Last Updated : 19 Jul, 2016 08:24 AM

 

Published : 19 Jul 2016 08:24 AM
Last Updated : 19 Jul 2016 08:24 AM

தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்!

ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு, பரபரப்பு எல்லாம் சகஜம்தான். இம்முறை சற்று கூடுதலாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1,000 வெளிநாட்டுத் திரைகளில் தோன்றப் போகிறார் ‘கபாலி’.

இன்றைய சினிமா வர்த்தகத்தில் வெளி நாட்டு வசூல் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. சல்மான் கானின் ‘சுல்தான்’ இந்திப் படம் உள்நாட்டில் 350 கோடிகள் வசூல் சாதனை என்றால் வெளிநாட்டில் இருந்து மட்டும் 150 கோடிகள். மொத்த வசூலில் கிட்டத்தட்ட சரிபாதி வசூல்.

ஒளிந்திருக்கும் சவால்கள்

தென்மாநில மொழிப்படங்களும் வெளி நாட்டு வசூலில் குறைந்தவை அல்ல. தென் னிந்தியப் படங்களின் சர்வதேச பட வெளி யீட்டில் பழுத்த அனுபவம் கொண்ட விநியோகஸ்தர் ஒருவர் இது பற்றி என்னிடம் கூறும்போது, ‘‘மற்ற வெளியீட்டாளர்களின் பணிபோல் அல்ல, எங்களுக்கென்று மிக முக்கிய வேலைகள் உள்ளன. படம் வெளியாக இருக்கும் வெளிநாட்டில் படத்துக்கு சென்சார் வாங்குவது ஒரு கடினமான பணி. அதற்கு அடிப்படைத் தேவை, ஆங்கில சப்-டைட்டில்’’ என்றார். மொழிபெயர்ப்பு நிபுணர் ரேக்ஸுக்கு 333-வது படம் ‘கபாலி’. அந்த சர்வதேச விநியோகஸ்தரும், மொழி பெயர்ப்பாளர் ரேக்ஸும் இதுபற்றி மேலும் கூறுவதாவது:

சினிமாவும் மொழியும் தெரிந்தால் மட்டும் சப் டைட்டில் செய்ய முடியாது. இது தனிக் கலை. இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற ‘கான்சே’ (தெலுங்கு), ‘எந்நு நிண்டே மொய் தீன்’ (மலையாளம்) ஆகிய 2 படங்களுக்கும் நாங்கள்தான் சப்-டைட்டில் செய்தோம்.

உலகத் தமிழர்கள் பார்க்கும் தமிழ் படங்களுக்கு ஏன் ஆங்கில சப்-டைட்டில் என்று பலரும் கேட்கிறார்கள். இதற்கு சட்ட ரீதியான வர்த்தகக் காரணங்கள் உள்ளன. வெளிநாடுகளில் வாழும் 2-ம் தலைமுறை தமிழர்கள் பலருக்கு தமிழ் வசனங்கள் அவ்வளவு சரளமாக புரிவதில்லை. சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் வேகமும் ஸ்டைலும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த வர்களுக்கு கொஞ்சம் சவால் தான். அதுமட்டுமல்லாமல், மதுரை, நெல்லை, கோவை, சென்னை, இலங்கை என தமிழ் மக்கள் பேசும் வட்டாரப் பேச்சு வழக்குகள் பரிச்சய மில்லாத மற்ற தமிழர்களைக் குழப்பத்தில் தள்ளுகின்றன. காரணம் வட்டாரப் பேச்சு வழக்குகளில் பல சொலவடைகள், பழமொழிகள், உச் சரிப்பு முறை என பல வேறுபாடுகள் உள்ளன. இன்னும் சொல்லப் போனால் செஷல்ஸ், மொரீஷியஸ் நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்புவது பிரெஞ்ச் மொழி சப் டைட்டில்களே. ஆங்கில சப்-டைட்டில் இல்லையென்றால், தென்னாப்ரிக்காவில் எந்த வேற்று மொழிப் படங்களும் ஓடாது.

தணிக்கைக்குள் நுழைய அவசியம்

அரபுநாடுகள், பிரான்ஸில் அந்த நாடுகளின் மொழிகளில் சப் டைட்டில் இல்லையென்றால் படங்களைத் தணிக்கை செய்ய முடியாது. இதற்கு முதல்படி, ஆங்கில சப்-டைட்டில் போட்டு முடித்ததும் பிறகு அதை அடிப்படை யாக வைத்துக்கொண்டு அந்தந்த நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து மீண்டும் சப்-டைட்டில் போட்டு தணிக்கைக்கு அனுப்ப வேண்டும்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘you’ என்ற சொல்லுக்கு பாலினம் கிடையாது. ஆனால் அரபு, பிரெஞ்ச் மொழிகளில் உண்டு. எனவே, அரபுமொழியில் சப்-டைட்டில் செய்வது மிகக் கடினமான பணி. இதில் ஒரு தவறு நேர்ந்தாலும் நீங்கள் சரியாக மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்று கூறி தணிக்கை செய்ய மறுத்துவிடுவார்கள். சப்-டைட்டில் பணியை செய்து முடிக்க ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். நாங்கள் சப்-டைட்டில் போட்டு முடித்தபிறகு எடிட்டரோ, இயக்குநரோ தலையிட்டு ஒரு ஃபிரேம் குறைத்தாலோ, கூட்டி னாலோ, சப்-டைட்டில் வரும் இடம் மாறிவிடும். சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக் பேசிமுடித்து, வில்லன் வாயைப் பிளக்கும் இடத்தில் சூப்பர் ஸ்டாரின் வசனம் வரும். அதனால் தான் படத்தின் தொழில்நுட்பப் பணிகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

உணர்வு மாறாத மொழிபெயர்ப்பு

சப்-டைட்டில் பணியை இன்னும் விளக்கிச் சொல்கிறார் ரேக்ஸ்.. ‘‘இது மட்டுமல்ல; மிக முக்கியமாக, காது சரியாகக் கேட்காதவர்கள் படம் பார்த்து புரிந்துகொள்ள சப் டைட்டில் மிகமிக முக்கியம். மைண்ட் வாய்ஸ் வசனம் வந்தால் அவர்கள் புரிந்துகொள்ள உதட்டசைவுகூட இருக்காது.

சூப்பர் ஸ்டாருக்கு சப்-டைட்டில் செய்வது சிம்ம சொப்பனம் போன்றது. அவருடைய ஒவ்வொரு சொல்லையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து, அர்த்தம் புரிந்துகொண்டு உணர்வு மாறாமல் சரியான சொற்களை உபயோகிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு ‘கபாலிடா..’ வசனம். இதற்கான மொழிபெயர்ப்பை நான் ஆங்கி லத்தில் ‘Kabali I Say’ என்று போட்டிருந்தேன். ட்ரைலரில் இதைப் பார்த்துவிட்டு பலரும் என்னைப் பாராட்டினர். ‘சிவாஜி’ படத்தில் ‘ச்சும்மா அதிருதுல்ல’ என்ற வசனத்துக்கு ஆங்கிலத்தில் ‘Doesn’t the Earth Tremor and Quake’ என்று போட்டிருந்தேன். அப்போதுதான் அந்த கர்ஜனைக்கே முழுமையாக ஒரு மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

கபாலியில் இன்னொரு உத்தியையும் கையாண்டிருக்கிறோம். கதாபாத்திரங்களின் உணர்வுகளை அவசியமான சில இடங்களில் சப் டைட்டிலில் வெளிப்படுத்த ஸ்மைலி பயன் படுத்தியிருக்கிறோம். உதார ணத்துக்கு ஒரு கதாபாத்திரம் முகத்தைச் சுளிக்கிறது என்றால், அது அருவருப்பிலா, துர்நாற்றத்திலா, கோபத்திலா என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் வரும் ஸ்மைலிகள் போல செய்திருக்கிறோம். பாடல்களைக்கூட வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் ஒரு ஆங்கிலக் கவிதைபோல் அமைத்திருக் கிறோம். இவ்வாறு சப்-டைட்டில் பணிகளை பெருமிதத்தோடு கூறுகிறார் ரேக்ஸ்.

படத்தில் பொடி எழுத்தில் வரும் சப்-டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு விஷயங்களா! என்பது வியப்பை ஏற்படுத்து கிறது. தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் இந்த மறைமுக தொழிநுட்பக் கலைஞர் களுக்கு நன்றி. வாழ்க இவர்கள் பணி!

தமிழில்: ஆர்.சி.ஜெயந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x