Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தல் புறக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தேர்தலை முதன்முறையாகப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.

இது குறித்து சனிக்கிழமை நடந்த பத்திரிகை யாளர் சந்திப்பில் கேயார் கூறியதாவது:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தேர்தலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மொழியைச் சார்ந்தவர்கள் தலைவர்களாகப் பதவி ஏற்பது வழக்கமாகக் கொண்டிருந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இந்த முறை மலையாளத்திற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

கடிதம் அனுப்பினோம்

அந்த வகையில் மலையாள சினிமாத் துறையை சேர்ந்த மலையாளத் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் விஜயகுமார் அவர்களைத் தேர்ந்தெடுத்து தலைவராக நியமிக்க வேண்டி தென்னிந்திய வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், தென்னிந்திய வர்த்தக சபை நிர்வாகம் அந்த நபரை எந்தப் போட்டிக்கும் அனுமதிக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக சசிகுமார் என்பவரைப் போட்டியிட வைத்தி ருக்கிறார்கள். இதற்கு மலையாள சினிமா உலகினர் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

அதே அடிப்படையில் துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பு உறுப்பினர்களைப் பரிந்துரை செய்தோம். ஆனால், தங்களுக்குத் தேவைப்படுபவர்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பது என்றும் மற்றவர்கள் போட்டியிடக்கூடாது என்றும் தெளிவாக அவர்கள் இருக்கிறார்கள்.

அப்படி போட்டியிட்டால் ஒப்புகை (ப்ராக்சி) அடிப்படையிலான வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று தெரிவிக்கின்றனர்.

கூடவே 700 ஒப்புகை(ப்ராக்சி) அடிப்படையிலான வாக்குகளை வாங்கி வைத்திருப்பதாகவும், எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம் என்று அச்சுறுத்தல் கொடுத்தும் வருகிறார்கள். இதுதொடர்பாக சமரசத்துக்கு முயன்றோம். நீதிமன்றத்தை அணுகினோம். எந்த வகையில் சமாதானத்திற்கு முயன்றும் அவர்கள் எங்கள் பேச்சை ஏற்றுக்கொள்வதாக இல்லை. கையில் ஒப்புகை (ப்ராக்சி) வாக்குகளை வைத்து வைத்து ஜெயிப்பதாக நிற்கும் அவர்களைக் கண்டிக்கிறோம்.

சுயமரியாதை காரணமாக உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். ஆகவே இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள வர்த்தக சபைத் தேர்தலை தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினர் முதன்முறையாகப் புறக் கணிக்க முடிவெடுத்துள்ளோம்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இது ஒரு சவாலாக அமையும் என்று கூறிக்கொள்கிறோம் என்று கேயார் கூறினார்.

திட்டமிட்டபடி தேர்தல்: கல்யாண்

இதனை அடுத்து சனிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், ”வர்த்தக சபையில் தமிழர்களுக்கு எப்போதும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. மொழி அடிப்படையில் பிரிவினையை வளர்க்க வேண்டாம். எல்லோருடைய அங்கீகாரமும், உரிமையும் எப்போதுமே கிடைக்கும். திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x