்தைப் பற்றி எந்தொரு தகவலையும் கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது.

படத்தைப் பற்றி யாரிடமாவது தகவலைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு அப்படக்குழுவில் பணியாற்றி வருபவருடன் பேசினேன். அவர் கூறிய வார்த்தைகள் அப்படியே..

"அஜித் - கெளதம் மேனன் படப்பிடிப்பு என்று துவங்கப்பட்டதோ, அன்றே முடிவு செய்துவிட்டோம், படப்பிடிப்பு எங்கே என்பது படக்குழுவிற்கு கடைசி நேரத்தில் தான் தெரியும் . முதலில் கலை இயக்குநர் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் நாளைக்கு இந்த காட்சிக்கு இங்கே எடுக்கிறோம் என்பார்கள். ஏனென்றால், எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் அஜித் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். படப்பிடிப்பிற்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் நடந்துக் கொள்ளும் விதத்தை பற்றி கண்டிப்பாக கூற வேண்டும். இப்படத்தில் தனது பாத்திரத்திற்காக 'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களை விட எடையைக் குறைத்து இருக்கிறார். 'ஆரம்பம்' படத்தின் லுக்கை விட இப்படத்தில் இன்னும் ஸ்லிம்மாக இருப்பார். மிகப்பெரியளவில் எடையைக் குறைக்க அவர் ஊசியோ, மாத்திரைகளோ எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கு முதுகு மற்றும் கால்களில் இருக்கும் பிரச்சினை உங்களுக்கே தெரியும். சிறு சிறு உடற்பயிற்சிகளை மட்டுமே செய்து உடல் எடையை வெகுவாகவே குறைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு வெறித்தனமாக செய்திருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமன்றி, படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அஜித்திற்கு என்று தனியாக கேராவேன் இருக்கும். ஆனால், அதை காட்சிகளுக்கு உடை மாற்ற மட்டுமே உபயோகப்படுத்துவார். காலை 10 மணிக்கு வந்தார் என்றால், அன்றைய காஸ்ட்டியூமை கேராவேனில் மாற்றிவிட்டு படப்பிடிப்பிற்கு வருவார். சாயங்காலம் வரை அதே காஸ்ட்டியூம் என்றால் எங்களுடன் தான் இருப்பார். சாப்பாடு எல்லாம் எங்களுடன் தான்.

ஒரு முறை காலை 10 மணிக்கு வந்தார், இரவு வரை படப்பிடிப்பு சென்றுக் கொண்டே இருந்தது. அன்றைய தினம் இயக்குநரிடம் சென்று மாலை 6 மணியோடு என்னோட கால்ஷீட் முடித்துவிட்டது என்று கிளம்பவில்லை. இயக்குநர் உங்கள் காட்சி முடிந்தது என்றவுடன் தான் கிளம்புவார். இவ்வளவு சிம்பிளாக இருக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை.

ரஜினியும் எப்போதுமே கேராவேன் உபயோகிக்க மாட்டார் என்று சொல்வார்கள். மிகவும் சிம்பிளாக இருப்பதால் தான் அனைவருமே சூப்பர் ஸ்டார் என்றார்கள். ரஜினிக்கு பிறகு அஜித் தான் மிகவும் சிம்பிளாக இருக்கிறார்.

சென்னையில் மவுண்ட் ரோட்டில் 10 நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதே அரிது. அங்கு அனுமதி வாங்கியவுடன், படப்பிடிப்புக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று முடிவு செய்தோம். இறுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இரவு நேரத்தில் சென்று அதிகாலை திரும்பி விடுவோம்.

மவுண்ட் ரோடு காட்சிகளில் அஜித் மாருதி கார் தான் ஒட்டுவார். மற்றொரு நடிகர் என்றால் அதில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள். காரணம், அவ்வளவு குறுகிய காரில் கேமிரா பொருத்தி சேஸிங் காட்சிகள் எடுத்தோம். என்ன சொன்னாலும், கஷ்டமாச்சே என்று கொஞ்சம் கூட மூஞ்சை சுழிக்க மாட்டார். அவ்வளவு கஷ்டப்பட்டு அதில் நடித்துக் கொடுத்தார்.

தற்போது 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அஜித், த்ரிஷா, தேவி அஜித், குழந்தை அனிகா பங்குபெறும் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் என்ன கேரக்டரில் நடிக்கிறார், படத்தின் என்ன வகை கதை எல்லாம் என்னால் கூற முடியாது.

படப்பிடிப்பில் இருப்பதால் சொல்கிறேன். அஜித் ரசிகர்கள் இதுவரை அஜித்தை இவ்வளவு ஸ்டைலாக பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி" என்றார்.

இப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோருடன் தேவி அஜித் என்ற மலையாள நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி, கேரள அரசு விருது வென்ற அனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஜித் - த்ரிஷா இருவருக்கும் அனிகா குழந்தையாக நடித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தாமரையின் வரிகளில் கார்த்திக் பாடும் ஒரு ரெமாண்டிக் பாடல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அஜித், த்ரிஷா இருவரும் இப்பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x