Last Updated : 07 May, 2014 08:36 AM

 

Published : 07 May 2014 08:36 AM
Last Updated : 07 May 2014 08:36 AM

ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்: கன்னட அமைப்புகள் எச்சரிக்கை

ரஜினி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் கன்னட அமைப்புகளை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ரஜினியின் புதிய படமான 'லிங்கா'-வின் பூஜை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அனுஷ்கா, இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் 'லிங்கா' படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்தன‌ர்.

கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

இந்நிலையில் 'காவிரி நீர் விவகாரத்தில் கன்னடர்களை இழிவாக தாக்கிப் பேசிய ரஜினியின் பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்தக் கூடாது' என கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே என்ற அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த அமைப்பின் சார்பில் 3-வது நாளாக ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் மண்டியா சஞ்சய் சதுக்கம் அருகிலும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா பேசியபோது,''காவிரி நீர் விவகாரத்தின்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரவில்லை என்றால் க‌ன்னடர்களை உதைக்க வேண்டாமா என 6 கோடி கன்னடர்களை ரஜினி க‌டுமையாக‌ தாக்கி பேசினார். அவரை மண்டியா மாவட்ட விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். ராக்லைன் வெங்கடேஷ் பணத்திற்காக கன்னடர்களுக்கு விரோதியாக மாறிவிட்டார். ரஜினி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் கன்னட அமைப்புகளை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்''என்றார்.

இதுதொடர்பாக 'லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘இதெல்லாம் விளம்பரத்திற்காகவும் வேறு சில விஷயங்களுக்காகவும் செய்கிறார்கள். உண்மையிலே ரஜினி எந்த அளவுக்கு கர்நாடகாவை நேசிக்கிறார் என்பது கன்னட மக்களுக்கு தெரியும். அதேபோல கன்னட மக்களும் ரஜினியை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.எக்காரணம் கொண்டும் 'லிங்கா'பட‌ ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம். மேலும் கர்நாடகா முழுவதும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான‌ அம்பரீஷ் போன்ற நிறைய அரசியல்வாதிகளும் அவருடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள். எதனைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை''என்றார்.

இந்நிலையில் ரஜினியின் 'லிங்கா' பட ஷூட்டிங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த‌ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x