Last Updated : 19 Dec, 2015 03:26 PM

 

Published : 19 Dec 2015 03:26 PM
Last Updated : 19 Dec 2015 03:26 PM

சென்னை வெள்ள பாதிப்பு: தாரை தப்பட்டை இசை வெளியீட்டு விழா ரத்து

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை முன்னிறுத்தி 'தாரை தப்பட்டை' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இளையராஜா இசையமைப்பில் வெளிவரும் 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது. இவ்விழாவின் ஒளிபரப்பு உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியது.

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் மீண்டு வருகிறார்கள். இதனால், 'தாரை தப்பட்டை' படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்திருக்கிறது. அதுமட்டுமன்றி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நிவாரணப் பொருட்களும் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், விழா நடத்தவும் சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், 'தாரை தப்பட்டை' படக்குழு படத்தின் இசையை நேரடியாக கடைகளிலேயே வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x