Last Updated : 17 Oct, 2015 06:54 PM

 

Published : 17 Oct 2015 06:54 PM
Last Updated : 17 Oct 2015 06:54 PM

தேர்தல் ஞாயிறு: சரத்குமார் அணி Vs பாண்டவர் அணி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற இருக்கிறது. இம்முறை சரத்குமார் மற்றும் விஷால் என இரு அணிகள் மோதுவதால் கடும் போட்டி நிலவுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை அக்டோபர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி - விஷால் அணி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் நாடக நடிகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என அனைவரிடமும் இரண்டு தரப்பினரும் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வந்தார்கள்.

வாக்காளர்களின் எண்ணிக்கை

இத்தேர்தலில் மொத்தம் 3139 பேர் ஓட்டு போட தகுதியுள்ள வாக்காளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 1175 பேர் சென்னைக்கு வெளியில் மற்ற மாவட்டங்களில் வசிக்கும் நாடக நடிகர்கள் ஆவார்கள். இவர்களது வாக்குகளைக் கைப்பற்ற சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்கள். இத்தேர்தலில் தபால் மூலமாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணபித்தார்கள். அவர்களுக்கு வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு, அவர்களது வாக்குகள் தேர்தல் அதிகாரி பத்மநாபனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

தபால் ஒட்டுப்பதிவு நிறைவு

தபால் ஒட்டு மூலமாக வாக்குப்பதிவு செய்வது இன்று மாலையுடன் முடிவுற்றது. தபால் ஒட்டுகள் மூலமாக 783 வாக்குகள் வந்திருக்கின்றன. அதில் 43 ஒட்டுக்கள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தபால் ஒட்டுகள் போக மீதமுள்ள வாக்காளர்கள் நேரில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்க முன்னேற்பாடுகள்

செயிண்ட் அப்பால் பள்ளியில் உள்ள வகுப்பறை வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை ரகசியமாகவும், சுதந்திரமாகவும் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பதவிக்கு போட்டியிடுபவர்களின் எண்கள் மற்றும் படங்களுடன் அடங்கிய ஒட்டுச் சீட்டு அச்சடித்து தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுப் போடுபவர் யாரை தேர்வு செய்ய விரும்புகிறார்களோ, அவர்களது எண் பகுதியில் டிக் செய்ய வேண்டும். எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை இரு அணியினருமே விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரே இடத்தில் கூட இருப்பதால், அவர்களைக் காண கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடக்க சென்னை மாநகர போலீஸார் தீவிர ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். இன்று இரவு முதலே செயிண்ட் எப்பாஸ் பள்ளிக்கூடம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் அதிகாரி ஆய்வு

இத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் செயிண்ட் எப்பாஸ் பள்ளியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அதுமட்டுமன்றி சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் தேர்தல் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். தேர்தல் ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்கள்.

உடனடியாக வாக்கு எண்ணிக்கை

நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், சிறிது நேரத்திலேயே ஒட்டு எண்ணிக்கை தொடங்கப்பட இருக்கிறது. முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து நேரடி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒட்டுகள் தனி தனியாக எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என வரிசையாக வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x