Last Updated : 14 Feb, 2014 12:00 AM

 

Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

திரைமேதை பாலு மகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி

ஒளிப்பதிவாளரும், இயக்குநரு மான பாலுமகேந்திரா (74) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.

வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் காலை 11 மணி அளவில் காலமானார். அவருக்கு இலேசான நெஞ்சு வலி இருந்ததாகவும் தெரிகிறது.

யதார்த்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதில் வல்லவரான பாலுமகேந்திரா லண்டனில் இளங் கலை படிப்பை முடித்தவர். சிறு வயது முதலே திரைத்துறையின் மீது அளவில்லாதப் பற்று கொண் டிருந்தவர். இலங்கை, மட்டக்களப்பு அருகில் உள்ள அமிர்தகழி என்ற ஊரில் பிறந்த பாலுமகேந்திரா, ஆரம்பத்தில் இலங்கை வானொலியில் நடைபெற்ற நாடகங்களில் நடித்துள்ளார். புனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப் பதிவுத் துறையில் பயின்ற அவர் 1969 -ல் மாணவராக இருந்தபோதே தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியான ‘நெல்லு’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத் துறைக்குள் நுழைந்தவர், 1977-ம் ஆண்டு வெளியான ‘கோகிலா’ கன்னடப்படத்தின் மூலம் இயக்குநரானார். ஒளிப் பதிவு, எடிட்டிங், இயக்கம் மூன்றிலும் தனித்தன்மை கொண்ட பாலுமகேந்திரா தமிழில் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் தொடங்கி ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘வீடு’, ‘சதிலீலாவதி’, ‘அது ஒரு கனாக் காலம்’, சமீபத்தில் வெளியான ‘தலைமுறைகள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

இயற்கையான ஒளிப்பதிவை காட்சிப்படுத்துவதில் வல்லவர். இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் ஆகியோரின் முதல் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். அறிமுக இயக்கு நர்களாக இருந்த இருவருமே இவருடைய திறமையைக் கண்டு வியந்தவர்கள். ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ இவரது தேசிய விருது படங்கள். சிறந்த ஒளிப்பதிவு இயக்குநராகவும் தேசிய விருது பெற்றிருக்கிறார். கமல், தேவி நடித்த ‘மூன்றாம்பிறை’ திரைப்படம் இவருடைய முக்கியமான படம். கமலுக்கு முதல் தேசிய விருது வாங்கிக்கொடுத்த படமும் கூட.

இந்தப்படத்தை ஹிந்தியிலும் அவரே இயக்கினார். ஹிந்திப் படத்திலும் தேவி நாயகியாக நடித்தார். அந்தப் படத்திற்குப் பின் ஹிந்தியில் தேவி சிறந்த நடிகையாக வலம் வரத் தொடங்கினார். தன் படங்களுக்கு இளையராஜாவின் இசையையே எப்போதும் விரும்புவார். தன்னுடைய படங்களுக்கு அவரது இசை பெரிய பலம் என்பதை அவ்வப்போது வெளிப் படுத்தவும் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ‘தலைமுறைகள்’ படத்தின் வெளியீட்டுக்கு முன் ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது, ‘சினிமா இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. அதனால்தான் தொடர்ந்து படம் என்கிற குழந்தையை பெற்றுக்கொண்டே இருக்க விரும்புகிறேன்!’ என்று கூறினார். ஒரு குழந்தைக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் இடையிலான நட்பை அடிப்படையாக வைத்து தனது புதிய திரைப்படத்தின் திரைக்கதையையும் அவர் எழுதி வந்தார்.

அவரிடம் உதவியாளர்களாக இருந்த இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய பங்கினை கொடுத்து வருகிறார்கள்.

மனைவி அகிலா, ஆர்ட்பிலிம் மேக்கராக இருக்கும் மகன் கௌரி சங்கருடனும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். திரையுலகைச் சேர்ந்த கமல், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம், பாலா, நடிகை குஷ்பு, சாருஹாஸன் உள்ளிட்ட பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x