Published : 04 May 2015 03:03 PM
Last Updated : 04 May 2015 03:03 PM

ரஜினி - ரஞ்சித் கூட்டணி உருவான விதம்!

45 நாட்கள் ரஜினியின் கால்ஷீட், மூன்று மாதங்கள் படப்பிடிப்பு, பொங்கலுக்கு படத்தை முடித்து வெளியிட இயக்குநர் ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.

ரஜினியும் தனது அடுத்தப் படம் நிச்சயம் ஹிட்டாக வேண்டும் என்று பல முக்கிய இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஷங்கர் கூறிய 'எந்திரன் 2', ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ரஞ்சித் என பலரும் ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இடையில், தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினி பேசும்போது, "கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் மாதிரியான இளம் இயக்குநர்கள் அசத்தி வருகிறார்கள். நமக்கு செட் ஆகிற மாதிரி அவர்களிடம் ஏதாவது கதை இருக்க வாய்ப்பு இருக்கா?" என்று கேட்டிருக்கிறார்.

சமகால தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள ரஜினி முன்வந்ததை, அவருக்கு நெருக்கமானவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே, ரஜினியை சந்தித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

இயக்குநர் ரஞ்சித் சொன்ன கதையைக் கேட்டவுடன், உடனே தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் ரஜினி. எப்படி சாத்தியமானது என்று இயக்குநர் ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

இயக்குநர் ரஞ்சித்தின் கதையை முதலில் கேட்டு, அவரை ரஜினியிடம் அழைத்துச் சென்றவர் செளந்தர்யா ரஜினிகாந்த். ரஜினிகாந்த் - ரஞ்சித் சந்திப்பு இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது.

முதலில் படத்தின் கதைச் சுருக்கத்தைக் கேட்ட ரஜினிகாந்த், "சூப்பராக இருக்கிறது" என்று இயக்குநர் ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். "உடனடியாக முழுக்கதையையும் தயார் பண்ணுங்கள்" என்றவுடன், "சார்.. இப்படத்தின் முழுக்கதையும் என்னிடம் தயாராக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

"தயாரிப்பாளர் தாணு என்னுடைய நீண்ட கால நண்பர். அவருக்கு நான் செய்ய வேண்டிய உதவிகள் நிறைய இருக்கிறது. அவரைப் போய் பாருங்கள். அவர் தான் தயாரிப்பாளர்" என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி.

தாணுவை சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். "ரஜினி சார் பேசினார். 30 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்தார். நான் அவரிடம் 45 நாட்கள் கேட்டு வாங்கியிருக்கிறேன். 45 நாட்கள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள், 45 நாட்கள் ரஜினி இல்லாத காட்சிகள். ஆக மொத்தம் 90 நாட்களில் படப்பிடிப்பு முடிக்க வேண்டும். பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்" என்று இயக்குநர் ரஞ்சித்திடம் தெரிவித்திருக்கிறார் தாணு.

தாணு இந்த வேகமான முடிவுகள், இயக்குநர் ரஞ்சித்தை மிகவும் சந்தோஷமடைய வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி - ரஞ்சித் - தாணு கூட்டணி இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ரஜினி படத்தை இயக்கவிருப்பதைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். இப்படத்தின் கதைப்படி அரசியலை ஒரு சிறு களமாக அமைத்திருக்கிறாராம் இயக்குநர் ரஞ்சித்.

தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரஞ்சித், ரஜினி படம் இயக்கவிருப்பதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு "நீ என்னை பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டாய் ரஞ்சித். இது அற்புதமான தருணம். லவ் யூ டா... பின்னிப் பெடல் எடு" என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x