Last Updated : 20 Dec, 2013 12:00 AM

 

Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

‘ஜில்லாவோட ட்ரீட் ரொம்ப ரொம்ப ஹாட்டு...’

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பொங்கல் நிஜமாகவே சர்க்கரைப் பொங்கல்தான். ஒரு பக்கம் ‘தல’ அஜீத்தின் ‘வீரம்’ படமும், மறுபக்கம் விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படமும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. இதில் ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிப்பதால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதே உற்சாகத்துடன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நேசன்.

இந்நிலையில் டி.இமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பற்றி நம்மிடம் உற்சாகமாகப் பேசினார் ‘ஜில்லா’ படத்தின் இயக்குநர் நேசன். அவர் கூறியதிலிருந்து:

இந்தப் படத்தில் விஜய் ஒரு மெலடி டூயட் பாடலைப் பாடுகிறார். ‘இந்தப் பாடலை நீங்கள்தான் எழுதித் தரவேண்டும்’ என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டோம். பொதுவாக அவர் ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டும் எழுதினால் அந்தப் படத்தின் மற்ற பாடல்களின் தொடர்ச்சி பாதிக்கப்படும் என்று எழுதமாட்டார். ஆனால் நாங்கள் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்துக்காக ஒரே ஒரு பாடலை எழுத ஒப்புக்கொண்டார். அப்படி அவர் எழுதிய பாடல்தான்

‘‘கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த சேல
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு….|
அந்த கண்ணுக்கு ஐந்து லட்சம் தார்றாண்டி..!’’

இந்தப் பாடலை ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து விஜய் பாடியிருக்கிறார். ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு மோகன்லால் விஜய்யை கட்டிப் பிடித்து பாராட்டினார்.

விஜய்யின் பெரும்பாலான ஹிட் பாடல்களை சங்கர் மஹாதேவன் பாடியிருப்பார். அதுபோல் மோகன்லாலுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் படத்தின் ஓபனிங் சாங்கை பாடியிருக்கிறார்கள். யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல்

‘‘பாட்டு ஒண்ணு கட்டு கட்டு தோதா
நீ கால கைய தட்டு தட்டு ஜோரா…!’’
என்று தொடங்குகிறது.

பொள்ளாச்சியில் நடந்த இந்தப்பாடலின் படப்பிடிப்பின்போது பத்தாயிரத்துக்குக்கும் மேற்பட்டவர்கள் கூடிவிட்டார்கள். மிகப் புதுமையான முறையில் இந்தப் பாடலை படமாக்கியிருக்கிறோம்.

அடுத்த பாடலை விவேகா எழுதியுள்ளார். இதில்

‘‘ஜிங்கனமணி ஜிங்கனமனி
சிரிச்சிப்புட்டா நெஞ்சில ஆணி..!’’

என்ற பாடல் மிகவும் கலகலப்பான பாடல். புகழ்பெற்ற நடனக் கலைஞர் ஸ்கார்லெட் ஆடியுள்ள இந்தப் பாடலை ஐதராபாதில் படம் பிடித்துள்ளோம். இந்தப் பாடலை சுனிதா ஜவ்கான் பாடினார். ஹைபிச்சில் உள்ள இந்தப் பாடல், ரசிகர்களை ஆட வைக்கும் பாடலாக இருக்கும்.

“எப்போ மாமா ட்ரீட்…
எப்போ மாமா ட்ரீட்…
ஜில்லாவோட ட்ரீட் ரொம்ப ரொம்ப ஹாட்டு…!’’

இப்படி ஒரு பாடலையும் விவேகா எழுதியுள்ளார். மூன்று பல்லவிகள் தொடரும் வகையில் இமான் இசையமைத்துள்ளார். கேட்கவே வித்தியாசமாக இசைக் கோர்வையில் இருக்கும்.

மூத்த கவிஞர்களுக்கு மத்தியில் அறிமுகக் கவிஞரான பார்வதி ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

அவருக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும். தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொட்டியிருக்கிறார்.

‘‘வெறசா போகையிலே…
புதுசா போறவளே…!’’

என்று வரிகள் தொடங்கும் இந்தப் பாடல் அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும். இந்தப்பாடலை சென்னையில் படம்பிடித்தோம். இசையமைப்பாளர் டி.இமான், பூஜா, ரஞ்சித் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இதோடு ஒரு தீம் பாடலும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x