Last Updated : 25 Apr, 2016 12:09 PM

 

Published : 25 Apr 2016 12:09 PM
Last Updated : 25 Apr 2016 12:09 PM

விடிவியில் சிம்பு வந்தது முதல் இந்தி பட வாய்ப்பு கிடைத்தது வரை: தனுஷ் பகிர்ந்த தகவல்கள்

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஆடுகளம்' படத்திற்கு கிடைத்த தேசிய விருது மற்றும் 'ராஞ்சனா' இந்தி வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி கெளதம் மேனனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் தனுஷ்.

இயக்குநர் கௌதம் மேனன் சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றவுள்ளார்.

'Uraiyaadal and stuff..' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் தனுஷை பேட்டி எடுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இப்பேட்டி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்பேட்டியின் முதல் பாகத்தை யூடியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

இப்பேட்டியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் குறித்து தனுஷ் மற்றும் கெளதம் மேனன் இருவரும் பேசியிருக்கிறார்கள். அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள்..

கெளதம் மேனன்: 'விண்ணைத்தாண்டி வருவாயா' பட சமயத்தில் ஒரு படம் குறித்து பேசினோம். அப்படத்தை முதலில் நீங்கள் தான் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அப்படத்தை நீங்கள் பண்ணியிருந்தீர்கள் என்றால் சிம்புவை விட வேறு ஒரு விதமாக பண்ணியிருப்பீர்களா?

தனுஷ்: பண்ணியிருக்கலாம். என்னை விட சிம்பு தான் பொருத்தமாக இருந்தார். அவரிடம் இருக்கும் வசீகரம் என்னிடம் கிடையாது. அந்தப் படத்தை என்னால் வித்தியாசமாக பண்ணியிருக்க முடியும். ஆனால் சிம்பு மாதிரி பண்ணியிருக்க முடியாது. எனக்கு லோக்கல் பையன் என்ற இமேஜ் இருக்கிறது. சிம்புவிடம் இருக்கும் வசீகரம் என்னிடம் கிடையாது. அப்படத்தை நான் பார்த்தவுடன் சிம்புவே பொருத்தமாக இருந்தார் என்று நினைத்தேன்.

கெளதம் மேனன்: கேமரா முன்பு தனுஷ் எப்படி? 4-5 டேக் போனால் சோர்ந்து விடுவீர்களா?

தனுஷ்: நான் நடிகனாக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. சமையல் வல்லுநராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதும் எனக்கு சமைக்க தெரியாது. சமைத்து மற்றவர்களுக்கு கொடுத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய எனக்குப் பிடிக்கும். என் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு உணவு பரிமாறுவது ரொம்ப பிடிக்கும். என் அம்மா சமைக்கும்போது அவருக்கு உதவியாக இருப்பது ரொம்ப பிடிக்கும். ஆனால் என் அப்பா எனக்காக வேறு ஒரு எண்ணம் வைத்திருந்தார். எனது முதல் 2 படங்களின் போது இங்கிருந்து எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்று நினைத்தது உண்டு.

ஒரு கட்டத்தில் நடிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவுடன் நிறைய ஹோம்-வொர்க் பண்ணினேன். அந்த விஷயத்தில் என் அண்ணன் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார். என்னிடம் பேசுபவர்களின் குணாதிசயங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நடிப்பில் 2-3 டேக் வந்துவிட்டது என்றால் ரொம்ப சோகமாகி விடுவேன். எப்போதுமே எந்தவித நினைப்பும் இன்றி வெறும் மனதுடன் தான் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்வேன். எனக்கு இயக்குநர் தான் சொல்லிக் கொடுத்து என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு செயலி மட்டுமே, எனக்கு தகவல்கள் வெளியே இருந்து தான் வர வேண்டும். எனக்கு இப்போது வரை நடிப்பு என்றால் என்ன என்று தெரியாது. அது இயக்குநருடைய பணி தான்.

கெளதம் மேனன்: 'ஆடுகளம்' படத்தில் லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு காரின் மீது ஏறி நடனமாடுவது எல்லாம் வெற்றிமாறன் சொல்லிக் கொடுத்தது தானா?

தனுஷ்: அப்படத்திற்காக வெற்றிமாறன் நிறைய சொல்லிக் கொடுத்தார். மதுரை ஆட்கள் நிறைய பேர் படப்பிடிப்பில் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரை வட்டார மொழி பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தார். மதுரையில் இருந்து 100 கிமீ தூரத்தில் இருக்கும் சங்கராபுரம் தான் என் அம்மாவின் ஊர். ஆகையால் அந்த விஷயங்கள் எனக்கு புதுமையாக தெரியவில்லை.

கெளதம் மேனன்: நீங்கள் 'மரியான்' பண்ணுவதற்கு முன்னால் இயக்குநர் பரத்பாலா தேசிய விருது குழுவில் இருந்தார். 'ஆடுகளம்' நடிப்பைத் தாண்டி, அந்த பாடலில் நீங்கள் நடனமாடியதை வைத்து தான் மொத்த குழுவுமே உங்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சொன்னதாக பரத்பாலா சொன்னார்..

தனுஷ்: அச்சமயத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காமெடி பண்ணுகிறார்கள் என்று நினைத்தேன். செளந்தர்யா தான் முதலில் சொன்னார். அப்போது தலைவர் மருத்துவமனையில் இருந்தார். அவர் என்னிடம் சொன்னவுடன் நான் சிரிக்கக்கூட இல்லை. அப்பாடல் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அப்பாடல் மூலமாக தான் எனக்கு இந்திப் பட வாய்ப்பு கிடைத்தது. அனைவருமே எனக்கு கொலவெறி பாடல் மூலமாக தான் 'ராஞ்சனா' வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஆனந்த் எல்.ராய் அப்பாடல் பார்த்துவிட்டு,இந்த மாதிரி ஒரு பையனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தனுஷ் இந்தி படங்கள் எல்லாம் பண்ண மாட்டார் என்று தெரிவித்துவிட்டார்கள்.

'கொலவெறி' ஹிட்டான சமயத்தில் தான் என்னிடம் அவர்களால் பேச முடிந்தது. என்னிடம் கதையை கூறியவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்தி தெரியாது, பெரிய பட்ஜெட் யோசியுங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் ஆனந்த் எல்.ராயோ இக்கதைக்கு நீங்கள் வேண்டும், இல்லையென்றால் நான் பண்ணவில்லை என்று தெரிவித்தார். அவருடைய நம்பிக்கையினால் தான் என்னால் அப்படத்தை பண்ண முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x