Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

ரத்தம் சிந்திய சூரி..கிணற்றில் குதித்த அண்ணாச்சி

தமிழ் சினிமாவில் இது காமெடி படங்களின் காலம். இதைப் பயன்படுத்திக்கொண்டு பல காமெடி படங்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகைப் படங்களில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’. தான் ஏற்கெனவே இயக்கிய ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘சுறா’ ஆகிய படங்களில் நகைச்சுவைப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், அந்த அனுபவத்துடன் இப்படத்தை முழுநீள காமெடிக் கதையாக இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா' தலைப்பே வித்தியாசமா இருக்கே. அப்படி எந்த விஷயத்துல பட்டைய கிளப்ப போகுது?

இந்தப் படத்தில் வித்தார்த்தும், சூரியும் அண்ணன் தம்பி. அவங்க பேரு வேல்பாண்டி, முத்துபாண்டி. அதனால்தான் இந்த தலைப்பு வைச்சுருக்கேன். மினி பஸ்ஸோட டிரைவர் வித்தார்த், கண்டக்டர் சூரி.. அந்த பஸ்ஸோட ஒனர் இமான் அண்ணாச்சி. இவங்க சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் சிரிப்பு சரவெடியாக இருக்கும். அது போக மனிஷா யாதவ், இளவரசு, கோவை சரளா, முத்துக்காளை இப்படி நிறைய முன்னணி நடிகர்களை எல்லாம் வைச்சு பட்டைய கிளப்ப போறோம். இதுக்கு முன்பும் பஸ் கண்டக்டர், டிரைவர் வச்சு பல படங்கள் வந்திருக்கிறது. அதிலிருந்தெல்லாம் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்.

காமெடி கதையென்றாலே குடிக்கறது, சிகரெட் பிடிக்கறது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசறதுன்னு ஆகிப்போச்சே?

இந்தப் படத்தில் அப்படி இல்லை. நகைச்சுவையோடு நல்ல மெசேஜும் சொல்லியிருக்கிறோம். ‘காதல் என்பது நீ என்னை கல்யாணம் பண்ணிக்க... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படினு சொல்றது மட்டுமில்ல. உனக்கு பின்னாடி என்ன பிரச்சினையிருக்கு. அதை நான் சரி பண்றேன். எனக்கு இந்த பிரச்சினையிருக்கு. இதை நீ சரிபண்ணு’ என்பதுபோன்ற பல விஷயங்கள் அடங்கினதுதான் காதல். இந்த மாதிரி விஷயங்களை கதையோட்டமா சொல்லியிருக்கேன். ஒரு துளிக்கூட ஆபாசம் இல்லாம, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாம பண்ணியிருக்கேன்.

வித்தார்த் நடிக்கும் முதல் காமெடி படம் இது. அவர் எப்படி நடிச்சிருக்கார்?

நல்லா பிரமாதமா அதே சமயத்துல எதார்த்தத்தை மீறமா நடிச்சிருக்கார். ‘மைனா’, ‘கொள்ளைக்காரன்’ இப்படி அவரு பண்ண படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களம்தான். முதல் முழுநீள காமெடி படமன்னா என்னோட படம்தான். என்ன ரோல் கொடுத்தாலும், பிரமாதமா பண்ணக்கூடிய மிகச்சில நடிகர்கள்ல வித்தார்த்தும் ஒருவர். அதேபோல சூரியை காமெடி நடிகர்கள் வரிசைல அடுத்த லெவலுக்கு நகர்த்துற படமா இந்த படம் இருக்கும். அந்த அளவிற்கு ரொம்ப பாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்கார்னு சொல்றதை விட வாழ்ந்திருக்கார்னு சொல்லலாம். சாட்டையால அடிச்சு பிச்சை எடுப்பாங்க இல்லையா. ஒரு சின்ன சீன்ல சாட்டைல அடிச்சு பிச்சை எடுக்குறா மாதிரி சூரி நடிச்சுருக்கார். உண்மைக்குமே ரத்தம் சிந்தி நடிச்சிருக்கார். அதேபோல பொள்ளாச்சில 48 அடி கிணத்துல இமான் அண்ணாச்சியை டூப் இல்லாம குதிக்க வைச்சுருக்கேன்.

‘சுறா’ படத்துக்கு பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

‘சுறா’க்கு பிறகு ‘பாக்கணும் போல இருக்கு’’ அப்படினு ஒரு படம் பண்ணியிருக்கேன். ஒரு சில பிரச்சினையால அந்த படம் இன்னும் வெளிவரல. 'பட்டைய கிளப்பணும் பாண்டியா' படத்துக்குப் பிறகு அந்த படமும் ரிலீஸாகும். அதற்கான முயற்சிகளும் நடந்துகிட்டு இருக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x