Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

தமிழ்த்திரை 2013 நட்சத்திரங்கள் மின்னுவதும் மங்குவதும்

புதிய சிந்தனை, புதிய திரைமொழியோடு திறமையான இயக்குநர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இன்னும் திரைப்படம் இயக்குநரின் ஊடகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்பவை, முன்னணி நட்சத்திரங்களின் முதுகில் சவாரி செய்பவையாகவே இருக்கிறன. 2013ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்த்தால், மின்னிய நட்சத்திரங்கள், மின்னுவதுபோலத் தோற்றம் காட்டிய நட்சத்திரங்களின் செல்வாக்கு நிலையை, பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிவரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.

மாஸ் ஹீரோக்களைப் பொறுத்தவரை நடப்பாண்டில் ரஜினியின் கணக்கில் வரவு வைத்திருக்க வேண்டிய ‘கோச்சடையான்’ வெளியாகவில்லை. என்றாலும் ரஜினியின் எந்திரன் பட வசூல் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.

ஆனால் கொஞ்சமும் அசைத்துப் பார்க்க முடியாதபடி ஜம்மென்று அடுத்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் கமல் ஹாஸன். அலையாகப் புறப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து வெளியான கமலின் விஸ்வரூபம், ரசிகர்களை ஏமாற்றவில்லை. கதை, திரைக்கதை, படமாக்கல், தொழில்நுட்பம், இயக்கம், நடிப்பு என எல்லா வகையிலும் கமல் தனது ஆளுமையால் ரசிகர்களை வியக்க வைத்த படமாகவே விஸ்வரூபம் இருந்ததால், பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. விஸ்வரூபத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டுமே 30 கோடி. மற்ற தென்மாநிலங்கள், இந்திப் பதிப்பின் வசூல், வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து 85 கோடியை ஈட்டியிருக்கிறது. கமலை நடப்பாண்டின் ‘மேன் ஆஃப் த பாக்ஸ் ஆபீஸ்’ என்று சொல்லிவிடலாம். ஒரு பொழுதுபோக்கு படத்தின் ஊடாகக் கையாண்ட இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். கமலுக்கு அடுத்த நிலையில் நடப்பாண்டில் யார் செல்வாக்கு செலுத்தினார் என்பதுதான் விஜய் - அஜித் ரசிகர்களிடையே நிலவும் மில்லியன் டாலர் கேள்வி. சந்தேகமில்லால் அஜித் முன்னால் வந்து நிற்கிறார். அதற்குக் காரணம் ‘ஆரம்பம் ’ படத்தின் வசூல். தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 35 கோடி வசூல் செய்த ஆரம்பம், ஆந்திராவிலும் கணிசமாக வசூல் செய்தது, ஆரம்பம் படத்தின் மொத்த வசூல் 65 கோடி.

விஜயைப் பொருத்தவரை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தின் 80 கோடி ரூபாய் வசூல்தான் அவரது அண்மைய சாதனை. கடந்த 4 ஆண்டுகளில் விஜய்க்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. ஆனால் நடப்பாண்டில் அரசியல் வசனச் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சற்றுத் தாமதமாக வெளியான ‘தலைவா’ 50 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டில் 13 கோடிகளை மட்டுமே இது வசூல் செய்தது.

அஜித்துக்கு அடுத்த நிலையில் சூர்யாவின் சிங்கம் 2 படம் 60 கோடியை வசூலித்திருக்கிறது. இதனால் கமல், அஜித் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் சூர்யா ஒளிர்விட ஆரம்பித்திருக்கிறார்.

அஜித் - விஜய்க்கு இணையாக வியாபாரக் களத்தில் நின்ற சியான் விக்ரமுக்கு கடந்த ஆண்டில் தாண்டவம் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் ஹிந்தியில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்ட ‘டேவிட்’ படம் சில நாட்கள்கூடத் திரையரங்குகளில் இல்லை. தனது எல்லாச் சறுக்கல்களுக்கும் தீர்வாக அமையும் என்று ஷங்கரின் ’ஐ’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். ஷங்கரின் இயக்கமும், ஐ படக் கதாபாத்திரதுக்கான விக்ரமின் உழைப்பும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கின்றன.

விக்ரமுக்கு அடுத்த நிலையில் வந்த சிம்பு - தனுஷ் இருவரில், சிம்புவுக்குக் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘போடா போடி’ படத்துக்குப் பிறகு எந்தப் படமும் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் தற்போது பாண்டிராஜ், கௌதம் மேனன் என்று சுறுசுறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

தனுஷ் இந்திப்பட உலகில் அறிமுகமான ‘ராஞ்சனா’ 100 கோடி வசூலை அங்கே ஈட்டியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதே படம் தமிழில் அம்பிகாபதியாக வெளியாகி 8 கோடி மட்டுமே வசூல் செய்தது. மரியானில் தனுஷின் நடிப்பு விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் படம் வெற்றிபெறவில்லை. ‘நையாண்டி’ படமும் மோசமாகத் தோல்வியடைந்தது.

வசூல் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துகொள்ள வேண்டும் என்று துடித்துவந்த விஷாலின் தொடர் தோல்விக்கு ‘பாண்டிய நாடு’ முற்றுப்புள்ளி வைத்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் 40 கோடி. இதற்கு முன்பு வெளியான பட்டத்து யானை சுமார் என்று சொல்லப்பட்டாலும் 20 கோடியை வசூல் செய்திருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் மதகஜராஜா படம் 2014இல் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.

இதற்கிடையில் வழக்கமான ஹீரோயிசப் படங்களில் ஆர்வம் காட்டும் ஆர்யா, வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலும் ஆரம்பம் போன்ற மல்டி ஸ்டார் படங்களிலும் நடிக்கத் தயங்குவதில்லை. ஜெய் - நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’, 30 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்துக்கு முன்பு வெளியான சேட்டை தோல்விப் படம் என்றாலும் 20 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆர்யாவை வியாபாரத்தின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் உலகம் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில் அவரது அடுத்த நம்பிக்கை ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘புறம்போக்கு’.

ஜெயம் ரவியைப் பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா இயக்கத்தில் நடித்த ‘எங்கேயும் காதல்’ 20 கோடி வசூல் செய்ததோடு சரி. நடப்பாண்டில் வெளியான ஆதிபகவன் வெற்றி பெறவில்லை. பாக்ஸ் ஆபீஸில் தொடந்து ஆதிக்கம் செலுத்திவரும் ஹீரோக்களின் பட்டியலில் சசிகுமாரும் இந்த ஆண்டு இடம்பிடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விமல், விக்ரம் பிரபு ஆகிய வளரும் ஹீரோக்களின் சின்ன பட்ஜெட் படங்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், என அனைவரும் கொண்டாடும் படங்களாகியிருக்கின்றன.

(கட்டுரையில் கூறப்படும் தகவல்கள் திரையரங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களிலிருந்து திரட்டியவை)

இந்த ஆண்டின் நாயகிகள்

தமிழ்ப் பெண்ணா, கேரளப் பெண்ணா, இல்லை வடநாட்டு மாடல் அழகியா என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் போதும், 10 ஆண்டுகளைக் கடந்தும் எங்களால் வெற்றிக் கதாநாயகியாக நீடிக்க முடியும் என்று நிரூபித்தபடி தொடர்கிறார்கள் த்ரிஷாவும் நயன்தாராவும். த்ரிஷாவுக்கு மவுசு குறைந்துவிட்டது, அவர் தனது கல்யாணத்தைத் திட்டமிட்டுவருகிறார் என்று செய்திகள் வெளியான நேரத்தில், த்ரிஷா தன் மந்திரப் புன்னகையால் அவற்றை ஊதித் தள்ளிவிட்டார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் தன்னை விட வயதில் குறைந்த ஜீவாவின் காதலியாக நடித்த அவர், மென்மையான கதாபாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தினார். தோற்றத்தில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. சமரில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிலும் அவரது நடிப்பும் அழகும் பாராட்டப்பட்டன.

இன்னொரு வெற்றி நாயகியான நயன்தாராவைச் சர்ச்சைகள் சுழற்றியடித்தன. அவரும் ஓய்வுபெறுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நயன்தாராவின் வசீகரம், சர்ச்சைகளிலிருந்து அவரை விடுதலை செய்தது. இவரும் தன்னைவிட இளையவர்களான ஜெய், கோபிசந்த் ஆகியோருடன் நடிக்கிறார். தமிழில் அதிக ஊதியம் பெறும் நாயகி இவர்தான். இந்த ஆண்டு ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்கள்; இரண்டிலும் வெற்றி என்று தொடரும் இவரது பயணத்தின் அடுத்த மைல்கல் கமல் படமாக இருக்கலாம்.

ஹன்சிகாவின் குழந்தைத்தனமான தோற்றமும் அழகும் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில், அவர் நடிக்கும் படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அவர் கொண்டாடப்படுகிறார்.

காஜல் அகர்வால், அனுஷ்கா இருவருமே தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழில் இந்த ஆண்டு பின்தங்கி விட்டார்கள். வந்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காஜலுக்கு ‘அழகுராஜா’வும் அனுஷ்காவுக்கு ‘இரண்டாம் உலக’மும் நல்ல பெயரை வாங்கித்தரவில்லை.

இளம் கதாநாயகிகளான லட்சுமி மேனன், நஸ்ரியா இருவரும் நடிப்பத் திறமைகளாகவும், கவனமான படத் தேர்வுகளாலும் கவனிக்கவைத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x