Last Updated : 23 May, 2017 06:22 PM

 

Published : 23 May 2017 06:22 PM
Last Updated : 23 May 2017 06:22 PM

தலைமைப் பொறுப்பு தமிழனுக்கே வேண்டும்: பாரதிராஜா பேச்சு

யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது, "பேரரசு என் மீது வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவன் என்னிடம் பணியாற்றியதில்லை. என் விழுதுகள் எத்தனையோ இருந்திருக்கிறது. அந்த விழுதுகள், இதுவரை வேருக்கு வியர்வை சிந்தியதுமில்லை, பாராட்டியதுமில்லை. ஆனால் எங்கேயோ வளர்ந்த செடி என் மீது படர்ந்து, என்னைப் பாராட்டி சீராட்டுகிறது. அதுதான் எனக்குப் புரியவில்லை.

டி.ராஜேந்தர் ஒரு சுயம்பு. அவரிடம் யாருடைய பாதிப்புமே கிடையாது. அவருக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்துள்ளார். யாருக்கும் பயப்பட மாட்டார். ஏனென்றால் உண்மை பயப்படவே பயப்படாது.

மூன்று ஜாம்பவான்களோடு உட்கார்ந்திருக்கும் போது தமிழ் நடிகனாக உணர்ந்தேன் என்று விஷால் பேசினார். அது தவறு. நீ எங்கிருந்தாலும் தமிழ் நடிகன்தான். இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது. வேறு எங்குமே போய் அரசியல் செய்ய முடியாது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். வேறு எங்குமே போய் தொழில் தொடங்குவது கடினம். ஆனால், இங்கு யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.

அனைவருமே தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றோம். பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து, முடிவிலேயே தான் தேசிய கீதம் இருக்க வேண்டும். இப்போது சட்டத்தை மாற்றியுள்ளார்கள். ஏனென்றால் தேசியகீதம் பாடியவுடன் போய்விடுவார்கள் என நினைக்கிறார்கள். போகிறவர்களை இழுத்து வைத்தா தேசியத்தைப் புகுத்த முடியும். எங்கள் தமிழ் தள்ளப்படுகிறதோ என்ற பயம் எனக்கிருக்கிறது. எங்களுக்கும் தேசியப்பற்று உண்டு. ஆனால், எங்கள் தாய்ப்பாலுக்கு பிறகுதான் உலகப்பால். நம்மை அறியாமல் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கே தமிழ் கலாச்சாரம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், தமிழ்த் திரையுலகம் விட்டுவிடக் கூடாது. யார் வேண்டுமானாலும் இங்கு சங்கமிக்கலாம். ஆனால், அடையாளத்தைத் தொலைத்துவிடாதீர்கள். யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார் பாரதிராஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x