Last Updated : 19 Apr, 2016 03:25 PM

 

Published : 19 Apr 2016 03:25 PM
Last Updated : 19 Apr 2016 03:25 PM

கமல் இல்லாவிட்டால் நான் இல்லை: இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சி

'முள்ளும் மலரும்' படத்தின் வெற்றிக்கு உதவி புரிந்தவர் கமல்ஹாசன் என்று இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ரன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வாகா'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை விஜய் பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் இப்படத்தின் இசையை வெளியிட்டார்.

இவ்விழாவில் இயக்குநர் மகேந்திரன் பேசியது "இந்த மேடையில் நான் நின்று பேசுவதற்கு காரணம் கமல்ஹாசன் தான். இந்த உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இல்லை என்றால் நான் இன்று இங்கு நின்றிருக்க மாட்டேன், இயக்குநராகவும் இருந்திருக்க மாட்டேன்.

நான் சினிமாவுக்குள் வர பல காரணங்கள் இருக்கலாம். மற்றவர்களைப் போல விரும்பி வந்தவன் கிடையாது. இழுத்து வரப்பட்டவன். என் முதல் படம் இயக்கத்திற்கு முன்பு பல படங்களுக்கு கதை - வசனம் எழுதியிருக்கிறேன். அதில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். நல்ல சினிமாக்களைப் பற்றி இருவரும் நிறைய பேசுவோம். எனக்கு ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமா மீது பெரும் வெறுப்பு. இயக்குநராக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட போது 'முள்ளும் மலரும்' எனது முதல் படம். அதை நான் ஆசைப்பட்டது போல எடுக்க வேண்டும் என நினைத்தேன்.

என்னோட நினைப்புக்கு ஏற்ற ஒளிப்பதிவாளர் கிடைக்கவில்லை. அதை நான் கமல் சாரிடம் போய் சொன்னேன். அவர் தான் பாலு மகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இருவரும் இணைந்து பணியாற்றினோம். இன்றும் 'முள்ளும் மலரும்' பற்றி பேசுவதற்கு கமல் தான் காரணம். நான் காரணமல்ல.

அப்படத்தின் தயாரிப்பாளருக்கும், பாலு மகேந்திராவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அப்படத்துக்கு தேவையான மிக முக்கியமான ஒரு காட்சியை எடுக்காமலேயே விட்டிருந்தேன். தயாரிப்பாளர் அப்போது படத்தைப் பார்த்துவிட்டு வசனமே இல்லை என்று என்னை திட்டினார். என் மீது பயங்கர கோபம். அந்த கோபத்தால் முக்கியமான காட்சியை காட்சிப்படுத்த பணம் தரமாட்டேன் என்றார். "செந்தாழம் பூவில்" பாடலுக்கு முன்பு உள்ள காட்சி அது. அக்காட்சியும் வேண்டாம், பாடலும் வேண்டாம் தூக்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார்.

ஆழ்வார்பேட்டைக்கு சென்று கமலிடம் "ஏன் இயக்குநரானோம் என்று இருக்கிறது" என புலம்பினேன். ஆனால் உதவி பண்ணுங்கள் என நான் கேட்கவில்லை. என் மீது இருந்த நம்பிக்கையில், தயாரிப்பாளரிடம் சென்று பேசினார். முக்கியமான காட்சி என்கிறார், வீம்பு பிடிக்காதீர்கள், நல்ல பையன் என்று தயாரிப்பாளரிடம் கூறினார். தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடன் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டு சத்யா ஸ்டுடியோவில் தனது பணத்தைப் போட்டு அக்காட்சியை எடுக்க காரணமாக இருந்தார்.

அன்று மட்டும் கமல் உதவி செய்யவில்லை என்றால், 'முள்ளும் மலரும்' இல்லை. அதனைத் தொடர்ந்து 'உதரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என எதுவும் இருந்திருக்காது. என் வாழ்நாள் முடியும்வரை நான் கமலை மறக்க மாட்டேன். எனக்கு கிடைக்கும் பாராட்டு அனைத்திற்கு மூலதனமே கமல் தான்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x