Last Updated : 07 May, 2016 12:25 PM

 

Published : 07 May 2016 12:25 PM
Last Updated : 07 May 2016 12:25 PM

தேசிய விருது சர்ச்சை: இளையராஜா மீது கங்கை அமரன் காட்டம்

தேசிய விருது வழங்கு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக சாடியிருக்கிறார் கங்கை அமரன்.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் 'தாரை தப்பட்டை' படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதுகள் வழங்கும் விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இளையராஜா கலந்து கொள்ளாதது குறித்து, விருதுகள் தேர்வுக் குழுவில் இருந்த கங்கை அமரன், இளையராஜாவை கடுமையாக சாடியிருக்கிறார். அது குறித்து கங்கை அமரன் கூறியிருப்பது:

"பின்னணி இசை மற்றும் பாடல்கள் என ஒரே விருதாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆஸ்கர் விருதில் அப்படி கிடையாது. இரண்டு பேருக்கு விருது கொடுப்பதில் அவருக்கு என்ன நஷ்டம்? இப்போது யார் பின்னணி இசை பண்ணுகிறார்கள். ஆளுக்கு ஆள் ஒவ்வொரு இசை பண்ணிக் கொடுக்கிறார்கள், அது இசையமைப்பாளர் பெயரில் வருகிறது. ஒரே ஒரு ஆள் பின்னணி இசை அமைக்கிறார் என்றால் அது இளையராஜா மட்டும் தான். பாடல்கள் நன்றாக இருந்தால் கொடுக்கப் போகிறோம், நன்றாக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பழைய மாவை அரைத்துக் கொண்டிருந்தால் எப்படி? புதிய இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.. நமது காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் யோசிக்க வேண்டும். இன்றைக்கும் நான் இளைஞன் என்று ஓட முடியாது.

தேசிய விருதைப் போல இந்தியாவில் பெரிய விருது எதுவும் இருக்கிறதா? இந்தியாவில் பெரிய விருது என்றால் இது ஒன்று தான். முதலிலேயே எனக்கு விருது வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருந்தால் நாங்கள் படம் பார்க்கும் போது இவர் வாங்க வரமாட்டார் என்று விட்டுருப்போம். 'விசாரணை' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை நன்றாகத்தான் அமைத்திருந்தார். புதியவர்களுக்கு கொடுத்து ஊக்கமளித்திருப்போம்.

இளையராஜாவை மீறிய இசையமைப்பாளர் என்று இந்தியாவில் யாரும் கிடையாது என்பது உண்மையான விஷயம். இந்தியாவின் பெரிய விருதை அவர் வந்து வாங்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களான எங்களுக்கு பெரிய வருத்தம். இந்த விருதை வேண்டாம் என்று சொல்பவர் தாதா சாகேப் பால்கே விருதையும் வேண்டாம் என்று தான் சொல்லுவார். அதை நினைத்து அவர்களும் கேட்காமல் விட்டு விடுவார்கள். எந்த விருது தான் வேண்டும் என்று நினைக்கிறார்?

தமிழகத்தில் இருந்து ஒருவர் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்குவது தமிழனுக்கு பெருமை. என் பாட்டை மட்டும் கேளுங்கள் நான் விருது வாங்கமாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். இது தான் இந்தியாவிற்கு கொடுக்கும் மரியாதையா? ஜனாதிபதி வந்து விருது கொடுக்கும் விழாவில் அமிதாப் உள்ளிட்ட அனைவருமே வந்து விருது வாங்கினார்களே. அமிதாப் வாங்காத விருதா?

'தாரை தப்பட்டையில்' அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அருமையாக பின்னணி இசை அமைத்திருந்தார். விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பவதாரணி, யுவன் யாரையாவது விட்டு வாங்கியிருக்கலாம். இந்திய விருது எனக்கு வேண்டாம், ஆஸ்கர் விருது மட்டுமே வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே. இளையராஜா என்பவர் பெரிய மகான். ஒரு பெரிய மகான் என்பவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். இசைக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லிவிட்டு, இந்தியாவில் இருந்து கொடுக்கும் விருதை வேண்டாம் என்று சொல்வது ஏன் எனப் புரியவில்லை.

இளையராஜா மீது தான் முழுக்க முழுக்க தப்பு. வியாபாரம் என்று வந்துவிட்டால் 10 பேர் கேள்விக் கேட்கத்தான் செய்வான். தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கெளரவம். ஏன் இந்த அதிகாரத்தன்மை? ஏன் மற்றவர்களை உதாசீனப்படுத்தக் கூடிய கொள்கை? அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். மற்ற இசையமைப்பாளர்களையும் கூட சேர்த்து அழைத்துக் கொண்டு செல்வதுதான் பெரியமனிதத் தன்மை. அவர் இருக்கும் இடத்திற்கு அதைத்தான் செய்தாக வேண்டும். மற்றவர்கள் யாரும் எனக்கு சமமில்லை என்று சொல்வது ஒரு அசிங்கமான கொள்கை.

பின்னணி இசைக்கு ஒருவரும் பாடலுக்கு ஒருவரும் தேசிய விருது வாங்குவதில் என்ன தப்பு? 2 பேர் தேசிய விருதை வாங்கிக் கொள்ளட்டுமே. சட்டம் என்று ஒன்று போட்டால், அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டம் இயற்றப்படும் போதே இதை நான் புறக்கணிக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இவருக்கு இருக்கும் தகுதிக்கு கச்சேரி பண்ணுவது எல்லாம் தேவைற்ற ஒன்று. திறமைசாலி என்றுதான் ஒப்புக் கொண்டோமே, இதற்கு மேலும் திறமையை நிரூபிக்க வேண்டுமா?" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் கங்கை அமரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x