Last Updated : 21 Oct, 2016 04:11 PM

 

Published : 21 Oct 2016 04:11 PM
Last Updated : 21 Oct 2016 04:11 PM

நானும் ரவுடிதான் - ஓராண்டின் பின்னணியில் 7 தகவல்கள்!

'நானும் ரவுடிதான்' படம் வெளியாகி ஒராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தைப் பற்றி ட்விட்டர் தரப்பில் பலரும் விவாதித்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நானும் ரவுடிதான்'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தயாரித்திருந்தார்.

2015-ம் ஆண்டு இதே தேதியில் (அக்டோபர் 21) வெளியானது. வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அனிருத்தின் பாடல்கள் இப்போதும் இளைஞர்களின் காலர் ட்யூனாக இருந்து வருகிறது. அப்படம் வெளியாகி ஒரு வருடமாகி இருக்கும் நிலையில் அப்படத்தைப் பற்றி வெளியே தெரியாத 7 தகவல்கள்:

* 'போடா போடி' கதையைத் தொடர்ந்து புதுமுக நாயகன் நடித்தாலும் வெற்றியடைய வேண்டும் என்ற மனநிலையில் விக்னேஷ் சிவன் எழுதிய கதை தான் 'நானும் ரவுடிதான்'. இசையமைப்புக்காக அனிருத்திடம் விக்னேஷ் சிவன் பேசிய போது "சூப்பரா இருக்கே.. நான் நடித்தாலே ஹிட்டாகும் போலயே" என்று கூறியிருக்கிறார். அவரை நடிக்கவைக்க விக்னேஷ் சிவன் எவ்வளவோ முயற்சித்தும் அனிருத் மறுத்துவிட்டார்.

* விஜய் சேதுபதியிடம் இக்கதையைச் சொன்னபோது, "எனக்கு இக்கதை செட்டாகுமா என தெரியவில்லையே.." என்று அவரும் பல நாயகர்களை சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால், பல நடிகர்கள் நிராகரிக்க இறுதியில் விக்னேஷ் சிவனிடம் "நானே நடிக்கிறேன். வா பண்ணலாம்" என்று விஜய் சேதுபதி சொன்னவுடன் தொடங்கி இருக்கிறார்கள்.

* தான் நடித்த படங்கள் சரியாக வரவேற்பு பெறாத போது ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் ஒப்பந்தமானார். இப்படமும் சரியாக போகவில்லை என்றால், இனிமேல் படம் நடிக்கப் போவதில்லை என்ற மனநிலையுடனே நடித்துக் கொடுத்திருக்கிறார். இப்படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

* இப்படத்துக்கு முதன் முதலில் சொந்தக் குரலில் டப்பிங் பேசினார் நயன்தாரா. தன்னுடைய டப்பிங் சரியாக இருக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். படத்தில் அக்காட்சியில் எப்படி நடித்திருக்கிறாரோ அதையே டப்பிங் பேசும் மைக்கின் முன்பு நடித்து பேசியிருக்கிறார். அழுது கொண்டே பேசும் காட்சியில் கிளசிரின் போட்டுக் கொண்டு அழுது கொண்டே பேசியிருக்கிறார். இவருடைய மெனக்கெடலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறது படக்குழு.

* ஆனந்தராஜ் கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் பேசப்பட்டது. இக்கதாபாத்திரத்தில் முதல் நடிக்கவிருந்தவர் பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன். அவருடைய முதல் படமாக இப்படம் அமைந்திருக்கும். ஆனால், இறுதி நேரத்தில் நடிக்க முடியாமல் போக ஆனந்தராஜை வைத்து காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு.

* நவம்பரில் வெளியிடலாம் என்று தான் திட்டமிட்டு பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இறுதியில் அக்டோபர் 21-ம் தேதிக்குப் பிறகு 10 நாட்களுக்கு எந்தவொரு பட வெளியீடும் இல்லை. அந்த தேதியில் வெளியிட்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 10 நாட்களில் டப்பிங், கலர் கரெக்‌ஷன், DI தொழில்நுட்பம், பின்னணி இசை என அனைத்து இரவு பகலாக பணியாற்றி முடித்து திட்டமிட்டபடி வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

* இப்படத்தின் பின்னணி இசையின் போது அனிருத்துக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், 3 நாட்களில் அக்காய்ச்சலோடு முடித்திருக்கிறார் அனிருத். 4 மணி நேரத்துக்கு ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டே பணிபுரிந்திருக்கிறார். மேலும், தனித்தனியாக இசை வாத்தியங்களின் இசையை வாங்கி ஒன்று சேர்த்து பண்ணினால் நாட்களாகும் என அனைத்து இசை வாத்தியங்களின் இசையையும் முடிவு செய்து ஒன்றாக வாசிக்க வைத்துப் பதிவு செய்திருக்கிறார் அனிருத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x