Published : 01 Sep 2015 08:52 AM
Last Updated : 01 Sep 2015 08:52 AM

திருட்டு விசிடியை வேடிக்கை பார்த்தால் திரையுலகமே அழிந்துவிடும்: விஷால் நேர்காணல்

“இந்த ஆண்டு என் பிறந்த நாள் மறக்க முடியாததாக இருந்தது. அடுத்த பிறந்த நாளுக்குள் இன்னும் பல குழந்தைகளை படிக்கவைக்க முடியும் என நம்புகிறேன். இந்த பிறந்த நாளுக்கு நண்பர்களுக்கு பார்ட்டி வைக்கவில்லை. அந்த பணத்தில் இன்னும் நாலு பேர் படிக்க உதவலாம் என்ற எண்ணம்தான்’’ என்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசுகிறார் நடிகர் விஷால். அந்த நாள் முழுவதையும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் செலவிட்ட அவரை மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதில் இருந்து..

உதவிகளை இப்போது அதிகம் செய்வதுபோல் தெரிகிறதே..

‘10 ஆண்டாக செய்யாமல் ஏன் இப்போது திடீரென செய்கிறேன்’ என்று கேட்கிறீர்கள். எப்போது நான் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தேனோ அப்போதிருந்துதான் இது போன்ற உதவிகளை வழங்கு கிறேன். அரசியலுக்கு வருவதற் காக செய்யவில்லை. நான் உதவிகள் வழங்கும் யாருக்குமே நடிகர் சங்கத்தில் ஓட்டு இல்லை. என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட சமூகத்துக்கு நல்ல காரியங்களை திரும்பச் செய்கிறேன் அவ்வளவுதான்.

‘பாயும் புலி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே 2 படங்களில் நடித்ததைவிட இதில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

பஞ்ச் டயலாக்கே இல்லாமல் ஒரு போலீஸ் படம். போலீஸ் கதை, பாடல்கள், சண்டை என்பதை எல்லாம் தாண்டி சுசீந்திரன் ஒரு அருமையான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

‘சண்டக்கோழி-2’ தாமதமா கிறதே..

பாண்டிராஜ் சாரோட படத் தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. டிசம்பர் 18 ரிலீஸ் என்பது மட்டும் உறுதி. முத்தையா இயக்கத்தில் ‘மருது’ பண்றேன். அதற்கு பிறகுதான் ‘சண்டக்கோழி-2’. முந்தைய கதையைத் தாண்டி ஏதோ ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்பதால் பொறுமையாக காத்திருக்கிறோம்.

உதவி இயக்குநராக வந்தீர்கள். தற்போது நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்கத் தேர்தல் என்று பரபரப்பாக இருக்கிறீர்கள். படம் இயக்கும் ஆர்வம் இருக்கிறதா?

இப்போதுள்ள படங்களை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு படம் இயக்கப் போனால், மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்க 2 ஆண்டுகள் உழைக்க வேண்டும். மேலும், நான் இயக்கினால், கண்டிப்பாக அதில் நடிக்க மாட்டேன்.

திருட்டு விசிடி-க்கு எதிரான உங்கள் போராட்டம் எந்த அளவில் இருக்கிறது?

திருட்டு விசிடி-க்கு எதிராக சாகும்வரை போராடுவேன். ஆனால், திருட்டு விசிடியை அழிக்க வேண்டுமானால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலக மும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். வெறுமனே வேடிக்கை பார்த்தால், ஒரு சில ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகமே அழிந்துவிடும். இதை தமிழ் சினிமாவுக்கு எச் சரிக்கையாகவே சொல்கிறேன்.

இது சம்பந்தமாக மற்ற நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கமா?

மற்ற நடிகர்களின் படம் திருட்டி விசிடி-யில் வரும்போது கண்டிப்பாக நான் போய் தட்டிக் கேட்கிறேன். அதுபோல எல்லா நடிகர்களும் வந்தால்தான் நல்லது. ஒவ்வொரு ஊரிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படக்குழுவினர் யார் வேண்டுமானாலும் சென்று போலீஸில் புகார் அளிக்கலாம். புகார் கொடுத்து ஒருவரை 3 முறை கைது செய்தால், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும். அது யாருக்கும் தெரியவில்லை.

ஆர்யாவுக்கு மேனேஜராக போவதாக ஒரு நிகழ்ச்சியில் சொன்னீர்களே, எதற்காக?

சம்பள பாக்கி வைத்திருப்பவர் போய், ‘சார்.. என்னால் கொடுக்க முடியவில்லை’ என்று கூறினால், ஏன் எதற்கு என்று ஆர்யா ஒரு வார்த்தைகூட கேட்பதில்லை. உடனே, ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறிவிடுகிறார். அவ்வளவு நல்லவர். இப்படி பல கோடி ரூபாயை இழந்திருக்கிறார். அதனால் தான், நானே மேனேஜராகி உன் கணக்கு வழக்கு களை பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.

பாலா இயக்கத்தில் மீண்டும் விஷாலை எப்போது பார்ப்பது?

நானும் காத்திருக்கிறேன். பாலா சார் எப்போது கூப் பிட்டாலும், மற்ற படங்களை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவிடு வேன். அவர் ஒரு மந்திரவாதி. கையில் எந்த நடிகர் கிடைத் தாலும், அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x