Published : 21 Feb 2015 10:19 AM
Last Updated : 21 Feb 2015 10:19 AM

விஜய், சூர்யாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: கௌதம் வாசுதேவ் மேனன்

“என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து 7 வருடங்கள் ஆகிறது. நான் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது” என்று ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை கையில் பிடித்தபடி சிரிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

தொடர்ச்சியாக போலீஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே. இதற்கான காரணம் என்ன?

நான் இயக்கிய ‘மின்னலே’, ‘விண் ணைத் தாண்டி வருவாயா’, ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களெல்லாம் போலீஸ் படங்கள் இல்லையே. ஆக்‌ஷன் பாணியில் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் போது, போலீஸைச் சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்து பண்ணுகிறேன்.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் குற்றங்கள் என்பது இருக்காது. ஆனால், போலீஸ் அதிகாரி களின் வாழ்க்கையில் குற்றங்கள், ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களைப் பண்ணும் போது போலீஸ் படங்களைப் பண்ணுகிறேன்.

அன்புச்செல்வன், ராகவன், சத்யதேவ். இதில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

என்னைப் பொறுத்தவரை மூன்றுமே ஒரு கதாபாத்திரம்தான். 28 வயதில் இருக்கிற அன்புச்செல்வன்தான், 38 வயதில் சத்யதேவ். என் மூன்று போலீஸ் அதிகாரி பாத்திரங்களையும் எடுத்துப் பார்த்தால், நிறைய விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும்.

‘காக்க காக்க’ படம் முடிந்தவுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தொடக்கத்தை வைத்தால், இது அங்கிருந்து தொடங்கிய படம் மாதிரிதான் இருக்கும்.

‘காக்க காக்க’ படத்தில் சின்ன வயது சூர்யாவை நான் காட்டவில்லை. ‘என்னை அறிந்தால்’ படத்தில் காட்டியது அவரு டைய சின்ன வயது வாழ்க்கையாக இருந்திருக்கலாம். மாயா இறந்தவுடன் விவாகரத்தான ஒரு பெண்ணை சந்தித்து இருக்கலாம். என் மூன்று போலீஸ் அதிகாரிகள் பாத்திரத்தில் எனக்குப் பிடித்தது சத்யதேவ் தான்.

‘என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகம் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டு இருக்கிறதே?

‘என்னை அறிந்தால்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக் கிறது. இதில் சத்யதேவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதை வைத்து இரண்டாவது பாகத்தின் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதை சண்டைப் படமாகவும் எடுக்கலாம்.

உணர்ச்சிபூர்வமான கதை யாகவும் இருக்கலாம். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதிவிட்டு அதை அஜீத் சாரிடம் கொடுப்பேன். கண்டிப்பாக அவர் அந்தப் படத்தை பண்ணுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

‘துருவநட்சத்திரம்’, ‘யோஹன்’, ‘சென் னையில் ஒரு மழைக்காலம்’ படங்களின் நிலைமை என்ன?

எனக்கே தெரியாது. ‘யோஹன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த 2 நாட் களுக்கு முன்பு ரத்தானது. ‘சென்னை யில் ஒரு மழைக்காலம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி 25 நாட்கள் நடத்தினோம்.

அப்படத்தைப் பொறுத்தவரை அதில் நடித்தவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்று நினைத்தேன். எங்கேயோ தப்பு நடக்கிறது என்று தோன்றியதால் அதை நிறுத்தினேன். மூன்று படங்களையும் கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் தொடங்குவேன். அதில் சந்தேகமில்லை.

சூர்யா, விஜய் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் ‘துருவ நட்சத்திரம்’ ‘யோஹன்’ படங்களை நிறுத்தியதற்கு காரணமா?

என்னைப் பொறுத்தவரை அவர் களுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நடிகர், கதையை நம்பி படம் பண்ணும் போது அப்படத்தின் கதை அவர்களுக்கு முழுமையாக பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் கதை விஷயத்தில் கொஞ்சம் உடன்பாடு இல்லை.

‘இந்தக் கதை வேண்டாம் கெளதம். வேற ஒண்ணு பண்ணலாம்’ என்று சொன்னார்கள். எந்த காரணத்துக்காக இதைப்பற்றி சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்களுடைய கருத்து. அதில் நான் எந்தத் தப்பும் சொல்லமாட்டேன்.

கெளதம் மேனன் படங்கள் என்றாலே ஏ சென்டரில் மட்டும்தான் நன்றாக ஓடும் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?

நான் படம் பண்ணும் போது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என்றெல்லாம் நினைத்து படம் பண்ணுவதில்லை. எனக்கு என்ன தெரியுமோ அதைப் பண்ணுகிறேன். நாயகர்கள் கேட்கும் போது அவர்களோடு இணைந்து பண்ணு கிறேன். என்னுடைய வண்டி ஓடிக் கொண்டே இருக்கிறது.

படம் வெளியான பிறகு எந்த சென்டர்களில் படம் சரியாக போகவில்லை என்று நான் கேட்க மாட்டேன். ஏ சென்டரில் மட்டும்தான் என் படம் ஓடுகிறது என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் என்னுடைய சுபாவம்.

‘வாரணம் ஆயிரம்’, ‘என்னை அறிந் தால்’ உள்ளிட்ட உங்களுடைய படங்கள் மிகவும் நீளமாக இருக்கிறதே. இப்போது கூட 'என்னை அறிந்தால்' படத்தில் சில காட்சிகளைக் குறைத்திருக்கிறீர்கள்?

எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் தயாரிப்பாளராக இருந்தால் கண்டிப்பாக காட்சிகளைக் குறைத் திருக்க மாட்டேன். தயாரிப்பாளர், ‘எனக்கு கொஞ்சம் பயமாக இருக் கிறது, எந்தவொரு இடத்திலும் மெது வாக நகர்கிறது என்று ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது’ என்றார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் தயாரிப் பாளர் சில காட்சிகளைத் தூக்கினார்.

ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. முதல் 3 நாட்கள் முடிந்தவுடன், வேறு ஒரு தரப்பு மக்கள் இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டமாக படம் பார்க்காமல் அமைதியாக பார்ப்பார்கள். அவர் களுக்கு இது பிடிக்கும்.

போலீஸ், காதல் இந்த இரண்டையும் தாண்டி வேறு கதைக்களத்தில் எப்போது படம் பண்ணுவீர்கள்?

எனக்கு போலீஸ், காதல் இரண்டை யும் தவிர வேறு தெரியாது. அதுதான் உண்மை. எனக்கு தெரிந்ததைத்தானே சினிமாவாக பண்ண முடியும். ஆக்‌ஷன் என்று இறங்கினால் அது போலீஸ் படமாக இருக்க வேண்டும் என்று நினைக் கிறேன். காதல் என்று இறங்கினால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக் கிறேன்.

இந்த இரண்டுக்குமே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்களுக்காக படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கு அந்த ரசிகர் கூட்டம் குறைகிறதோ அன்றைக்கு வேறு படங்களைப் பண்ணுவேன்.

தற் போது படங்களின் சென்சாரில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

சென்சாரை பொறுத்தவரை அவர்கள் செய்வது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் பார்க்கலாம், ஆனால் அவர்களுடன் பெற்றோர்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது.

அதைத்தான் சென்சாரிலும் சொல்லி யிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத் ததில் எனக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்துமே இல்லை.

வரிச்சலுகை விஷயங்கள்தான் இன்னும் கொஞ்சம் மாற வேண்டும் என்று தோன்றுகிறது. யு/ஏ என்றால் ஒரு வரி, யு என்றால் ஒரு வரி என்ற நடைமுறை இங்கு மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் கிடையாது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் யு சான்றிதழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x