Published : 29 Oct 2016 11:16 AM
Last Updated : 29 Oct 2016 11:16 AM

திரைவிமர்சனம்: கொடி

இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன.

கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத் துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன் பயந்த சுபாவம் உடையவன்.

கொடியைப் போலவே சிறு வயதி லிருந்தே அரசியலில் இருக்கிறார் ருத்ரா (த்ரிஷா). இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும் காதலிக்கிறார் கள். தம்பி அன்பு, முட்டை வியாபாரம் செய்யும் மாலதியைக் (அனுபமா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், சட்ட மன்ற இடைத்தேர்தலில் கொடியும், ருத்ராவும் எதிரெதிர் அணிகளில் நிற்கவேண்டிய சூழல் உருவாகிறது. இதற்கிடையில் ஊரில் மூடப்பட்ட தொழிற்சாலை குறித்த சர்ச்சையும் பெரிதாகிறது. அரசியல் வெற்றியா, காதலா என்று வரும்போது யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்த அரசியல் விளையாட்டில் எதிர்பாராமல் நுழையும் அன்பு என்னவாகிறான் என்பதுதான் ‘கொடி’.

இயக்குநர், கொடி கதாபாத்திரத் துக்குக் கொடுத்திருக்கும் தெளிவான பின்னணியை மற்ற கதாபாத்திரங் களுக்குக் கொடுக்கத் தவறியிருக் கிறார். குறிப்பாக, கொடி கதாபாத்திரத் துக்கு இணையான வலிமையுடைய ருத்ராவின் கதாபாத்திரம் அந்த அள வுக்குத் தெளிவாக எழுதப்படவில்லை. ருத்ராவுக்கு அரசியல் ஆர்வம் வரு வதற்கான பின்னணி சரியாக நிறுவப் படவில்லை. ருத்ராவின் போக்கில் ஏற்படும் அதிர்ச்சிகரமான மாற்றமும் நம்பும் விதத்தில் காட்டப்படவில்லை.

இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் செய்திருக் கிறார். கொடி கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு செறிவாக உள்ளது. கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா சில இடங்களில் சமாளிக்கிறார். சில இடங்களில் தடுமாறுகிறார். அவர் அரசியல் மேடைகளில் பேசும் காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து சென்றுவிடுகின்றன. மாலதியாக அனுபமா கொஞ்சம் நேரம் வந்தா லும் துறுதுறு நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா, காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் செம்மையாகச் செய் திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயண் இசையில் ‘ஏ சுழலி’, ‘சிறுக்கி வாசம்’ பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வெங்க டேஷின் கேமராவும், பிரகாஷின் படத் தொகுப்பும் படத்தில் அந்த அளவுக்கு எடுபடவில்லை.

திரைக்கதை வழக்கமான பாணி யிலேயே நகர்கிறது. பலசாலி அண் ணன், பயந்தாங்கொள்ளி தம்பி, பழிவாங்கும் படலம் என எல்லாமே எதிர்பார்க்கும்படியே நகர்கின்றன. அரசியலில் வளர்வது, எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம்போலக் காட்டப்படுகின் றன. காமெடி இல்லாத குறைக்கு இப்படியா?! த்ரிஷா, தனுஷ் இடையே அரசியல் களத்தில் போட்டியும் தனிப் பட்ட முறையில் காதலும் இருப்பது ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிரு கிறது. கட்சிக்குள் த்ரிஷா மேற் கொள்ளும் காய் நகர்த்தல்கள் பரவாயில்லை. இடையில் வரும் ‘திடுக்கிட’ வைக்கும் திருப்பம் செயற்கையாக உள்ளது.

அரசியலில் ஓர் ஆண் நினைத்தால் நேர்மையாக, நல்லவனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி என்றால் அவள் வில்லியாகத்தான் இருக்க வேண்டுமா?

இதுபோன்ற சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x