Published : 28 Dec 2016 03:28 PM
Last Updated : 28 Dec 2016 03:28 PM

தமிழ் சினிமா 2016: தி இந்து இணைய வாசகர்கள் தெரிவில் டாப் 5 படங்கள்

'தி இந்து' இணையதள வாசகர்களிடம் 2016-ன் சிறந்த படம் எது என்ற கேள்வியை முன்வைத்தோம். 'இந்து டாக்கீஸ்' குழுவின் திரை விமர்சனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்கள் பெற்று கவனம் ஈர்த்த 'அழகு குட்டி செல்லம்', 'கதகளி', 'இறுதிச்சுற்று', 'விசாரணை', 'வில் அம்பு', 'சேதுபதி', 'பிச்சைக்காரன்', 'காதலும் கடந்து போகும்', 'ஆறாது சினம்', 'தோழா', 'மனிதன்', ' 24', 'கபாலி', 'ஜோக்கர்','குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'காஷ்மோரா', 'இறைவி', 'உறியடி', 'அப்பா' ஆகிய 20 படங்களின் பட்டியலையும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

வாசகர்களின் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகளுடன், அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதிக வாக்கு சதவீதம் பெற்ற டாப் 5 படங்கள் இதோ:

அப்பா (பெற்ற வாக்குகள் - 20%)

சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் 'அப்பா'. 'சாட்டை' படத்தில் தனக்குக் கிடைத்த தயாளன் ஆசிரியர் என்ற அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் 'அப்பா' படத்துக்காக மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

மூன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க விரும்புகிறார்கள் என்பதின் பயணமே 'அப்பா'. சமுத்திரக்கனி தன் மகனை இயல்பாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். தம்பி ராமையா இந்த போட்டி உலகத்தில் எங்கும் எதிலும் தன் மகன் முதலிடம் பெற வேண்டும் என்று கறார் காட்டுகிறார். நமோ நாராயணன் நமக்கு எந்த வம்பும் வேண்டாம். இருக்குற இடம் தெரியாம வாழ்ந்துட்டுப் போயிடணும் என்கிறார். இந்த மூன்று பெற்றோர்களின் அணுகுமுறை என்ன, அவர்களின் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை பதிவு செய்த விதத்தில் 'அப்பா' முக்கியமான படம்.

'அப்பா' படம் வசனங்களாலேயே நகர்கிறது. காட்சிப்படுத்துதல் இல்லை என்றும் சிலரால் சொல்லப்பட்டது. ஆனால், சிறுவர்களின் உலகை பக்கத்தில் இருந்து பார்த்து அறிவுரை சொல்வதைப் போல சமுத்திரக்கனி பதிவு செய்த விதம் அக்கறை மிக்கது என்று பெரும்பாலானவர்கள் கூறியதும் கவனிக்கத்தக்கது.

பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்களுக்கான கருத்துகள் இப்படத்தில் உள்ளன. அதையே இன்னும் பலர் அறிந்துகொள்ளவில்லை. இந்த சூழலில் 'அப்பா' அதுகுறித்த சிந்தனையை, அவசியத்தை உணர்த்தி இருப்பதால் 'அப்பா' சில குறைகளோடு இருந்தாலும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத படம்.

ஜோக்கர் (பெற்ற வாக்குகள் - 17%)

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான படம் 'ஜோக்கர்'. தண்ணீர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் சோமசுந்தரம். திருமணத்துக்குப் பெண் பார்க்கும் போது, ரம்யா வீட்டில் கழிப்பறை இருந்தால்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று உறுதியுடன் கூறுகிறார். இதனால் அரசின் மானிய உதவியுடன் கழிப்பறை கட்ட முயற்சிக்கிறார் சோமசுந்தரம். ஆனால், அவருக்குக் கிடைப்பது கழிப்பறை கிண்ணம் மட்டுமே. கமிஷன், கட்டிங் என்று எல்லாவற்றிலும் புரையோடிப் போன ஊழல் கழிப்பறையையும் விட்டு வைக்கவில்லை என்பதை சாட்டையடியாகப் பதிவு செய்த படம் 'ஜோக்கர்'.

'சத்துக்குறைவினால 12 குழந்தைங்க செத்துப் போச்சு. மயக்க மருந்தை மாத்திக் கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போனாங்க. கர்த்தரும் காப்பாத்தலை, மாரியம்மாளும் காப்பாத்தலையே', 'நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?', 'சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்க'னுதான் சொல்றோம் என்ற வசனங்களை நெட்டிசன்கள் வரவேற்றனர்.

'சிவன் நெற்றியில் இருக்கும் பிறைதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையாவும் இருக்கு. அப்படிப் பார்த்தால் இருவரும் முப்பாட்டன்கள்தான். என் தம்பிகளே. உறவுகளே... நம் ஒற்றுமைக்கு குறுக்கே எவன் வந்தாலும் அவர்களை நெம்பி எடுப்பார்கள் என் தம்பிமார்கள்' என்று ஒருவர் இப்தார் நோன்பில் பேசுவது, தண்ணீர் பிரச்சினயில் இயற்கை சூறையாடல் என ஒருவர் கொந்தளிப்பது, ஹெலிகாப்டருக்கு கும்பிடு போடாம அமைச்சர்கள் இருக்காங்களா? என கேள்வி கேட்பது வரை சம கால அரசியல்வாதிகளைப் பகடி செய்திருக்கும் விதம் ஆழமானது. நூதன போராட்ட வடிவங்களை காட்சிப்படுத்திய விதம் அர்த்தமுள்ளது.

'ஜோக்கர்' முழுமையான சினிமாவுக்கான அனுபவத்தைத் தரவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. உள்ளதை சொல்ல வேண்டுமென்றால் வடிவத்தைப் பற்றி கவலைப்படாமல் உண்மையையும், உள்ளடக்கத்தையும் காத்திரமாக உரத்துச் சொன்ன விதத்தில் 'ஜோக்கர்' கம்பீர சினிமா.

பிச்சைக்காரன் (பெற்ற வாக்குகள் - 14%)

சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து வசூலிலும், மக்கள் வரவேற்பிலும் கொண்டாடப் பட்ட படம் 'பிச்சைக்காரன்'.

பணம், வசதி என எல்லாம் இருந்தும் அம்மாவின் உடல்நலனை குணப்படுத்த முடியாமல் தவிக்கிறார் விஜய் ஆண்டனி. நிபந்தனைகளுடன் 48 நாட்கள் பிச்சை எடுக்கிறார். அந்த காலகட்டத்தில் விஜய் ஆண்டனிக்கு நிறைய சோதனைகள், தடைகள் ஏற்படுகின்றன. அவற்றை எல்லாம் முறியடித்து அம்மாவின் சிறந்த நலனை பாதுகாக்கிறார் விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமாவில் தாய்ப்பாசத்துக்கு எப்போதும் ஒரு மதிப்பும், மரியாதையும், மகத்துவமும் உண்டு. அதை மிகச் சரியாக பிரதிபலித்த படம் 'பிச்சைக்காரன்'. மிகையில்லாத தாய்ப்பாசத்தை மையமாகக் கொண்ட காட்சிகள் படத்துக்கு உயிரூட்டின.

பிச்சைக்காரர்கள் வாழ்வை காட்சிப்படுத்தும்போது, அவர்கள் மேல் பரிதாபத்தை வரவழைக்காமல் நகைச்சுவையை தெளிக்க விட்டதில் சசியின் மனித நேயமும், புத்திசாலித்தனமும் தெரிந்தது.

படத்தின் இறுதிக்காட்சியில் ''பிச்சை எடுக்குற மாதிரி சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாதுப்பா. நம்மால ஒரு நாள் கூட அந்த வாழ்க்கை வாழ முடியாது'' என்று அம்மா தீபா ராமானுஜம், மகன் விஜய் ஆண்டனியிடம் சொல்லும் இடத்தில் தாயின் மீதான பாசத்தால் மகன் செய்த தியாகம் பளிச்சிடுகிறது. எதிர்பார்ப்பில்லாத ஒப்புயர்வற்ற அன்பே இங்கு வெற்றி பெற்றது.

விசாரணை (பெற்ற வாக்குகள் - 12%)

வெற்றிமாறன் இயக்கத்தில் விருதுகளைக் குவித்த படம் 'விசாரணை'. மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் சில கறுப்புப் பக்கங்களை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது.

தினேஷும் அவரது நண்பர் முருகதாஸும் ஆந்திராவில் சின்ன சின்ன சில்லறை வேலைகள் செய்து நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் செய்யாத குற்றத்துக்காக போலீஸ் கைது செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்திரவதை செய்கிறது.

கையறு நிலையில் சிக்கித் தவிக்கும் தினேஷும், முருகதாஸும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, உண்மையைப் போட்டு உடைக்கிறார் தினேஷ். அவரையும், முருகதாஸையும் சமுத்திரக்கனி காப்பாற்றுகிறார். அதற்கு கைமாறு செய்யப் போகும் இருவரும் எப்படி பலியாகிறார்கள் என்பதை உருக்கமும், நெருக்கமுமாக பதிவு செய்த படம் 'விசாரணை'.

போலீஸ் அதிகாரிகளின் அட்டூழியம், அதிகார வர்க்கத்தின் திடீர் பல்டி, அதற்கு அதிகாரிகளே பலியாகும் சோகம், அப்பாவிகள் பலிகடா ஆவது என மனித உரிமை மீறலையும், யதார்த்தத்தையும் மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்தியதால் 'விசாரணை' நேர்மையான சினிமா.

இறுதிச்சுற்று (பெற்ற வாக்குகள் - 11%)

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்து ஆச்சரியப்படுத்திய படம் 'இறுதிச்சுற்று'.

குத்துச்சண்டை பயிற்சியாளர் மாதவன், ஒரு அதிகாரியின் முன்விரோதம் காரணமாக ஹரியாணாவில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு இருக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகளின் திறமையில் திருப்தி இல்லாமல் இருக்கும் மாதவன், மீன் விற்கும் பெண் ரித்திகா சிங்கிடம் குத்துச்சண்டை வீராங்கனைக்கான நுட்பங்கள் இருப்பதைக் கண்டுகொள்கிறார்.

அதற்குப் பிறகு பணம் கொடுத்து பயிற்சிக்கு வரவழைத்து ரித்திகா சிங்கை சாம்பியன் ஆக்கப் பாடுபடுகிறார். தடங்கல், பிரச்சினைகளுக்குப் பிறகு ரித்திகா சிங் சாம்பியன் ஆவதே 'இறுதிச்சுற்று'.

நாக் அவுட் தான் வேண்டும் என உறுதி காட்டும் மாதவனின் உடல்மொழியும், நடிப்பும் அவரது மறு வருகைக்காக சிறந்த தேர்வாக அமைந்தது. ரித்திகா சிங் எனும் மிகச் சிறந்த நடிகையை அடையாளப்படுத்தியது, ராதாரவி- நாசர், காளி வெங்கட், ரித்திகா சிங் சகோதரி என உறவுகளின் உணர்வுகளையும், சிக்கலையும் சரியாகக் கையாண்ட விதம் அருமை.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகள் கூவம் மிதக்கும் குப்பத்திலும், குடிசைப் பகுதிகளிலும் கூட வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது. அந்த விதத்தில் 'இறுதிச்சுற்று' சாம்பியன் சினிமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x