Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM

ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்த திருவாரூர் தங்கராசு

'ரத்தக்கண்ணீர'’தமிழ்த் திரைப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய திருவாரூர் கே.தங்கராசு (87) மாரடைப்பால் மறைந்தார். ஆனால், அவரது பெரியாரியக் கொள்கைகள் பகுத்தறிவாளர்களின் நெஞ்சில் மறையாமல் உள்ளன.

பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரான திருவாரூர் கே.தங்கராசு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். இவர், திருவாரூர் மாவட்டத்தில் காங்கிரஸ்காரராக இருந்தார். இந்தியாவின் சுதந்திர தினம் துன்ப நாள் எனப் பிரச்சாரம் செய்த பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தற்போதைய திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் சிங்கராயர், தண்டவலம் ரங்கராஜூ ஆகியோருடன் இணைந்து பெரியாரின் தொண்டரானார்.

தங்கராசு எழுதிய ராமாயணப் பகுத்தறிவு புத்தகத்தை காங்கிரஸ் அரசு தடை செய்த போது, அதை நாடகமாக அரங்கேற்றினார். நாகரிகம் என்ற பெயரில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால், என்ன விளைவு ஏற்படும் என்பதை ரத்தக்கண்ணீர் நாடகமாக எழுதி அதில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். பின்னர் இது திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். தங்கராசு திரைக்கதை, வசனம் எழுதினார். இவர் எழுதிய ‘அடியே காந்தா’என்ற வசனம், இன்றளவும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கராசுவின் இயல் பான பாவனைகள்தான், எம்.ஆர்.ராதாவின் நடிப்பாக வெளிப்பட்டது.

மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி பொதுச் செய லாளர் ஆனைமுத்து தங்கராசுவின் நண்பர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கொடுத்த எம்.ஆர்.ராதா, ஆனைமுத்துவின் பொதுக் கூட்ட பேச்சைக் கேட்டு, அந்த உணர்ச்சியில்தான் இந்த செயலை செய்ததாகக் கூறினார்.

ஆனைமுத்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, ‘1957ல் அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 3,000க்கும் மேற்பட்ட பெரியார் இயக்கத்தினர் சிறையிலிருந்தபோது, அதை எதிர்த்து தங்கராசுதான் மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார். பெரியார் எத்தனைக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பாரோ, அந்த அளவுக்கு தங்கராசுவும் பங்கேற்றி ருப்பார்,’ என்றார்.

ரத்தக்கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என 3 பெரும் வெற்றிபெற்ற திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய தங்கராசுவுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், ‘நான் சினிமாக்காரன் அல்ல, பெரியார் இயக்கப் பிரச்சாரகர்’ என்று கூறி திரைப்படத் துறைக்கு செல்லவில்லை.

அவரது சுயசரிதை கருத்துகள், ‘தங்கராசுவின் நினைவலைகள்’என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்புப் பணியில் ஈடுபட்ட திருப்பூர் பெரியார் தி.க. மாவட்டச் செயலாளர் கருமலையப்பன் கூறும்போது, ‘தங்கராசு அய்யா, சிறுவயதில் நகைக் கடையில் பணியாற்றியபோது, இயக்கப் பணிக்கு செல்லும் அவசரத்தில் கடையை பூட்ட மறந்துவிட்டார். நல்ல வேளையாக கடையிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை. அதனால் கடை முதலாளி, இயக்கப் பணிகளைப் பார் என்று அனுப்பிவிட்டார்.

ஆனால், அதே முதலாளி பிற்காலத்தில் தங்கராசு அவர்களை கடைக்கு மரியாதை நிமித்தமாக வரவழைத்தார். கிருஷ்ணகிரியில் தங்கராசு அய்யாவின் மேடைப் பேச்சால் கலவரம் ஏற்பட்டதாக, காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்தது. அப்போது, தானே நீதிமன்றத்தில் வாதாடி, விடுதலையானார்’ என்றார்.

தி.க.விலிருந்து அண்ணா பிரிந்தபோது, அண்ணாவின் அவசரம் என்ற தலைப்பில், எம்.ஆர்.ராதாவின் பெயரில், தங்கராசுதான் புத்தகம் எழுதி வெளியிட்டார்.

பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறும் போது, ‘ஆங்கிலம் மற்றும் சமஸ் கிருதத் தில் மிகவும் புலமை வாய்ந்தவர் தங்கராசு. அவரது புத்தகங்கள், பல பல்கலைக் கழகங்களில், மாணவர்களின் ஆராய்ச்சி நூல்களாக பயன்பட்டுள்ளன’ என்றார். தங்கராசுவுக்கு காந்தரூபினி என்ற மனைவியும், மலர்க்கொடி, மண்டோதரி என்ற மகள்களும், புகழேந்தி என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, தமிழக அரசின் செய்தித் துறையில் இணை இயக்குநராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x