Published : 27 Jun 2015 03:07 PM
Last Updated : 27 Jun 2015 03:07 PM

ஃபேஸ்புக்கில் இனி பதிவிடப்போவதில்லை: சிவகுமார் வருத்தம்

நடிகர் சிவகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் இனி பதிவிடப்போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

நடிப்பு, சினிமா, பேச்சு, யோகா, கலைகள் என்று பல தளங்களில் இனிமையான அனுபவங்களை சிவகுமார் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துகொண்டார். அந்த வகையில், தீரன் சின்னமலை குறித்து சிவகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருந்தார்.

அந்த பதிவால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதனால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து சிவகுமார் விலகுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் கூறியதாவது: ''என்றுமே என்னை மனிதப் புனிதன்

என்றோ - வழிகாட்டும் தலைவன்

என்றோ - வாரி வழங்கும் வள்ளல்

என்றோ - பேரறிவாளன் என்றோ -

நடிப்புக் கலை - ஓவியக்கலையில்

கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை.

70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.

இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .

தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.

என் உலகம் சிறியது, அதில்

என் வாழ்க்கை மிகவும் எளிமையானது

இது உங்கள் உலகம் !

உங்கள் சுதந்திரம் !!

நீங்கள் நினைத்தபடி வாழுங்கள் !!!

எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்'' என்று சிவகுமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x