Published : 26 Feb 2016 06:37 PM
Last Updated : 26 Feb 2016 06:37 PM

விசாரணையை விவாதிக்க வைத்ததே தனிச்சிறப்பு: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

'விசாரணை' படத்தை அப்படி விவாதிக்க வைப்பது தான் தனிச் சிறப்பு என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விசாரணை'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்தின் கருத்துரை - கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமரன் உள்ளிட்ட பலரோடு இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது:

"மலையாளம், மராத்தி, வங்காள சினிமாக்கள் பற்றி பேசும் இடத்தில் தமிழ் சினிமாவை பற்றியும் பேச வைத்திருப்பதால் இயக்குநர் வெற்றிமாறனை கை தட்டி வரவேற்கிறேன்.

இன்று நான் மதிக்கும் தமிழ் சினிமாவின் முக்கிமான ஆளுமைகள் அனைவரும் வியந்து திரும்பி பார்த்து யார் வெற்றிமாறன் என்று கேட்கின்றனர். அவரின் 'விசாரணை' படத்தை பார்க்க விரும்புகிறார்கள். பார்த்த இயக்குநர்களில் அனுராக் கஷ்யப், இந்தியாவிலேயே நான் பார்த்த சிறந்த படம் இது தான் என்று கூறியிருக்கிறார். அவருடைய ரசனை எனக்கு தெரிந்தவரை கீழானது அல்ல.

இரண்டு தனிப்பட்ட கதைகள் போல தான் இந்த படம் இருக்கிறது. முதல் பகுதி ஒரு கதையாகவும் இரண்டாம் பகுதி வேறு கதையாகவும் இருக்கின்றது. ஒரு எழுத்தாளனாக திரைக்கதை எழுதுபவன் என்ற முறையில் ஒரு படத்தில் நான் பார்க்கும் முதல் பகுதி அதன் திரைக்கதை தான். எளிமையாக இந்த படத்தை சொல்ல வேண்டும் என்றால் சிறிய கோடாகவும் பெரிய கோடாகவும் இது பிரிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி சிறிய கோடாகவும் அதில் சாமானியர்கள் போலீஸிடம் மாட்டிக்கொண்டு படும் துன்பதை காண்பிக்கின்றது.

இரண்டாம் பாதி பெரிய கதைகளைக் கொண்டு இருக்கின்றது.இந்த படத்தில் இரண்டு வகையான வன்முறை நடக்கின்றது. ஒன்று ஆயுதங்களை வைத்து நடக்கின்றது. இதை விட சொற்களை வைத்து நடக்கின்ற வன்முறை தான் கொடுமையாக இருக்கின்றது.

நிச்சயமாக தமிழ் பேசுபவன் இன்னொரு தமிழனுக்கு உதவ மாட்டான், அப்படி உதவி இருந்தால் ஈழத்தில் வன்கொடுமை நடந்து இருக்காது. என்னுடை ஈழ நண்பர்கள் “நீங்க என்ன சார் ஆந்திரா போலீசிடம் அடி வாங்கி இருக்கிங்க. நாங்க அகதிகளா உலகம் முழுக்க அடி வாங்கி இருக்கோம். ரஷ்யா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் மாட்டிகொண்டு மொழி தெரியாமல் நிறைய வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறோம். ஆனால் ஓரே வித்தியாசம் என்னவென்றால் அவை அனைத்தும் சிறைச்சாலை. இங்கு காவல் நிலையத்தில் நடக்கிறது” என்று சொன்னார்கள். நான் அறிந்தவரையில் பெரும்பாலும் இப்படி பட்ட கொடுமைகள் சிறைச்சாலையில் தான் நடக்கும். இங்கு இது காவல் நிலையத்திலே நடக்கிறது.

எழுத்தாளனாக இந்த கதையின் இறுதியை யூகிக்க முடிகிறது. கம்யூனிசம் பற்றி இந்த படத்தில் வெற்றிமாறன் காண்பிக்க தவற விட்டார். அதிகபட்சம் ஆந்திர போலீஸ் நக்சல்களை ஒடுக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் கடுமையாக கைதிகளை நடத்துவார்கள். இது அரசியல் பற்றி வருவதால் வெற்றிமாறன் இதை பற்றிய காட்சிகளை காண்பிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த கதை நாவலில் இருந்தது போல் படத்தில் அனைத்து காட்சிகளும் காண்பிக்கபடவில்லை. கதை படித்ததால் இந்த குற்றங்கள் எனக்கு தெரிந்தது.

ஒரு திரைப்படம் நம்மை பேசவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும் .அது சார்ந்த கருத்துக்களை விவாதிக்கவும் வைக்க வேண்டும். அப்படி விவாதிக்க வைப்பது தான் இந்த படத்தின் தனிச் சிறப்பு. உலக சினிமா என்பது நாம் கேலி செய்வதற்குண்டான விஷயம் அல்ல.

உலக சினிமா உயர்ந்தது நம் சினிமா தாழ்ந்தது என்று நினைக்கின்றோம். அது அப்படி அல்ல. அதில் கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கின்றது. ஒரு படத்தின் காட்சிகள் எவ்வளவு நீளமாக இருக்கின்றது என்பதை முடிவு செய்வது இயக்குநர் தான். மக்களுக்கு உலக சினிமாவின் ரசனை இருந்தால் தான் இது போன்ற படங்கள் வெற்றி பெரும்" என்று பேசினார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது வீடியோ வடிவில்: