Published : 29 Feb 2016 09:43 AM
Last Updated : 29 Feb 2016 09:43 AM

பழம்பெரும் நடிகர் குமரிமுத்து காலமானார்

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து சென்னையில் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் குமரிமுத்து. எம்.ஆர்.ராதாவின் மேடை நாடகங்களில் நடித்த இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘ஊமை விழிகள்’, ‘கை கொடுக்கும் கை’, ‘இது நம்ம ஆளு’, ‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு தனி அடையாளம் பெற்றது.

கடந்த சனிக்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற் பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை காலமானார்.

கலைமாமணி விருது பெற்றவ ரான குமரிமுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்தவர். தி.மு.கவில் கலை, இலக்கிய பேரவை துணைத்தலைவராகவும் இருந்தார். குமரிமுத்துவுக்கு புண்ணியவதி என்ற மனைவியும், செல்வபுஷ்பா, எலிசபெத் மேரி, கவிதா ஆகிய 3 மகள்களும், ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளனர்.

குமரிமுத்துவின் உடல் சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்த் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 3 மணி அளவில் மந்தைவெளி கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

குமரிமுத்துவின் மறைவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், “குமரிமுத்து மறைந்த செய்தி அறிந்து திடுக்கிட்டேன். குமரிமுத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக்கொள்கிறேன்.”

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “கலைவாணரை போலவே குமரியிலிருந்து கலைத் துறைக்கு வந்த குமரிமுத்துவும் கலைவாணரைப் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கினார். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.”

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “நடிகர் சங்கத்துக்காக குமரிமுத்து ஆற்றிய அரும்பணிகளையும் சங்க நலனுக்காக குரல் கொடுத்து போராடியதையும் சங்க முன்னேற்றத்துக்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x