Last Updated : 21 Sep, 2016 03:09 PM

 

Published : 21 Sep 2016 03:09 PM
Last Updated : 21 Sep 2016 03:09 PM

காஞ்சிவரம் வலியைப் போக்கியது சில சமயங்களில்- பிரகாஷ்ராஜ் உருக்கம்

'காஞ்சிவரம்' தேர்வாகாத போது அழுதிருக்கிறேன் என்று 'சில சமயங்களில்' பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டார்.

பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சில சமயங்களில்'. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா தயாரித்திருக்கிறார்கள்.

தற்போது இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கான உலகளாவிய திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. இதன் திரையிடல் அக்டோபர் 6ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கோல்டன் குளோப் திரையிடலுக்கு தேர்வாகி இருப்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இச்சந்திப்பில் பிரகாஷ்ராஜ் பேசியது, "'சில சமயங்களில்' படத்தில் நடிப்பை பற்றி பேச வேண்டாம். இது முழுக்க ப்ரியதர்ஷனின் படம். உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தமிழ் மண்ணிலிருந்து ஒரு படம் 'சில சமயங்களில்'. இப்படிப்பட்ட ஒரு படம் நடைபெற வேண்டும் என்றால் அது பணத்தால் நடக்காது. அதற்கு பசி, உத்வேகம், நம்பிக்கை, லட்சியம் அனைத்துமே வேண்டும். இதெல்லாமே ப்ரியதர்ஷனுக்குள் இருக்கிறது.

நான் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்திருக்கிறேன். கலைத்துறையில் ஒரு நடிகனாகி, தயாரிப்பாளராகி, இயக்குநராகி நிறைய பெயர், புகழ் எல்லாமே வரும். ஆனால், நமக்கு பெருமைச் சேர்த்த இந்த துறைக்கு பெருமை சேர்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது தான் 'சில சமயங்களில்'.

'காஞ்சிவரம்' கதையை என்னிடம் ப்ரியதர்ஷன் சார் சொல்லிவிட்டு, "நீ நடித்தால் இந்த படத்தை எடுக்கிறேன். நீ இல்லையென்றால் அந்த கதாபாத்திரத்துக்கான நடிகை தேடிக் கொண்டே இருப்பேன்" என்றார். இந்தக் கதையை எப்படி வயிற்றுக்குள் இவ்வளவு நாள் வைத்திருந்தீர்கள் எனக் கேட்டு நடித்தேன். ப்ரியதர்ஷன் வெறும் அனுபவம் வாய்ந்த இயக்குநர் மட்டுமல்ல. 'காஞ்சிவரம்', 'சில சமயங்களில்' படங்கள் எல்லாம் பண்ணும் போது உள்ளத்தில் அவர் எப்படிபட்டவர் என்பது தெரிகிறது.

ஒவ்வொரு காட்சியையும் அவர் செதுக்கும் போது, அவருக்குள் இருந்த பசி, ஆழமான ஞானம், உத்வேகம் அனைத்துமே எங்களுக்குள் வந்துக் கொண்டே இருக்கும். உலக சினிமா தரத்துக்கு இருந்த படம் 'காஞ்சிவரம்'. தேசிய விருது கிடைத்தது, இந்தியளவில் சிறந்த படமாக தேர்வானதை எல்லாம் தாண்டி நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. பல விழாக்களில் கலந்து கொண்ட படங்களை விட, 'காஞ்சிவரம்' படத்தை சிறந்த படமென்று பேசினார்கள். ஆனால், ஆஸ்கருக்கு போகும் போது, நம் முன்பு பெயர் எடுக்காத ஒரு படம் அங்கு வரும் போது அழுதிருக்கிறேன். ஏனென்றால் ப்ரியதர்ஷன் அங்கு போக வேண்டியவர். அந்த வலியை இந்த 'சில சமயங்களில்' படம் பூர்த்தி செய்தது. அதற்கு இத்தனை வருட தவம் தேவைப்பட்டது.

கோல்டன் குளோப் விழாவில் போட்டியிடுவதற்கான தகுதியை பெற்றிருக்கிறது. அங்கு வெவ்வேறு மொழியைச் சேர்ந்த 10 படங்கள் போட்டியில் இருக்கும். அதில் 5 படங்களைத் தேர்வு செய்து நவம்பரில் அறிவிப்பார்கள். ஜனவரியில் கோல்டன் குளோப் விருது அறிவிப்பார்கள். அதற்குப் பிறகு ஆஸ்கர் விருதுக்கு எளிதாக போய்விடலாம்.

சினிமா என்பது ஒரு மொழி. உலகத்தின் ஒரு மேடையிலிருந்து திரும்பிப் பார்க்கும் போது அதில் ஒரு தமிழ் படமாக இந்தப் படம் அமைத்திருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது." என்று தெரிவித்தார் பிரகாஷ்ராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x